மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செய்திகள்

கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

கேரளம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான செய்திகள் தினமணி இணையத்தில் நேரலையில்...

கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

கேரளம் வாக்குப்பதிவு நேரலை நிலவரம் - DIN

Updated On :9 ஏப்ரல் 2026, 7:09 pm
1:34 am, 9 ஏப்ரல் 2026

கேரளத்தில் இன்று வாக்குப் பதிவு

கேரள மாநிலத்திற்கு இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2.71 கோடியாகும் (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 273).

1:38 am, 9 ஏப்ரல் 2026

140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு

கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர்.

1:45 am, 9 ஏப்ரல் 2026

முக்கிய வேட்பாளர்களின் தொகுதிகள்

முதல்வர் பினராயி விஜயன் (தர்மடம் தொகுதி), காங்கிரஸை சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் (பரவூர் தொகுதி), மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் (நேமம் தொகுதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர்.

1:46 am, 9 ஏப்ரல் 2026

வாக்காளர்கள் அமர இருக்கைகள்

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கோடை காலத்தையொட்டி வாக்குப் பதிவு நடைபெறுவதால், கேரள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2:48 am, 9 ஏப்ரல் 2026

பெண்கள், இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு:

''2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்திரளான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளத்தின் ஜனநாயக உணர்விற்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்'' என பிரதமர் பதிவிட்டுள்ளார்.

2:50 am, 9 ஏப்ரல் 2026

வரிசையில் காத்திருந்து வாக்களித்த மோகன் லால்!

திருவனந்தபுரம், மூடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டி, வாக்கு செலுத்தினார். அதே வாக்குச்சாவடியில் நடிகர் மோகன் லால் வாக்கு செலுத்தினார்.

வரிசையில் காத்திருக்கும் மோகன்லால்

வரிசையில் காத்திருக்கும் மோகன்லால் - ஏஎன்ஐ

2:51 am, 9 ஏப்ரல் 2026

வாக்களித்தார் சுரேஷ் கோபி

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குருவாயூர் தெற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

3:06 am, 9 ஏப்ரல் 2026

வாக்களித்தார் பினராயி விஜயன்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் பினராயி விஜயன் கன்னூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். கன்னூர் தொகுதியில் உள்ள ஆர்.சி. அமலா ஆரம்பப் பள்ளியில் வாக்களித்தார்.

இதேபோன்று திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திர சேகர் வாக்களித்தார்.

election

வாக்களித்த பினராயி விஜயன் - ஏஎன்ஐ

4:07 am, 9 ஏப்ரல் 2026

100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெறும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் வேட்பாளருமான வி.டி. சதீஷன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் பேசிய வி.டி. சதீஷன்,

''பிரசாரத்தில் கூறியதைப்போலவே ஐக்கிய ஜனநாயக முன்னணி, 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஒரு காலத்தில் எங்களுக்கு ஒரு சிறிய பெரும்பான்மையைக்கூட வழங்கத் தயங்கியவர்கள், இப்போது தங்கள் மனதை மாற்றிக்கொண்டுள்ளனர். ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

வாக்களித்த வி.டி. சதீசன்

வாக்களித்த வி.டி. சதீசன்

4:08 am, 9 ஏப்ரல் 2026

வாக்களித்த காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்

பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வி.டி. சதீஷன், கேசரி அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.

4:09 am, 9 ஏப்ரல் 2026

பொய் பிரசாரத்தால் வீழ்த்த முடியாது

பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது என்று கேரள முதல்வர் பினராயில் விஜயன் தெரிவித்தார்.

பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது. நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம்; மக்களும் எங்களை நம்புகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் மக்களுடன் இணைந்து பயணித்து வருகிறோம். அந்தப் பயணம் தொடர வேண்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். மதவாதப் பிரச்சாரத்தால் எங்களை வீழ்த்த முடியாது

4:19 am, 9 ஏப்ரல் 2026

9 மணி நிலவரம் - 16.23% வாக்குப்பதிவு

கேரளத்திற்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி, 16.23 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 17.41 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 17.87 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

4:44 am, 9 ஏப்ரல் 2026

கேரளமே வெளியே வாருங்கள் : ராகுல்

கேரள மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:

''கேரளமே வெளியே வாருங்கள், மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும், அக்கறை கொள்ளும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஓர் அரசுக்காக வாக்களியுங்கள். ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள். நீதிக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் வாக்களியுங்கள்'' என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

4:56 am, 9 ஏப்ரல் 2026

வாக்களித்த அரசியல் தலைவர்கள்

பி.ஏ. பேபி

திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஏ. பேபி வாக்கு செலுத்தினார்.

ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வாக்களித்தார்.

ஜார்ஜ் குரியன்

மத்திய இணை அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கஞ்சிரபள்ளி வேட்பாளருமான ஜார்ஜ் குரியன் கோட்டையம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.

ரமேஷ் பிஷாரடி

ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ரமேஷ் பிஷாரடி பாலக்காடு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

4:56 am, 9 ஏப்ரல் 2026

100 இடங்களுக்கு மேல் வெற்றி உறுதி

வி.டி. சதீஷன்

பரவூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் கேரள எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி. சதீஷன் எர்ணாகுளத்தில் உள்ள கேசரி அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் வாக்கு செலுத்தினார். ''ஐக்கிய ஜனநாயக முன்னணி 100 இடக்களுக்கு மேல் வெற்றி பெறும் என நம்பிக்கை'' தெரிவித்தார்.

பி.ஏ. முகமது ரியாஸ்

இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் பி.ஏ. முகமது ரியாஸ் கோழிக்கோடு மாவட்டத்தின் பேப்பூர் தொகுதியில் வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ''இடது ஜனநாயக முன்னணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனக் கூறினார். பெண்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிட்டார்.

5:20 am, 9 ஏப்ரல் 2026

பினராயி ஆட்சியால் சலிப்பு

பினராயி விஜயன் ஆட்சியால் மக்கள் சலிப்படைந்துவிட்டதாகவும், இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

அம்பலபுழாவில் வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:

''கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் முதல்வராகத் தொடர்வதால், மக்கள் சலிப்படைந்துவிட்டனர். மக்கள் விரோதப் போக்கைக் கொண்ட, ஆணவம் மிகுந்த இந்த முதல்வர் மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டுமா? என்பதே இத்தேர்தலில் மக்கள் முன் உள்ள கேள்வி.

ஐயப்பனின் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் குற்றவாளியையும், இக்குற்ற வழக்கையும் மூடிமறைக்க முயன்று வருகிறது. தங்கக் கொள்ளைக் குற்றவாளிகளுக்குத் துணை நின்ற ஒரு அரசாங்கம் தங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் நினைக்கின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.

Live blog image
5:35 am, 9 ஏப்ரல் 2026

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தேர்தல்

நடிகரும் திரைக்கதை ஆசிரியருமான ரெஞ்சி பணிக்கர் எர்ணாகுளம் தொகுதியில் வாகு செலுத்தினார்.

தேர்தல்கள் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா. அரசியலை விரும்புபவர்களோ அல்லது விரும்பாதவர்களோ, அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ரெஞ்சி பணிக்கர்

ரெஞ்சி பணிக்கர் - ஏஎன்ஐ

5:46 am, 9 ஏப்ரல் 2026

வாக்களித்த காங். மூத்த தலைவர்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி, திருவனந்தபுரத்தில் உள்ள ஜகதி வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். கேரள காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம். எம். ஹாசன் உடன் இருந்தார்.

5:50 am, 9 ஏப்ரல் 2026

11 மணி நிலவரம்: 32.60% வாக்குப்பதிவு

கேரளத்தில் காலை 11 மணி நிலவரப்படி 32.60% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அஸ்ஸாமில் 37.98% வாக்குகள் பதிவாகியுள்ளன.

6:06 am, 9 ஏப்ரல் 2026

வெய்யிலா? வாக்குரிமையா?

கேரளத்தில் இன்று பெரும்பாலான பகுதிகளில் 33 டிகிரி செல்சியஸ் அளவில்தான் வெய்யில் இருக்கும் என வானிலை தெரிவித்துள்ளது. எனவே, வாக்குப்பதிவு செய்ய வரும் வாக்காளர்களுக்கு வருத்தங்கள் ஏற்படாது.

140 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் 2.71 கோடி வாக்காளர்கள் இன்று வெய்யிலை பொருட்படுத்தாமல் வெளியே வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் உள்பட 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

6:21 am, 9 ஏப்ரல் 2026

அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

கேரளம் முழுவதும் இன்று அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

6:40 am, 9 ஏப்ரல் 2026

கேரள மருத்துவமனைகளை கைப்பற்றும் வெளிநாட்டுப் நிறுவனங்கள்! மக்களின் நிலை?

கேரளத்தின் தனியார் மருத்துவமனைகள் வெளிநாட்டுப் பங்கு மூலதன நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டு வருவதால், லாபமே முதன்மை நோக்கமாக மாறி, நோயாளிகள் மற்றும் அவர்களுக்காக செலவிடும் உறவுகளின் நிதிநிலை கவலைக்குரியதாக மாறி வருகிறது.

6:58 am, 9 ஏப்ரல் 2026

வாக்களித்தார் சசி தரூர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.

7:56 am, 9 ஏப்ரல் 2026

ஹாட்ரிக் அடிப்பாரா பினராயி? இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை!

கேரள சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கேரளத்தில் இதுவரை நடக்காத சாதனையாக ஹாட்டிக் அடிப்பாரா பினராயி விஜயன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

9:38 am, 9 ஏப்ரல் 2026

மதியம் ஒரு மணி வரை 49% வாக்குப்பதிவு 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மதியம் 1 மணி வரை 49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

முக்கிய தலைவர்களும் குடும்பத்துடன் வந்து வாக்களித்துச் செல்கிறார்கள். பொதுவாக வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.

9:48 am, 9 ஏப்ரல் 2026

கேரளத்தில் பாஜக பொருட்டே அல்ல..

கேரளத்தில் பாஜக ஒரு பொருட்டே அல்ல. சட்டப்பேரவையில் பாஜகவுக்கு ஓர் இடம்கூட இல்லாத ஒரு மாநிலம் கேரளம். எனவே, அவர்களை முக்கிய கட்சி என்று கூறிக் கொள்வதே ஒரு மிகையான பாராட்டுதான். இந்த தேர்தல் ஆளுங்கட்சியான இடது ஜனநாயக முன்னணிக்கும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான போட்டி மட்டுமே என்று சசி தரூர் கூறியிருக்கிறார்.

10:09 am, 9 ஏப்ரல் 2026

கேரளத்தில் 62.71% வாக்குப்பதிவு

கேரளத்தில் பிற்பகல் 3 மணி வரை 62.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

11:19 am, 9 ஏப்ரல் 2026

பாஜக - காங்கிரஸ் இடையே தள்ளுமுள்ளு

கேரள மாநிலத்தின் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாகக் கூறி பாஜக - காங்கிரஸ் இடையே தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடந்துள்ளன.

12:37 pm, 9 ஏப்ரல் 2026

கேரளத்தில் திருமணக் கோலத்தில் வாக்களித்த மணமக்கள்!

கேரளத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் மணமக்கள் இருவர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

2:27 pm, 9 ஏப்ரல் 2026

கேரளத்தில் 77.82% வாக்குப்பதிவு

கேரளத்தில் 77.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.