மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாறவேண்டும் மனநிலை!

உறுப்புதானம் குறித்த நமது மனநிலையில் மாற்றம் வேண்டும்...

News image

உறுப்பு தானம் வழங்கிய கொடையாளா்கள்.

Updated On :5 மார்ச் 2026, 12:50 am

மனித இன வரலாற்றில் தனது பெயரைப் பொறித்து வைக்க நீண்டநாள் உலகில் வாழ வேண்டிய அவசியமில்லை என்று இரண்டு சிறுமிகள் உணர்த்தி இருக்கிறார்கள். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பத்து மாதக் குழந்தை ஆலின் ஷெரீன் ஆப்ரஹாமும், கோவையைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி வெண்பாவும்தான் அவர்கள். இறந்தும் வாழ்வது என்பதற்கு இலக்கணம் படைத்திருக்கிறார்கள் அவர்கள்.

பத்து மாதப் பெண் குழந்தை ஆலின் ஷெரீன் ஆப்ரஹாம் சாலை விபத்தில் காயமடைந்ததில் சிகிச்சை பலனளிக்காமல் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. குழந்தையின் தந்தை அருண் ஆப்ரஹாமும் அவரது மனைவி ஆன் ஜானும் அடைந்த மன வேதனையும் துயரமும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.

மூளைச்சாவைத் தொடர்ந்து, மருத்துவமனையில் "கோமா' நிலையில் குழந்தை வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, தனது பெயர்த்தியைப் பார்த்துவிட்டு சோகத்துடன் ரயிலில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தாத்தா ரெஜி சாமுவேல் தன்னை தேற்றிக்கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கத் தலைப்பட்டார்.

""நமது குழந்தையின் உறுப்புகளை தானமாகக் கொடுத்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களைக் காப்பாற்றுவோம்'' என்று அவர் சொன்னபோது, அதை அவரது மகன் அருண் ஆப்ரஹாமும், மருமகள் ஆன் ஜானும் வேத வாக்காகக் கருதி ஆமோதித்தார்கள். கேரள மாநிலத்தில் மிகக் குறைந்த வயதில் உறுப்புதானம் வழங்கிய ஆலின் ஷெரீன் ஆப்ரஹாம் அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்பட்டார்; முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று பெற்றோருக்கு நன்றி தெரிவித்து, ஆறுதல் அளித்தார். ஒட்டுமொத்த மலையாள ஊடகங்களும் அடுத்த இரண்டு நாள்களுக்கு இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்து உறுப்புதானம் குறித்த பரவலான விழிப்புணர்வுக்கு வழிகோலின.

அது நடந்து பத்து நாள்களுக்குப் பிறகு, நமது தமிழ்நாட்டில் கோவை தெலுங்கு பாளையம் ராமசாமி கவுண்டர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 8 வயது மாணவி வெண்பாவுக்கு அதேபோல மூளைச்சாவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அதன் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது பெற்றோர் சந்தோஷ்}சுகன்யாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். வெண்பா அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடையாளிகள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது என்பதை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2023-இல் அறிவித்தது. அதனடிப்படையில் இதுவரையில் 653 பேரின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தென்னிந்திய மாநிலங்கள் உறுப்பு தானத்தில் முன்னிலை வகிக்கின்றன என்றால், தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம் பெறுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, நமது மக்கள்தொகைக்கு ஏற்ப உறுப்புதானம் பரவலான வரவேற்பைப் பெறவில்லை என்றுதான் கூறவேண்டும். கண் தானம் வழங்குதல் குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுபோல, உறுப்பு தானம் வரவேற்புப் பெறாமல் இருப்பதை வேதனையுடன் குறிப்பிடத் தோன்றுகிறது. உறுப்பு தானத்திலேயேகூட, உயிரோடு இருப்பவர்கள் தங்களது சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாகக் கொடுப்பதுதான் அதிகமே தவிர, இறந்த உடல்களையோ, மூளைச்சாவு ஏற்பட்ட உடல்களையோ தானமாகக் கொடுப்பது மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

உறவினர்களுக்காக தங்களது ஒரு சிறுநீரகத்தை அல்லது கல்லீரலின் பாகத்தைக் கொடுப்பவர்கள்தான் 85% கொடையாளிகள்; அவர்களிலும் ஏறத்தாழ 90% உறவினர்கள். அப்படி இருந்தும்கூட போதிய அளவில் உறுப்புகள் கிடைப்பதில்லை. இந்தியாவில் மாற்று சிகிச்சைக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன என்றால், உறவினர்கள் அல்லது உயிரோடு இருப்பவர்கள் மூலம் பெறப்படும் சிறுநீரகங்கள் வெறும் 12,500 மட்டுமே. இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை வழங்க முற்படுபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

இந்தியாவில் இரண்டு மாநிலங்களைத் தவிர ஏனைய எல்லா மாநிலங்களும் திருத்தப்பட்ட மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சிகிச்சைச் சட்டம் 2011}ஐ அமல் படுத்தி இருக்கின்றன. அப்படி இருந்தும்கூட 10 லட்சம் பேருக்கு வெறும் 0.85 என்கிற அளவில்தான் உறுப்புதான விகிதம் காணப்படுகிறது.

உலகிலேயே மிகக் குறைவான உறுப்புதான விகிதம் காணப்படும் நாடுகளில் நாமும் இருக்கிறோம். மாற்று சிகிச்சைகளுக்கு உறுப்புகள் தானமாகக் கிடைக்காததால் ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

மறைந்துவிட்டவர்களின் உறுப்புகளைத் தானம் செய்வது என்பது சமய நம்பிக்கைப் படியும், உணர்வு ரீதியாகவும் இன்னும் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாமல் தொடர்கிறது. உறுப்புதானம் செய்பவர்களில் 80% பெண்கள் என்பதும் உறுப்புகளைப் பெறுபவர்களில் 80% ஆண்கள் என்பதும் நமது சமூகக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றன.

ஆலின் ஷெரீன் ஆப்ரஹாமும், வெண்பாவும் உறுப்புதானம் குறித்த நமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.