எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத 17-ஆவது தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமையுமா, அப்படி அமைந்தாலும் அந்த ஆட்சி அவைத் தலைவர் தேர்வு, நம்பிக்கைத் தீர்மானம் ஆகியவற்றில் வெற்றிபெற்று நிலைக்குமா என்றெல்லாம் எழுப்பப்பட்ட அத்தனைக் கேள்விகளுக்கும் இப்போது விடை தரப்பட்டிருக்கிறது. எந்தவித எதிர்ப்போ, சலசலப்போ இல்லாமல் மிகவும் சுமுகமாக ஆளுநர் உரையுடன் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியிருக்கிறது.
234 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் 108 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற சி.ஜோசப் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கட்சியின் தொடக்க விழாவிலேயே கூட்டணி ஆட்சியை முன்மொழிந்தது என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது. அதனால், வெளியில் இருந்து ஆதரவு தர முன்வந்த கட்சிகளை, அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பதிலும், அரசின் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதிலும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிரமம் இருக்கவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்திருப்பதும், அமமுக உறுப்பினர் ஆதரவு தெரிவித்திருப்பதும், இடதுசாரிக் கட்சிகளின் நான்கு உறுப்பினர்களும் முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக இருப்பதும், தவெக கூட்டணி அரசின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கின்றன. போதாக்குறைக்கு எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருப்பதுடன், இன்னொரு தேர்தலுக்கு அவர்கள் தயாராக இல்லை என்பதும் அரசின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக முந்தைய திமுக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே காணப்பட்ட மோதல் போக்கால், நிர்வாகம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஆளுநர் மாளிகை-புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடையேயான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி விழுந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரும், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரும் கலந்து பேசி, மிகவும் சுமுகமாக 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்க வழிகோலி இருக்கிறார்கள். ஆளுநர் அவைக்கு வந்ததும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதும், ஆளுநர் உரை முடிந்து அவர் வெளியேறும்போது மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பதும் மிகவும் கச்சிதமான முடிவு.
அண்ணா முதல்வராக இருந்த வரை, "வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு... வந்தே மாதரம்... வந்தே மாதரம்...'' என்கிற மகாகவி பாரதியாரின் பாடல்தான் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்துக்கு முன்பாக இசைக்கப்பட்டு வந்தது.
அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து முதல்வரான கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தில்"திராவிடம்' வரவேண்டும் என்பதற்காக மனோன்மணீயம் சுந்தரனாரின் "நீராருங் கடலுடுத்த...' பாடலில் சில திருத்தங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். 1970 நவம்பர் 23-ஆம் தேதி அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2021 டிசம்பர் 17-இல் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில்தான் அதிகாரபூர்வமாக "நீராருங் கடலுடுத்த' பாடல் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என்கிற அங்கீகாரம் பெற்றது.
எல்லா நாடுகளிலும் கூட்டங்கள் இறைவணக்கத்துடன் தொடங்கி, மாநில வாழ்த்தும் அதற்குப் பிறகு தேசிய கீதமும் இசைக்கப்பட்டு கலைவது என்பதுதான் வழக்கம். பிரிட்டனில் இரண்டு அவைகளும் சில நிமிஷங்கள் பிரார்த்தனைக்குப் பிறகுதான் அன்றாடம் கூடுகின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இறைவணக்கம் வேண்டாம் என்று மதச்சார்பற்ற நாட்டில் தீர்மானிப்பதில் தவறில்லை.
இந்திய நாடாளுமன்றத்தில் அன்றாடம் அவை கூடும்போது தேசிய கீதமான 'ஜன கண மன'வும், அவை கலையும்போது தேசியப் பாடலான 'வந்தே மாதரமும்' இசைக்கப்படுகின்றன. மாநிலங்களில் மாநில வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகின்றன.
இப்போதைய ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள் பதவி ஏற்பில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டதை, தமிழுக்கும், தமிழகத்துக்கும் இழைக்கப்பட்ட அநீதியாக திமுகவும், ஏனைய எதிர்க்கட்சிகளும் சித்தரித்தன. அதை மாநில உரிமைக்கு இழைக்கப்படும் அநீதியாக அவர்கள் கருதியதில் தவறு காண முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் சரியானதும்கூட. பாரதியாரின் பரிந்துரையும் அதுதான்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது முதல்வர் ஜோசப் விஜய் அரசின் முதல் வெற்றி என்றால், உரை எந்தவிதத் திருத்தமும் இல்லாமல் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரால் முழுமையாக வாசிக்கப்பட்டதும், அதை அவை அமைதியாகக் கேட்டதும் அடுத்த வெற்றி. ஆளுநர் உரையில் கூறப்பட்ட கருத்துகள் குறித்து விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், நூலிழைப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் கூட்டணி அரசு, தனது முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் வெற்றிகரமாகத் தொடங்கி இருக்கிறது என்பது அரசியல் சாதுர்யத்தின் அடையாளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








