யாருக்கென்ன கவலை?
மாநில அரசுகளின் தொலைதூரப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது மட்டுமல்ல, அவற்றின் நம்பகத்தன்மை, வசதி, வாகனங்களின் தரம், தேவைக்கேற்ற எண்ணிக்கை என அனைத்துமே பாராட்டும்படியாக இல்லை.


மாநில அரசுகளின் தொலைதூரப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது மட்டுமல்ல, அவற்றின் நம்பகத்தன்மை, வசதி, வாகனங்களின் தரம், தேவைக்கேற்ற எண்ணிக்கை என அனைத்துமே பாராட்டும்படியாக இல்லை. தனியார் "ஆம்னி பஸ்கள்', அரசுப் போக்குவரத்தின் பலவீனங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, இன்றியமையாத போக்குவரத்துச் சாதனமாக மாறிவிட்டிருக்கின்றன.
அவற்றில் பல நேரடியாகவும், மறைமுகமாகவும் (பினாமி) அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் ஆசியுடன் இயங்குவதால்தான், அசுர வளர்ச்சி அடைந்திருப்பது ஆச்சரியப்படுத்துவதில்லை. ஆம்னி பஸ்களின் பயண வசதிகள் பயணிகளைத் திருப்திப்படுத்துவதாக இருந்தாலும், அவற்றின் தரமும், வேகமும், கட்டணமும் கொள்ளை லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் விதத்தில் அமைகின்றன.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தொலைதூர ஆம்னி பஸ் சேவை என்பது தவிர்க்க முடியாததாகி விட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் பண்டிகைக்கால, விடுமுறைக்கால பயணிகளின் தேவையை எதிர்கொள்ள முடியாத நிலையில், பல மடங்கு அதிகரித்த கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் சேவைதான் தொலைதூரப் பயணிகளுக்குக் கை கொடுக்கின்றன. அதையே தங்களுக்குச் சாதகமாக்கி, பயணிகளின் பாதுகாப்பைப் பின்னுக்குத் தள்ளி லாபமீட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முற்படுவதன் விளைவுதான், அவ்வப்போது நிகழும் நெடுஞ்சாலை விபத்துகள்.அக்டோபர் 20-ஆம் தேதி தெலங்கானா தலைநகர் ஹைதராபாதிலிருந்து, ஆந்திர மாநிலம் கர்னூலுக்குச் சென்று கொண்டிருந்த தூங்கும் வசதிகளுடன் கூடிய ஆம்னி பஸ் இருசக்கர வாகனத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில், பஸ் தீப்பிடித்து 20 பேர் கருகி உயிரிழந்தனர். டிசம்பர் 16-ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் மதுராவில் "யமுனா எக்ஸ்பிரஸ் வே' விரைவுப் பாதையில் சென்று கொண்டிருந்த எட்டு சொகுசு ஆம்னி பஸ்கள் ஒன்றன்பின் ஒன்று மோதியால் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்றால், 70 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 14-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விபத்தில், வாகனத்தில் ஏ.சி. பழுதடைந்து தீப்பிடித்ததால் 20 பேர், டிசம்பர் 25-ஆம் தேதி கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா விபத்தில் 7 பேர், ஜனவரி 6-ஆம் தேதி நாகபுரியில் இருந்து மும்பைக்குப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ்ஸில் தீ விபத்து என்று ஆம்னி பஸ்கள் தொடர்பான விபத்துகள் தொடர்கதையாகி விட்டன.
பெரும்பாலான தனியார் ஆம்னி பஸ்கள், அதி விரைவாகச் செல்வதற்காகவும், அதிக வசதிகளுடன்கூடிய தூங்கும் வசதிகள் வழங்குவதற்காகவும், வாகனத்தின் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். நெருக்கமாக இருக்கைகளும், படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு, அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்ல முற்படுகிறார்கள்.
விபத்து அல்லது மோதல் நடந்தால், அதி விரைவாகச் செல்லும் ஆம்னி பஸ்கள், சிறு தீப்பொறி எழுந்தாலும் சட்டெனத் தீப்பற்றிக்கொள்கின்றன. உள்ளே பரவிவிடும் புகை காரணமாகப் பயணிகள் எளிதில் வெளியேற முடிவதில்லை. ஜன்னல்களை உடைத்து வெளியேற, ஆங்காங்கே சுத்தியல்கள் இல்லாத நிலையில், நெருக்கமாக அமைந்திருக்கும் இருக்கைகளில் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் மூச்சுத் திணறுகின்றனர்.
பெரும்பாலான ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை எங்கோ இருக்கும் ஒன்றியப் பிரதேசமான தாமனில் பதிவு செய்கிறார்கள் என்பது வெளியில் தெரிவிக்கப்படாத ரகசியம். அங்கே வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிகளும் மிகவும் குறைவு. அதைப் பயன்படுத்தி இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தங்களது ஆம்னி பஸ்களை இயக்குகிறார்கள். சொகுசுப் பேருந்தின் கட்டமைப்பு தொடர்பான பாதுகாப்பு விதிகள் வாகனம் தொடர்பானதே தவிர, அதன் மீது எழுப்பப்படும் மேல் கட்டமைப்புத் தொடர்பானவை அல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
வாகனத்தை வாங்கி மேற் கட்டமைப்புக்கு "பாடி பில்டிங்' அமைப்புகளிடம் கொடுத்து விடுகிறார்கள். அவை போக்குவரத்துத் துறை கண்காணிப்புக்கு உட்பட்டவை அல்ல. இரவு நேர சொகுசுப் பயணத்துக்காக, அதிகம் எடை இல்லாத, சட்டெனத் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களால் ஆம்னி பஸ்கள் கட்டமைக்கப்படுகின்றன.
ஆம்னி பஸ்கள் சட்டெனத் தீப்பிடிப்பதற்கு இன்னும்கூட இரண்டு காரணங்கள் உண்டு. ஆங்காங்கே டீசல் நிரப்புவதற்கு நேரம் ஆகாமல் இருப்பதற்காக, அதிகக் கொள்ளளவுடைய டீசல் டாங்குகள் சட்ட விரோதமாகப் பொருத்தப்படுகின்றன. குளிர்பதன வசதியை வழங்குவதற்காக, அதிகத் திறன்கொண்ட "ஹெவி ட்யூட்டி' ஏசிக்கள் இயக்கப்படுகின்றன. சிறிய மின் கசிவு ஏற்பட்டால்கூட "ஆம்னி பஸ்' எளிதில் தீப்பிடித்து விடுகிறது.
ஆம்னி பஸ்களின் எல்லா பாகங்களும் பாதுகாப்பு விதிகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். ஓட்டுநர்களின் பணி நேரம் முறைப்படுத்தப்பட்டு, அவர்கள் ஆறு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து வாகனம் ஓட்டுவது தடுக்கப்பட வேண்டும்.
வாகனத்தின் கட்டமைப்பில் எந்தெந்தப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிற விவரம், அதன் பாதுகாப்பு அம்சங்கள், விபத்து நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பயணிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
ஒரே உரிமத்துடனும், ஒரே பதிவு எண்ணுடனும் பல ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு, கடந்த 50 ஆண்டுகளாக நிலவுகிறது. அதைக் கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் மாநில அரசுகள் எதுவும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்களே மறைமுக ஆம்னி பஸ் உரிமையாளர்களாக இருந்தால்...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...