நுண்ணறிவுக்குப் புலப்படாது!
பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்விவசாயிகள் என்று தெரிகிறது.


செயற்கை நுண்ணறிவுச் சாதனைகள் ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ளும் சிற்றறிவுகூட மனித இனத்துக்கு இல்லையோ என்கிற கேள்வியை எழுப்புகிறது மாறிவரும் பருவநிலைச் சூழல். கடந்த 2025 நவம்பரில் தொடங்கி, 2026 ஜனவரி மூன்றாவது வாரம் வரையில் காணப்பட்ட வெப்பமான வறட்சி நிலையைத் தொடர்ந்து, மிகவும் காலதாமதமாக இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கி இருப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஓர் எச்சரிக்கை.தொடர்ந்து கொண்டிருக்கும் தாமதமான பனிப்பொழிவும், அதிகரித்த பனிப்பொழிவும் குறித்துப் புரிந்துகொள்ள ஆர்ட்டிக் துருவ வோர்டெக்ஸ் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். குளிர் காலத்தில் வட துருவத்தை வலம்}இடமாக அதிக உயரத்தில் குறைந்த அழுத்த குளிர்காற்று சுற்றிக் கொண்டிருக்கும். இதை "வோர்டெக்ஸ்' என்று கூறுவார்கள். அதிவிரைவாகச் சுழன்று சுற்றியுள்ள காற்றையோ, தண்ணீரையோ தனது மையப் பகுதிக்குள் இழுத்துக் கொள்வதைத்தான் "வோர்டெக்ஸ்' (சுழல்) என்கிறார்கள்.
வலுவாக இருக்கும் "வோர்டெக்ஸ்' குளிர்காலத்தை ஆர்ட்டிக் துருவம் தக்கவைத்துக் கொள்ளும். அது வலுவிழக்கும்போது, அந்தத் குளிர்காற்று வட துருவத்தில் இருந்து கீழ்நோக்கி நகர்ந்து பூமியின் வடக்குப் பகுதிகளில் அல்லது மேற்புறப் பகுதிகளில் கடுமையான குளிர்காலத்தை, பனிப்புயலை உருவாக்குகிறது.
வட துருவ வோர்டெக்ஸ் தாக்கத்தால் இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவு குறைந்து வருகிறது என்பது வானிலை ஆய்வாளர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆய்வு. பூமிப்பந்தின் ஏனைய பகுதிகளைவிட ஆர்ட்டிக் எனப்படும் வடதுருவப் பகுதிகள் அதிக அளவில் வெப்பமடைகின்றன. இது வட துருவப் பனிப்படலத்தைப் பாதிக்கிறது.
பூமியில் வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகுகின்றன. கச்சா எண்ணெய்க்காகவும், அரிதான தாதுக்களுக்காகவும் (ரேர் எர்த் மினரல்ஸ்) நாடுகள் இடையே காணப்படும் போட்டி, நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. ஆர்ட்டிக் துருவத்தில் கச்சா எண்ணெய், அரிதான தாதுக்களுக்கான ஆய்வுகளும், முனைப்புகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இயற்கை நம்மை எச்சரிக்கிறது.
பூமி வெப்பமயம் காரணமாக இமயமலையின் பனிச் சிகரங்கள் உருகிக் கொண்டிருக்கின்றன. பனிப்பொழிவின் அளவு குறைவதுதான் சற்று அச்சமாக இருக்கிறது. 2024 நவம்பர் முதல் 2025 மார்ச் வரையிலான பனிக்காலத்தில் காணப்பட்ட பனிப்பொழிவு 23.6% குறைவு; இதனால், ஏற்படும் பாதிப்பு அசாதாரணமானது.
கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாப்பது 42,000 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள பனிச் சிகரங்கள். அவற்றில் சுமார் 16 லட்சம் சதுர கி.மீ. பனிப்பொழிவு உருவாகிறது. அவற்றின் பாதிப்பு ஏற்படும்போது கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா நதிகளில் பாயும் வெள்ளம் பாதிக்கப்படுவதுடன், அவற்றின் கிளை நதிகளிலும் நீர்வரத்து குறைகிறது.
பருவகால பனிப்பொழிவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும்போது, நதிகளின் நீரோட்டமும் குறைந்து வருவதால், இந்தியத் துணைக் கண்டத்தின் பாசன நீருக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு அதிகரிக்கிறது. 6 லட்சம் சதுர கி.மீ. விளைநிலங்களுக்கான பாசன நீர் மட்டுமல்லாமல், சுமார் 26,000 மெகாவாட் புனல் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. 100 கோடி மக்களின் வாழ்வாதாரம் இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதை நாம் உணராமல் இருக்கிறோம்.
பருவ மழைப் பொழிவும், குறித்த காலத்தில் பனிப்பொழிவும் இல்லாமல் போயிருப்பதால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ஜம்மு}காஷ்மீர் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகள் அழிந்திருக்கின்றன. மரங்கள் எரிந்து கருகின என்பதுடன், அந்தக் காடுகளில் வாழ்ந்த விலங்கினங்கள், பறவை இனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும். கோடையில் பனிச் சிகரங்கள் உருகுவதால் வெள்ளம் கிடைத்தது என்றால், குளிர் காலத்தில் பல நீரோடைகள் வறண்டு போயிருந்தன.
இந்தப் பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆப்பிள் தோட்ட விவசாயிகள் என்று தெரிகிறது. பூப் பூக்கும் பருவம் தொடங்கினால், ஆப்பிள் மரங்களுக்குத் தொடர்ந்து 1,200 முதல் 1,600 மணி நேரம் குளிர் தேவைப்படும். தாமதப்படும் பனிப் பொழிவு இந்தச் சுழற்சியைப் பாதிக்கிறது. மண்டி, சிம்லா, குலு பகுதியில் உள்ள பல ஆப்பிள் தோட்டங்களில், மரங்களைப் பிடுங்கி எறிந்து விட்டு காய்கறி விவசாயத்துக்கு விவசாயிகள் மாறியிருக்கிறார்கள் என்கிற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
பனிப்பொழிவு குறைவதால் விவசாயம் மட்டுமல்ல, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு} காஷ்மீர் பகுதிகளில் சுற்றுலாவும் பாதிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும்போது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அந்தப் பகுதிகளின் பொருளாதாரமும் பின்னடைவை எதிர்கொள்கிறது.
இந்தியா மட்டும்தான் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறது என்று கருதிவிட வேண்டாம். இது மனித இனம் சந்திக்கும் பேராபத்து. அதை செயற்கை நுண்ணறிவால் எதிர்கொள்ள முடியாது. பேராபத்தை நோக்கி நகர்கிறோம் என்று மனித இனத்தின் சிந்தனைக்கு எப்போது எட்டப் போகிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...