

செயலியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் உணவு, போக்குவரத்து, அழகுக் கலை, வீட்டுப் பராமரிப்பு போன்ற சேவை சார்ந்த தொழில்கள் புரட்சியை ஏற்படுத்திவரும் வேளையில், அந்த நிறுவனங்களில் பங்குதாரர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டு பணியாற்றும் தொழிலாளர்களின் (கிக் தொழிலாளர்கள்) நிலை குறிப்பிடும்படியாக இல்லை.
வேலையில் நெகிழ்வுத்தன்மை, பொருளாதார மேம்பாடு, சுதந்திரமான செயல்பாடு என்ற அறிவிப்புகளுடன் தொடங்கப்பட்டு, செயல்பட்டுவரும் இந்தப் பெருநிறுவனங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டு தரவுகளின்படி இந்தியாவில் 1.20 கோடி பேர் இந்த சேவைத் தொழிலில் உள்ளனர். 2029}30}ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக அதிகரிக்கும் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
பெரு நகரங்கள் மட்டுமன்றி அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கும் இந்தத் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கேள்விக்குறியாகவே உள்ளது. நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை, வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு போன்ற வசதிகள் உள்ள நிலையில், செயலியை அடிப்படையாக கொண்ட நிறுவனங்களில் பணியாற்றும் இந்த முறைசாரா தொழிலாளர்களுக்கு அதுபோன்ற சலுகைகள், பணிப் பாதுகாப்பு இல்லை என்ற விவாதம் பொதுவெளிக்கு வந்துள்ளது.
இந்த சேவைத் தொழிலில் ஈடுபடும் பெரு நிறுவனங்கள் ஒருங்கிணைப்புப் பணியை மட்டும் செய்துகொண்டு, தொழிலாளர்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றன; உணவு விநியோகம் உள்ளிட்ட பணியில் ஈடுபடும் தொழிலாளி தனது சொந்த இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகிறார். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நியாயமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வாகனத்துக்கான பராமரிப்பு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட செலவுகளை அவர்களுக்கான வருமானத்தில் இருந்தே செலவிட வேண்டும். மேலும், தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்யும் இவர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் 20,000 வரை மட்டுமே ஊதியமாகக் கிடைக்கிறது. இதனால், 90 சதவீத தொழிலாளர்கள் மருத்துவம் உள்ளிட்ட எதிர்பாராத அவசரத் தேவையை எதிர்கொள்வது சவாலாகவே உள்ளது.
உலக அளவில் இந்த முறைசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு இடைவெளியை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் அதிக அளவிலான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த ஆண்டு எச்சரித்தது. இந்தத் துறை புதுப்புது வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வேளையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, நிலையான வருமானம் இல்லாமை, உடல்நலம் போன்றவை கேள்விக்குறியாகி வருகின்றன.
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் சில அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த முறைசாரா தொழிலாளர்களை அடையாளம் காணும் விதமாக தனித்துவமான அடையாள அட்டை, மத்திய தொழிலாளர் நலத் துறையின் இ}ஷ்ரம் எண்ம தளத்தில் பதிவை நெறிப்படுத்துதல், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு போன்றவை அளிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டார்.
அதன்பேரில், செயலி அடிப்படையிலான சேவை வழங்கும் பிரதான நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களை இ}ஷ்ரம் தளத்தில் பதிவு செய்து, பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளன. சுமார் 75 லட்சம் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெறலாம் என்ற நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வரை இ}ஷ்ரம் தளத்தில் வெறும் 70,000 தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2030}இல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டும் என்றால், தொழிலாளர்களின் திறன் மேம்பாடு மிக முக்கியமானது. "கிக்' தொழிலாளர்கள் எனப்படும் பகுதிநேர சேவைத் தொழிலாளர்களைப் பொருத்தவரை அவர்கள் தினக்கூலி தொழிலாளர்களைப் போன்று தொடர முடியுமே தவிர, அடுத்தகட்ட வளர்ச்சியே இல்லாத நிலையில் தொடர்வார்கள்.
அது மட்டுமல்ல, குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இவர்கள் வேறு வேலைக்குப் போக முடியாத நிலையில், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு தர வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படும். அவர்களது மருத்துவச் செலவு, முதுமைக்கால பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு, அரசின் வருவாயில் கணிசமான பங்கை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களின் மூலம் செயல்படும் இது போன்ற தொழிலாளர்கள் அன்றாடம் விபத்தை எதிர்கொள்ளும் ஆபத்துடன் செயல்படுகின்றனர். உடனடியாக பொருள்களைக் கொண்டுபோய் வாடிக்கையாளர்களிடம் சேர்க்கும் அவசரத்தில் விரையும் அவர்கள், சாலைகளில் பயணிக்கும் பாதசாரிகளுக்கும், ஏனைய வாகன ஓட்டிகளுக்கும்கூட பிரச்னையாக மாறியிருக்கிறார்கள்.
ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இவர்களது பாதுகாப்புக்காக சில சட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. இந்தத் தொழிலாளர்களின் நலன் குறித்தும் ஓய்வுக்கால பாதுகாப்பு குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சுகாதார ஆய்வாளா் பணித் தோ்வு: ஒரு மையத்தில் மட்டுமே முறைகேடு - உயா்நீதிமன்றத்தில் தகவல்

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

தொழிலாளர் நலன் காப்போம்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி மனு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

