டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தேவையற்ற சர்ச்சை!

News image
நாக்பூர் வன்முறை - கோப்புப்படம்.
Updated On :25 மார்ச் 2025, 9:49 pm

ஆசிரியர்

நாகபுரி நகரில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 17), மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்கசீபின் கல்லறை தொடர்பான போராட்டம் வன்முறைக்கு வித்திட்டது.

பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மகனும் அவருக்குப் பின் அரசராக இருந்தவருமான சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஹிந்தியில் வெளியானது "ச்சாவா' திரைப்படம். பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான "ச்சாவா' திரைப்படம் அடுத்த ஒரு வாரத்திலேயே ரூ.550 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. மராட்டியர்களின் அடையாளமான சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை ஒளரங்சீபும் அவரது தளபதிகளும் சித்திரவதை செய்யும் காட்சிகள், மராட்டியர்களை ஆத்திரமடையச் செய்ததில் வியப்பில்லை.

அந்த மாநிலத்தைச் சேர்ந்த சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி அந்தத் திரைப்படம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் கலவரத்தில் முடிந்திருக்கிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து மகாராஷ்டிர பேரவை, மேலவையில் ஆளும் பாஜக - சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து ஆஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்னர் ஒளரங்காபாத்) உள்ள ஒüரங்கசீபின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பினர் கோரிக்கை எழுப்பினர். மற்றொரு சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து அந்நகரில் உள்ள ஹம்சபுரி என்ற பகுதியில் பொது மக்களின் வீடுகள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மருத்துவமனை ஆகியவை தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 33 போலீஸார், பொது மக்கள் பலரும் காயமடைந்தனர்.

1618-இல் குஜராத் மாநிலம், தாஹோதில் பிறந்த ஒளரங்கசீப், 1707-இல் மறைந்தார். அவரால் உருவாக்கப்பட்ட நகரம்தான் ஒளரங்காபாத். அந்த ஊரும் மாவட்டமும் இப்போது சத்ரபதி சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திறந்தவெளியில் சாமானியனாக எந்தவிதக் கல்லறையும் எழுப்பாமல் புதைக்கப்பட வேண்டும் என்பதே ஒளரங்கசீபின் கட்டளையாக இருந்தது.

1921-இல் ஒளரங்காபாத் விஜயம் செய்த பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சன் பிரபு, அந்த சமாதி கேள்வி கேட்பாரற்று இருப்பதைப் பார்த்து வருத்தப்பட்டு, ஹைதராபாத் நிஜாமிடம், பளிங்குக் கற்களால் அழகுபடுத்தி மறைந்த முகலாய மன்னருக்கு சமாதி எழுப்பப் பணித்தார். அந்த சமாதி இப்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஒளரங்கசீபின் சமாதி தகர்க்கப்பட வேண்டும் என்று ஹிந்துத்துவ அமைப்புகளும், அவர்களுக்கு ஆதரவாக "ச்சாவா' திரைப்படத்தால் ஆத்திரமடைந்த மராட்டியர்களும் கோரிக்கை எழுப்பினாலும், வன்முறை தொடர்வதற்குக் காரணம் அவர்களல்ல. எதிர்வினையாகத்தான் அவர்கள் களமிறங்கினார்கள் என்பதை அந்தப் பகுதியில் வாழும் இஸ்லாமியர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். பிரதமரின் விஜயத்தைத் தடுக்கும் முயற்சியாகக்கூட இந்த மதக் கலவரம் இருந்திருக்கக்கூடும் என்பதை நிராகரிக்க முடியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, வரும் மார்ச் 30-ஆம் தேதி நாகபுரிக்கு விஜயம் செய்ய இருக்கிறார். அங்கே ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நிறுவப்படும் மருத்துவமனையைத் திறந்து வைக்க இருக்கிறார். அங்கே உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனத் தலைவர்கள் டாக்டர் ஹெட்கேவார், குருஜி கோல்வல்கர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் செல்ல இருக்கிறார். பிரதமரான பிறகு அந்த நினைவிடங்களுக்கு அவர் விஜயம் செய்வது முதல்முறை என்பதும், அங்கே விஜயம் செய்யும் முதல் இந்தியப் பிரதமரும் அவராகத்தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஃபாஹிம் கான் உள்பட 99 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வன்முறையின்போது, ஒரு பெண் காவலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது. வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், ஒளரங்கசீபின் கல்லறைப் பிரச்னை நீறுபூத்த நெருப்பாகத் தொடரத்தான் செய்கிறது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்திருப்பதுபோல, இதுபோன்ற வன்முறைகள் அந்நிய முதலீடுகள் வருவதைத் தடுப்பதுடன், வேலைவாய்ப்பையும் பாதிக்கும் என்பதை மக்கள் ஏனோ உணர மறுக்கிறார்கள். இந்தியாவிலேயே மிக அதிகமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும் மாநிலத்தின் பகுதியாக இருக்கும் நாகபுரியில் கலவரம் வெடித்திருப்பதால் ஏற்படும் பின்னடைவுகள் சாதாரணமானதல்ல.

பொதுவாகவே, ஒரு மாநிலத்தில் உயர்வாகக் கருதப்படுபவர் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அரசியல்வாதிகளுக்கு மிகுந்த கவனம் தேவை. அப்படி செய்யவில்லை என்றால், அது சில நேரங்களில் வன்முறைக்கும், அசல் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்குமே பயன்படும்.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெருகிவரும் மக்கள்தொகையால் நெரிசலாகி வரும் நகரங்கள், மாசடைந்துவரும் ஆறுகள், சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாத நகரங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவற்றில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் வரலாற்றிலிருந்து இஸ்லாமியப் படையெடுப்புகளை அகற்றிவிட முடியாது. முகலாயர்கள், சுல்தான்களின் பங்களிப்புகளையும் நிராகரித்துவிட முடியாது. வரலாற்றுத் தடயங்களை அழிப்பது என்று கிளம்பினால், நாம் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலையும், கட்டடக் கலையின் உன்னதமான குதுப்மினாரையும்கூட இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.