

இந்தியாவில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறிய அணு உலை அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்க அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அந்த நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2007-இல் ஏற்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின்படி வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம் அந்த நாட்டு அரசை கேட்டுக் கொண்டதற்கிணங்க சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனைகளுடன், வகைப்படுத்தப்படாத சிறுதொகுப்பு அணு உலை (எஸ்.எம்.ஆர்.) தொழில்நுட்பத்தை அளிக்க இந்த அனுமதி வகை செய்கிறது.
முதல்கட்டமாக 10 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அனுமதியானது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். மேலும், இந்த அனுமதியை ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதுடன், சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் உண்டு.
நிகழ்நிதியாண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையில், நாட்டின் அணுமின் உற்பத்தி திட்டங்களுக்கு ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 5 சிறுதொகுப்பு அணு உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டமிடலைக் கருதலாம்.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தற்போது வேகமாகப் பரவிவரும் அழுத்தப்பட்ட நீர் உலை தொழில்நுட்பத்துக்கு மாறி வருகின்றன. இந்தியாவில் சிறுதொகுப்பு அணு உலைகளை அமைக்கும்போது, அணு உலை தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ளவும், உலகத் தரவரிசையில் இடம்பிடிக்கவும் இந்த அனுமதி துணை புரியும்.
நாட்டின் மின்சாரத் தேவையானது. கடந்த ஆண்டு மே மாதம் அதிகபட்ச அளவாக 250 ஜிகாவாட்டை எட்டியது; இந்த ஆண்டு அது 277 ஜிகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சுமார் 470 ஜிகாவாட் மின்சார உற்பத்திக்கான மையங்கள் உள்ளன. ஆனால், அனைத்திலும் ஒரே நேரத்தில் முழுமையாக மின் உற்பத்தி செய்ய இயலாது.
தொழில் வளர்ச்சி, நகரமயமாதல், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாளுக்குநாள் நாட்டின் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. வரும் 2032-இல் நாட்டின் மின் தேவை சுமார் 458 ஜிகாவாட்டாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதைப் பூர்த்தி செய்ய மரபுசார் மின் உற்பத்தியுடன் காற்றாலை, சூரிய மின்சக்தி போன்ற மரபுசாரா மின் உற்பத்தி ஊக்கப்படுத்தப்பட்டாலும் அவை தொடர் மின் உற்பத்தியாக இருக்காது என்பதால் அணுமின் உற்பத்தி வாய்ப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்கிற வாதத்தை மறுப்பதற்கில்லை.
பெரிய தொழிற்சாலைகள் தங்களது மின் தேவைக்காக காற்றாலைகளையோ அல்லது சூரியஒளி மின் உற்பத்தி மையங்களையோ அமைத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில், 30 முதல் 300 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சிறு அணு உலைகளுக்கு குறைந்த அளவு நிலமே தேவை என்பதால் அவற்றை தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இதன் நோக்கம். நிலம், தண்ணீர் மற்றும் நிதியை தொழிற்சாலைகள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் பராமரிப்பை அரசு நிறுவனமான இந்திய அணுசக்திக் கழகம் ஏற்றுக்கொள்ளும்.
அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்க, அணுசக்தி சட்டம் 1962-இல் திருத்தம் மேற்கொண்டாக வேண்டும். அந்தச் சட்டத்தின்படி, அணுமின் உற்பத்தியை அரசு நிறுவனங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். சட்டத் திருத்தம் மேற்கொண்டால் தான் காற்றாலை, சூரியஒளி மின் உற்பத்தி மையங்கள்போன்று சிறுதொகுப்பு அணு உலைகளை தனியார் தொழில்நிறுவனங்கள் அமைத்துக்கொள்ள முடியும். சட்டத் திருத்தத்துக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளதன் அடிப்படையிலேயே, அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதை மறந்துவிடக் கூடாது.
அணு உலைகள் ஆபத்தானவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 2011-இல் ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்தை மறந்துவிட முடியாது. 1984-இல் போபால் விஷவாயு விபத்து, 1986-இல் ஓலியம் விஷ வாயுக் கசிவு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை தவிர்ப்பதற்கு 2010-இல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.
அதன்படி அணு உலை விபத்துகளில் அதிகபட்ச இழப்பீடு ரூ.1,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. புகுஷிமா பேரழிவின் இழப்பு சுமார் ரூ.46 லட்சம் கோடி எனும்போது இந்திய அரசின் ரூ.1,500 கோடி என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே.
அணு உலைகள் ஆபத்தானவை அல்ல என்று கூறும் வெஸ்டிங் ஹவுஸ் உள்ளிட்ட அணு உலை தயாரிப்பு நிறுவனங்கள், அணு உலை விபத்து என்பது 5 மில்லியன் ஆண்டுகளில் ஒருமுறை ஏற்படக்கூடியது என்று கூறுகின்றன. அப்படியானால் இழப்பீடு வழங்குவதற்கு அவர்கள் ஏன் சட்டப் பாதுகாப்பு கோர வேண்டும்?
இந்தியா முழுவதும் ஆங்காங்கே தொழிற்சாலைகளுக்கு அருகே அணுமின் நிலையங்கள் அமைகின்றன என்றால் 100 கி. மீட்டர் சுற்றளவில் வாழும் மக்களின் உயிருக்கும் வருங்காலத்துக்கும் உத்தரவாதம் அளிப்பது யார்? ஆங்காங்கே அணு மின் உலைகள் அமைப்பது ஆபத்துக்கு அச்சாரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை நேரில் வலியுறுத்தல்

அரசு அலுவலக மேற்கூரைகளில் 20 மெவாட் மின் உற்பத்தி: விரைவில் தொடக்கம்

அணுமின் உற்பத்தி திட்டங்கள்: 2035-ஆம் ஆண்டு வரை சுங்க வரி விலக்கு நீட்டிப்பு!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

