வெளிநாட்டில் வேலை என்று ரஷியாவுக்குச் சென்ற இளைஞரின் மரணச் செய்தி அவரது குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைந்ததுடன் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸைச் சேர்ந்த தேஜ்பால் சிங் என்ற 29 வயது இளைஞர் சுற்றுலா நுழைவு இசைவில் (விசா) முதலில் தாய்லாந்து சென்று அங்கிருந்து ரஷியாவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் சென்றுள்ளார். ரஷியாவுக்குப் பயிற்சிக்காக செல்வதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். கடந்த மார்ச் 3-ஆம் தேதிக்குப் பின்னர் தனது குடும்பத்தினரை அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவர் உக்ரைன் போர் முனையில் இறந்துவிட்டதாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி தகவல் தெரிவித்துள்ளனர். அவரைத் தவிர இன்னொரு இந்தியரும் இறந்துள்ளார். ஆனால், இறந்தவரின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
தேஜ்பால் குடும்பத்தில், வேலைபார்த்து சம்பாதித்து வந்தது அவர் மட்டுமே. அவரது இறப்பால் தந்தை, மனைவி, 5 வயது மகன், 2 வயது மகள் ஆகியோர் நிர்கதியாகி உள்ளது பெரும் சோகமாகும். இதற்கு முன்னரும், உக்ரைன் - ரஷிய போர் முனையில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த அஷ்வின்பாய் மங்குகியா என்ற 23 வயது இளைஞர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதியும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த முகமது அஸ்ஃபான் என்ற 31 வயது இளைஞர் பிப்ரவரி 21-ஆம் தேதியும் உயிரிழந்தனர். அவர்களது சடலங்கள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
இதுபோன்று இளைஞர்கள் ரஷியாவுக்காக உக்ரைன் எல்லையில் போர்புரிவது என்பது விதிவிலக்கான சம்பவம் அல்ல. ரஷிய ராணுவத்தில் உதவியாளர்கள் பணிக்கு ஆள்கள் தேவை என்று கூறி தேர்வு செய்த பின்னர், அவர்கள் போர்முனையில் பணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்கிறது. மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை ஊதியம் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து சுமார் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு போர்ப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உதவியாளர் பணி என்று ஏமாந்தவர்களில் 30 இந்தியர்கள், தாங்கள் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்ப விரும்புவதாக ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி உள்ளனர்.
தேஜ்பால் இறப்புச் செய்தி வெளியானவுடன், போர்முனையில் இந்தியர்களைப் பணியமர்த்துவதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "எந்த சூழ்நிலையில் இந்தியர்கள் போர்முனைக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அது கருத்தில் கொள்ளத்தக்கது அல்ல. அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவுக்கு எதிரானது இது' என வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
ரஷிய ராணுவத்துக்காக சட்டவிரோதமாக இந்தியர்களை அனுப்பும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். போர்முனையில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாஸ்கோவில் அந்நாட்டு அதிகாரிகளையும், புது தில்லியில் உள்ள ரஷிய தூதரையும் நேரில் தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வேலை தேடிச் செல்வது என்பது புதிதொன்றுமல்ல. இந்தியாவைப் பொறுத்தவரை, நடுத்தர வர்க்கத்தினர் என்றால் வசதியான வாழ்க்கைக்காகவும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்றால் வாழ்வாதாரத்துக்காகவும் வெளிநாட்டில் வேலைக்குச் செல்வது என்பது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த வெளிநாட்டு வேலை மோகத்தை சில சமூக விரோத சக்திகள் பயன்படுத்தி இடைத்தரகர்களாகச் செயல்பட்டு லட்சக்கணக்கான அப்பாவிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுரண்டுகின்றனர். அங்கு சென்ற பின் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி சுற்றுலா நுழைவுஇசைவில் அனுப்புவது, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பணி என்று அனுப்பி சட்டவிரோத செயல்களில் ஈடுபட நிர்பந்தம் செய்வது, ஏழைப் பெண்கள் என்றால் வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துவது போன்றவை மனசாட்சி அற்ற இடைத்தரகர்களால் செய்யப்படுகின்றன. கடவுச்சீட்டையும் (பாஸ்போர்ட்) இடைத்தரகர்கள் வாங்கி வைத்துக் கொள்வதால் இதுபோன்று சிக்கிக் கொள்பவர்கள் மீண்டு வருவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.
இதேபோன்று, துபையில் ஐ.டி. பணி, மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் அழைத்துச் செல்லப்பட்ட 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள் மியான்மர் எல்லையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டு சொல்லொணா துயரங்களுக்கு ஆளானார்கள். அவர்களில் சிலர் அப்போது மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதுபோன்று வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோரில் பெரும்பாலானவர்கள் நகைகளை அடகுவைத்தோ, கடன் வாங்கியோதான் செல்கின்றனர். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சென்றுவிட்டு மேலும் கடனாளியாகவோ, மன உளைச்சலுடனோ திரும்பி வருவது வாழ்நாள் முழுவதும் துயரத்தையே தரும்.
அப்பாவிகள் ஏமாறுவது இனியும் தொடரக் கூடாது. பணிக்குச் செல்பவர்கள் தாங்கள் அணுகும் நபர் நம்பகத்தன்மை உடையவரா, நிறுவனம் என்றால் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் அங்கு சென்றபின் அவதிப்பட நேராது. வெளிநாட்டு வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிப்பதுடன் முறைப்படுத்த வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம். எஸ். விஸ்வநாதன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 54

16! மக்களவையில் புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...
அசோகன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 51
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


