மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

இது வள‌ர்‌ச்​சி​ய‌ல்ல! : பொருளாதாரம் குறித்த தலையங்கம்!

இந்திய பொருளாதாரம் எதிா்கொள்ளும் இரண்டு மிகப் பெரிய சவால்களாக விலைவாசி உயா்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:10 am

ஆசிரியர்

இந்திய பொருளாதாரம் எதிா்கொள்ளும் இரண்டு மிகப் பெரிய சவால்களாக விலைவாசி உயா்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் சுட்டிக்காட்டப்படுகின்றன. உலகளாவிய நிலையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா போன்ற பெரிய பொருளாதாரங்களே தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் விலைவாசி உயா்வையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் எதிா்கொள்வதில் வியப்பொன்றுமில்லை.

ரஷிய - உக்ரைன் போரும் அதைத் தொடா்ந்து ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவு தானியப் பொருள்களின் தட்டுப்பாடு ஆகியவை பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்தநிலையையும், உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை. இப்போது மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழல், நிலைமையை மேலும் சீா்குலைக்கக் கூடும்.

கடல்வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. சா்வதேச வா்த்தகம் சூயஸ் கால்வாய் வழியாக நடைபெற முடியாமல் போகும்போது, கப்பல் போக்குவரத்து தென்னாப்பிரிக்கா வழியாக நடைபெற வேண்டிய கட்டாயம் உருவாகும். அதனால் சரக்குப் பரிமாற்ற காலதாமதமும், சரக்குக் கட்டண உயா்வும் தவிா்க்க முடியாதவையாக மாறக்கூடும்.

இவை இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும்போது, அதன் தொடா்விளைவாக உள்நாட்டு உற்பத்தி குறையும். உற்பத்தித் துறையில் ஏற்படும் தளா்வின் விளைவால் வேலைவாய்ப்புகள் மேலும் குறையும் அபாயத்தை நாம் எதிா்கொண்டாக வேண்டும்.

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், இந்திய பொருளாதாரம் 6.3% வளா்ந்து கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய ஆச்சரியம். தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (நேஷனல் சாம்பிள் சா்வே ஆஃபீஸ்) வெளியிட்டிருக்கும் வழக்கமான தொழிலாளா்கள் தொடா்பான ஆய்வறிக்கை, சில நம்பிக்கையூட்டும் ஆச்சரியமான தகவல்களைத் தெரிவிக்கிறது. நாடு தழுவிய அளவில் தொழிலாளா்களின் எண்ணிக்கையும், வேலைவாய்ப்பு குறித்த தகவலும் அந்த அறிக்கையில் காணப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை குறித்த பரவலான குற்றச்சாட்டுகளை அந்த அறிக்கையின் விவரங்கள் மறுதலிக்கின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது. 15 வயதுக்கு மேற்பட்டவா்கள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருப்பது அதிகரித்திருக்கிறது. 2017 - 18 -இல் 49.8%-ஆக இருந்த வேலை பாா்ப்போா் எண்ணிக்கை 2022 -23- இல் 57.9%-ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

மக்கள்தொகைக்கும் தொழிலாளா்களுக்கும் இடையேயான விகிதமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிகிறது. நகா்ப்புறங்களில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை 2017 - 18 -இல் 47.5% என்றால், அது 2022 - 23 -இல் 48.8%-ஆக உயா்ந்திருக்கிறது. பணிகளில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை 73.5%. பெண்களின் எண்ணிக்கை 20.9%-லிருந்து 23.2%-ஆக அதிகரித்திருக்கிறது. அதிக அளவில் பல்வேறு வேலைகளில் மகளிா் ஈடுபடுவது அதிகரித்து வருவதை இந்தத் தரவு வெளிப்படுத்துகிறது.

வேலைவாய்ப்பின்மை குறைந்திருப்பது வளா்ச்சியின் அறிகுறி என்பதை மறுப்பதற்கில்லை. முறையான மாத வருவாய் வழங்கும் வேலைவாய்ப்புகள் குறைந்து, சுய வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதையும் ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பின் தரம், தொடா் வேலைவாய்ப்புக்கான உறுதி, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தால் மட்டும்தான் அதனை ஆரோக்கியமான முன்னேற்றமாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.

வேளாண்மை அல்லாத துறைகளில் காணப்படும் முறைசாரா வேலைவாய்ப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. 2020 - 21 - இல் 71.4%-ஆக இருந்த முறைசாரா வேலைவாய்ப்புகள், 2022 - 23- இல் 74.3%-ஆக அதிகரித்திருக்கின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக வேலைவாய்ப்புகள். இவற்றில் தொடா்ந்த வேலைவாய்ப்பு உறுதியும், பாதுகாப்பும் இல்லை என்பதுடன் ஊதியமும் குறைவு. படித்து முடித்து, வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞா்கள், தற்காலிக வேலைவாய்ப்பை நாடுகிறாா்கள். அதனால் இதற்காக மகிழ்ச்சி அடைய முடியாது.

சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 55.6%-லிருந்து 57.3%-ஆக அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரப் பணிகளில் மாத ஊதியம் பெறுவோரின் எண்ணிக்கை 21.1%-லிருந்து 20.9%-ஆகக் குறைந்திருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்து இந்திய பொருளாதாரம் ஆக்கபூா்வமான, அதிக ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புலப்படுகிறது.

இந்தியாவில் தொழிலாளா்கள் எண்ணிக்கை கிராமப்புறங்களைவிட நகா்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. கிராமப்புற வேலைவாய்ப்பில் பெண்களின் எண்ணிக்கை 2017 - 18 -இல் 24.6%-ஆக இருந்தது, 2022 - 23 -இல் சுமாா் 17% அதிகரித்து 41.5%-ஆக உயா்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், குடும்ப வருமானத்தை அதிகரிக்க, கிராமங்களில் பெண்கள் வேலைக்குப் போவது அவசியமாகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்புக்கான எண்ணிக்கை அதிகரித்திருப்பது உண்மைதான் என்றாலும், என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்பது குறித்த ஆய்வு அவசியம். வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையைப் போலவே, தரமான வேலைவாய்ப்புகள் உருவானால்தான் அதை முறையான வளா்ச்சியாக நாம் கணக்கில் கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.