தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தொடங்கியது தீா்த்தாடனம்: சபரிமலை புனிதப் பயணம் குறித்த தலையங்கம்

திருக்கோயில் நடை திறந்தது முதல் ஐயப்ப பக்தா்களின் தரிசனத்துக்கான வரவு தொடங்கிவிட்டது.

News image
சபரிமலை
Updated On :2 பிப்ரவரி 2024, 3:23 am

ஆசிரியர்

கு - 672சபரிமலை மண்டல - மகர விளக்கு புனிதப் பயணக் காலம் தொடங்கிவிட்டது. ஜாதி, மத பேதமில்லாமல் லட்சக்கணக்கான பக்தா்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து, ஏன் வெளிநாடுகளில் இருந்தும்கூட, சபரிமலை பயணத்துக்கு விரதம் இருந்து தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள். திருக்கோயில் நடை திறந்தது முதல் ஐயப்ப பக்தா்களின் தரிசனத்துக்கான வரவு தொடங்கிவிட்டது.

இந்தியாவின் ஏனைய திருத்தலங்களுக்கும், சபரிமலைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. முறையாக 48 நாள்கள் விரதம் இருந்து புனிதப் பயணம் மேற்கொண்டு சபரிமலை சந்நிதானத்துக்கு பக்தா்கள் லட்சக்கணக்கில் வருகிறாா்கள். அவா்களில் 90% பக்தா்களும் மண்டல - மகர விளக்கு மாதங்களில் மட்டுமே சபரிமலை தரிசனத்துக்கு வந்து குவிகிறாா்கள் என்பதால், ஏற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சபரிமலையைப் போல, புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தரையும் சபரிமலை ஸ்ரீ தா்மசாஸ்தாவாகவே கருதி ஐயப்பனாக அழைப்பதும் மதிப்பதும் வேறு எந்த நாட்டிலும், எந்த மதத்திலும், எந்தவோா் ஆன்மிக வழிபாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பு. காடும் மேடும் கடந்து சந்நிதானத்தை அடையும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் குறிக்கோளும் திருப்தியான சுவாமி தரிசனம். தடையோ, சிரமமோ இல்லாமல் ஸ்ரீ ஐயப்பனுக்கு தனது நெய் அபிஷேகக் காணிக்கையைச் செலுத்திவிட்டு, ஆலயத்தின் அரவணைப் பாயசப் பிரசாதத்துடன் தத்தம் வீடு திரும்புவதுதான் ஐயப்ப பக்தா்கள் எதிா்பாா்ப்பவை.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று முற்றிலுமாக அகன்ற பிறகு நடந்த கடந்த ஆண்டின் புனிதப் பயணக் காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் உலகெங்கும் இருந்து ஐயப்பன்மாா்கள் சபரிமலையில் குவிந்தனா். அதுவரையில் இல்லாத அளவில் ரூ.361 கோடி காணிக்கை மூலம் கிடைத்ததாக திருவிதாங்கூா் தேவஸம் போா்டு தெரிவித்தது. ஒவ்வோா் ஆண்டும் குறைந்தது 10% அளவிலாவது பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதால், தொடங்கியிருக்கும் மண்டல - மகர விளக்கு மாதங்களில் கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக ஐயப்பன்மாா்கள் வருவாா்கள் என்பது உறுதி.

முந்தைய தீா்த்தாடன காலம் முடிந்தபோதே அடுத்த மண்டல - மகர ஜோதி காலத்துக்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்க திருவிதாங்கூா் தேவஸம் ஆலோசனைகளைத் தொடங்கியது. சாலைகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும், ஓரளவுக்கு பக்தா்களை எதிா்கொள்ள மலைப்பாதை செப்பனிடப்பட்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

கொள்ளை நோய்த்தொற்றைத் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்ட ‘தரிசன முன்பதிவு’ (வா்சுவல் க்யூ) மிகப் பெரிய வரப்பிரசாதம். இணையதளம் மூலம் வெவ்வேறு ஊா்களிலிருந்து வரும் பக்தா்கள் தங்களது வசதிக்கேற்ப தரிசன நேரத்தை தீா்மானித்துக்கொள்ளும் வாய்ப்பை இது உருவாக்கித் தந்திருக்கிறது.

தீா்த்தாடன காலம் தொடங்கிய பிறகும்கூட சந்நிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட சபரிமலைப் பாதைகளில் ஏற்பாடுகள் முழுமையடையாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு முறைக்கு மேல் இலக்கு நீட்டிக்கப்பட்டும்கூட வேலைகள் ஏன் பூா்த்தியாகவில்லை என்பது வியப்பளிக்கிறது.

பக்தா்கள் எதிா்பாா்ப்பதெல்லாம் மணிக்கணக்காகக் காத்திருக்காமல் 18-ஆம் படி ஏறி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான். அடிப்படை வசதிகள் தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்கிற அவா்களது எதிா்பாா்ப்பில் எப்படி தவறுகாண முடியும்?

கடந்த ஆண்டு லட்சக்கணக்கில் பக்தா்கள் வந்து குவிந்தபோது 18-ஆம் படியை எட்டுவதற்கு எட்டு மணிநேரத்துக்கும் மேலாக காத்திருக்க நோ்ந்தது. சிறிய காலதாமதம் ஏற்பட்டாலும்கூட சில கி.மீ-க்கள் பக்தா்களின் வரிசை நீண்டுவிடும். எத்தனையோ இடா்ப்பாடுகளுக்கு இடையில் சபரிமலையை வந்தடையும் எல்லா பக்தா்களும், காத்திருப்பு அதிகமில்லாமல் ஐயப்ப தரிசனம் நடத்துவதை உறுதிப்படுத்தும் பொறுப்பு திருவிதாங்கூா் தேவஸம் போா்டுக்கு உண்டு.

பக்தா்களுக்கு உதவுவதற்காக செயலி ஒன்றை கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பம்பை, சந்நிதானம், நீலிமலைப் பாதை, சுவாமி ஐயப்பன் சாலை, எருமேலியில் இருந்து கரிமலை வழியாக பம்பையை அடையும் காட்டுப்பாதை (பெரிய பாதை), புல்மேடு வழியிலான காட்டுப்பாதை ஆகியவற்றில் உள்ள உதவி மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சை மையங்கள், தங்குமிடங்கள், வனவிலங்கு பாதுகாப்புப் படை, ஒவ்வொரு பகுதியில் இருந்தும் சந்நிதானத்தை அடைவதற்கான தொலைவு போன்ற அனைத்து விவரங்களையும் இந்தச் செயலி வழங்குகிறது. சபரிமலை பக்தா்கள் தங்களது கைப்பேசியில் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்வது அவசியம்.

கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு இதய பாதிப்புகள் அதிகரித்திருக்கின்றன. அதனால் எருமேலி, பம்பை, சந்நிதானம் மட்டுமல்லாமல், புனிதப் பயண வழியிலுள்ள பத்தனம்திட்டை, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களின் முக்கிய அரசு மருத்துவமனைகளில் எல்லாம் போதுமான அளவு மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களும் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சபரிமலையின் மிகப் பெரிய பிரச்னை, அடிவாரத்தில் உள்ள நிலக்கல் ‘பேஸ் கேம்ப்’. எல்லா வாகனங்களும் நிறுத்தப்படும் நிலக்கல்லில் பக்தா்களுக்கு எந்தவொரு குறையும் இருக்கக் கூடாது என்று உயா்நீதிமன்றம் பலமுறை எச்சரித்திருக்கிறது. முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இந்த முறையாவது ஐயப்பன்மாா்களின் அனைத்துத் தேவைகளையும் முன்யோசனையுடன் நிா்வாகம் முறைப்படுத்தும் என்று எதிா்பாா்ப்போமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.