நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கடல் அரிப்பு அச்சுறுத்தல்!

சுற்றுச்சூழல், சூழலியல்வாதிகளின் கவனம் பெரும்பாலும் வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவது குறித்தும், காற்று மாசுபாடு குறித்தும்தான் காணப்படுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:18 pm

ஆசிரியர்

சுற்றுச்சூழல், சூழலியல்வாதிகளின் கவனம் பெரும்பாலும் வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவது குறித்தும், காற்று மாசுபாடு குறித்தும்தான் காணப்படுகிறது. சூழலியல் பாதிப்புக்கு கடலோரப் பகுதிகள் ஆளாவது குறித்க கவலையும் அச்சமும் பெரும்பாலும் கவனம் பெறுவதில்லை. இந்திய தீபகற்பத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போவது கடலோரப் பகுதிகள் எதிர்கொள்ளும் ஆபத்தாகத்தான் இருக்கும்.

மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் குறித்த கவலை என்பது பெரும்பாலும் கண்துடைப்பாகத்தான் இருந்து வருகிறது. 1986-இல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்றாலும்கூட, அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் நிஜம். 

தங்களது அரசியல் ஆதாயத்துக்காகவும், தேர்தல் கண்ணோட்டத்துக்காகவும் சுற்றுச்சூழல் குறித்த கவலை அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் இருந்து வருகிறது. வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மக்களின் உடனடி கவனத்தையும், அதன்மூலம் தேர்தல் ஆதாயத்தையும் பெறமுடியும் என்கிற அரசியல்வாதிகளின் நம்பிக்கைதான் அதற்கு காரணம். 

காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக இல்லாவிட்டாலும் ஏதாவதொரு வகையில் மக்கள் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் கடற்கரையோர சூழலியல் பாதிப்பு குறித்து எந்த விவாதமும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. 

இந்தியாவின் வட எல்லையில் இமயமலை அரணாக இருப்பதுபோல மேற்கு, தெற்கு, கிழக்குப் பகுதிகள் கடலால் சூழப்பட்டு பாதுகாப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் இந்திய தீபகற்பத்தின் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும், பல்லுயிர்ப் பெருக்கத்தின் மையமாகவும் அவை திகழ்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். 

இந்தியாவின் 9 மாநிலங்கள், 4 ஒன்றிய பிரதேசங்களிலுள்ள 78 மாவட்டங்கள் கடற்கரையையொட்டி அமைந்துள்ளன. இந்திய கடலோரப் பகுதி என்பது 7,500 கி.மீ. நீளமுடையது. ஏறத்தாழ, 14.2 % இந்தியாவின் மக்கள் தொகையினர் அங்கே வாழ்கிறார்கள். மீனவர்கள் வாழும் 3,288 கிராமங்கள் கடற்கரையோரமாக அமைந்திருக்கின்றன. மீன் பிடிப்பது மட்டுமல்லாமல், உப்பளங்கள், தென்னந்தோப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடற்கரையையொட்டி வாழ்கின்றன.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், கடல்வாழ் இனங்களுக்கும், பறவை இனங்களுக்கும் நிலத்திலும் நீரிலும் வாழும் ஊர்வனவற்றுக்கும் வாழ்வாதாரமாக அமைகின்றன கடற்கரைகள். சுந்தரவனக் காடுகள், பிச்சாவரம் அலையாத்தி காடுகள் போன்றவை சூழலியலின் முக்கியமான கேந்திரங்கள். சுந்தரவனக் காடுகளும்,  கஹிர் மாதா சரணாலயமும், 34,000 ச.கி.மீ. அளவிலான கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றன. 

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையைத்தான் ஆமைகள் தங்களது இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள் சமீப காலமாக நில அரிப்பாலும், சுற்றுச்சூழல் பாதிப்பாலும் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நேஷனல் சென்டர் ஃபார் கோஸ்டல் ரிசர்ச் என்கிற அமைப்பு கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்கிறது. கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தேசிய அளவில் ஆய்வுகள் நடத்துகிறது. அதன் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவின் கடற்கரைப் பகுதியில் 33.6% கடல் அரிப்புக்கு ஆளாகிறது என்று தெரிவிக்கிறது. இந்திய தீபகற்பகத்தின் பல பகுதிகள், பல நிலைகளிலான கடல் அரிப்புக்கு ஆளாகி வருவது மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று தெரிவிக்கிறது அந்த தேசிய மையத்தின் அறிக்கை. 

இந்தியாவின் 9 மாநிலங்கள் கடலோரமாக அமைந்திருக்கின்றன. அவற்றில் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்த மேற்கு வங்கத்தில் 60.5%, தமிழ்நாட்டில் 42.2%, புதுச்சேரியில் 56.2% பகுதிகளில் கடல் அரிப்பு அச்சுறுத்தல் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை. இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கேரள மாநில கடற்கரையில் 46% பகுதிகள் கடல் அரிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றன. 

ஒருபுறம் கடல் அரிப்பு ஏற்படும் அதேநேரத்தில், இன்னொருபுறம் கடற்கரையோரமாக மணல் திட்டுகள் ஏற்படுவதால் நிலப்பரப்பு அதிகரிக்கும் நிலையும் ஏற்படாமல் இல்லை. 33.6% பகுதிகள் கடல் அரிப்பை எதிர்கொள்கின்றன என்றால், 27% கடலோரப் பகுதிகளில் நிலப்பரப்பு அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் கடல் அரிப்பு ஏற்படும்போது, இன்னொருபுறம் நிலப்பரப்பு அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 

ஒடிஸாவின் பல கடலோர கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டாலும், நிலப்பரப்பு அதிகரிப்பு விகிதம் 51% என்கிறது அந்த அறிக்கை. இதேபோன்ற போக்கு ஏனைய கடலோர மாவட்டங்களிலும் வெவ்வேறு அளவில் ஏற்படாமல் இல்லை.

கடந்த 26 ஆண்டுகளில் மேற்கு வங்கம் மட்டும் 99 ச.கி.மீ. நிலப்பரப்பை கடல் அரிப்பால் இழந்திருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 40 செ.மீ. அதிகரித்திருப்பதும் கடல் அரிப்புக்கு முக்கியமான காரணம். கடற்கரையோரமாக சுற்றுலா வளர்ச்சி, மீன்பிடி தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்து மட்டுமே கவலைப்படாமல் இந்தியாவின் கடற்கரைகளை பாதுகாப்பதிலும், அதன்மூலம் சூழலியல் சமநிலையை உறுதிப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.