ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தீர்வு சுலபமல்ல!

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவது குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2023, 6:30 pm

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவது குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. உயர்கல்வி மேம்பாடு குறித்தும், அதன் தரம் குறித்தும் கவலைப்படுகிறோம். ஆனால், அஸ்திவாரம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பது குறித்த சிந்தனையே இல்லாமல் இருப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. 

தமிழகத்தில் ஏறத்தாழ 50,000}க்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்கவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் பள்ளிக் கல்வியின் ஆரோக்கியம் குறித்த அச்சத்தை எழுப்புகிறது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஊரகப் பகுதியிலுள்ள அடித்தட்டு வர்க்கத்தினர் என்பதும் அதைவிட வேதனை அளிக்கும் செய்தி.

உயர்நிலைக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் படித்த 8,51,303 மாணவர்களில் 8,01,744 பேர்தான் தேர்வு எழுதியிருக்கிறார்கள். 49,559 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தனித் தேர்வர்களாகப் பதிவு செய்திருந்த 8,901 மாணவர்களில், 7,786 பேர்தான் தேர்வு எழுதினர். 1,115 பேர் எழுதவில்லை. இவர்களில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் 4,45,106.

இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் ஏற்பட்ட சுணக்கத்தின் விளைவாக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கல்வி மீதான ஈர்ப்பு குறைவின் வெளிப்பாடு என்று ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது. அதில் ஓரளவு உண்மை இல்லாமலும் இல்லை. 
கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கூடங்கள் முறையாக இயங்கவில்லை. இணையவழி மூலம் பாடம் கற்பிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்றாலும், அது அனைத்துத் தரப்பு மாணவர்களையும் சென்றடையவில்லை. அப்படியே சென்றடைந்தாலும், பள்ளிக்குச் சென்று கவனச் சிதறல் இல்லாமல் படித்ததுபோல, இணையவழிக் கல்வி பயன்படவில்லை. 
கொள்ளை நோய்த்தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் அனைத்து மாணவர்களும் பதினோறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். சாதாரண சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 5% மாணவர்கள் தோல்வி அடைவார்கள். அவர்கள் பதினோறாம் வகுப்பின் பாடச்சுமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக முறையாக பள்ளிக்கூடம் நடக்காததும் சேர்ந்துகொண்டபோது, கணிசமானவர்கள் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியைத் தழுவினர். அவர்கள் தன்னம்பிக்கை இழந்ததால் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்குபெறாமல் ஒதுங்குவதற்கான சாத்தியமும் புறந்தள்ளக்கூடியது அல்ல.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கும் காரணங்களும் கூட ஏற்புடையவைதான். கொள்ளை நோய்த்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார அழுத்தம் காரணமாக மாணவர்கள் பலர் படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் சென்றிருக்கலாம் என்பதும், வேறு தொழிற்படிப்புகளில் சேர்ந்திருக்கலாம் என்பதும் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதாததற்கு அமைச்சர் முன்மொழியும் காரணங்கள். 
இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நிலவும் சூழல் என்று நினைத்துவிடக் கூடாது. தமிழகத்திலும் இந்த சூழல் நிலவுகிறது என்பதுதான் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. மாணவர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்க "கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை' இங்கே நடைமுறையில் இருக்கிறது. அதனால், மாணவர்களின் வருகை குறைந்துவிட்டது என்பது பள்ளிக் கல்வித் துறைக்கு தெரியாமல் இருந்திருக்காது. அப்படியிருந்தும் அவர்களை அடையாளம் கண்டு வகுப்பறைக்குள் கொண்டுவர முடியாமல் போனது அதிகாரிகளின் குற்றமும், ஆசிரியர்களின் மெத்தனமும் அக்கறையின்மையும்தான் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. 
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆரம்ப கல்வியில் தொடங்கி "அனைவருக்கும் கல்வி' என்பதை சாத்தியமாக்க மத்திய } மாநில  அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. மதிய உணவு சத்துணவாக மாறி, இப்போது காலை உணவும் பள்ளிகளில் வழங்கப்படுவதன் நோக்கம் மாணவ } மாணவிகளின் ஆரோக்கியம் மட்டுமல்ல, அவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதும்கூட. அதுபோதாதென்று அடித்தட்டு, பட்டியலின மாணவ } மாணவியர் பலருக்கு பல்வேறு உதவித் தொகையும் உறைவிட வசதியும் கூட வழங்கப்படுகின்றன. 
உயர்நிலைக் கல்வியை எட்டும் மாணவ } மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி போன்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அப்படியிருந்தும் மாணவர்களை கல்விச்சாலைகளுக்கு ஈர்த்து, அவர்களுக்குக் கல்வியில் ஈடுபாட்டை ஏற்படுத்தி, தேர்வு எழுத வைக்க முடியவில்லை என்று சொன்னால் அது அதிகாரிகளின், ஆசிரியர்களின் இயலாமையையும் பொறுப்பின்மையையும்தான் வெளிச்சம் போடுகிறது. 
விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி போன்றவற்றை பெறுவதற்காகத்தான் பள்ளியில் இணைகிறார்கள் என்றால், மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லாப் பொருள்களை திரும்பப் பெறுவதுதானே நியாயம்? 
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு, அரசு வழங்கும் சலுகைகள் அல்ல. தன்னார்வ நிறுவனங்கள் அடித்தட்டு மக்களுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வியின் அவசியத்தை உணர்த்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். கல்வியை மாணவ } மாணவியருக்கு ஈர்ப்புடையதாக மாற்ற வேண்டும். பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போலவே, ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த வேண்டும். அடிப்படைக் கல்வியை வலுப்படுத்தாமல் உயர்கல்வியில் தமிழகம் தலைநிமிர முடியாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.