ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நெருக்கம் தளரலாகாது!

பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நம்கியால் வாங்சுக்-கின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் பல பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வாக அமைந்தது எனலாம்.

News image

பூடான்

Updated On :5 ஏப்ரல் 2023, 6:30 pm


பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நம்கியால் வாங்சுக்-கின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் பல பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வாக அமைந்தது எனலாம். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பில் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்ட பூடான் அரசர், அந்த நாட்டின் பிரதமர் எழுப்பியிருக்கும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமரச முயற்சியை மேற்கொண்டிருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கலாம். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார் பூடான் மன்னர். சீனாவுக்கும் பூடானுக்கும் இடையே எல்லைப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியுடனான மன்னரின் இப்போதைய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

அக்டோபர் 2021-இல், பூடானும் சீனாவும் எல்லை பிரச்னைக்குத் தீர்வு காண மூன்றடுக்குத் திட்டம் ஒன்றை ஏற்றுக்கொண்டன. பூடானின் வடக்குப் பகுதி, மேற்குப் பகுதி, டோக்லாம் பகுதி ஆகியவைதான் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்னைகள். 2017-இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டோக்லாமில் ஏற்பட்ட பதற்றம் குறிப்பிடத்தக்கது. அதனால் சீனாவுடனான பேச்சுவார்த்தையில் டோக்லாமை பூடான் விட்டுக்கொடுக்கும் எந்தவித சமரசம் ஏற்படுவதையும் இந்தியா விரும்பாது; ஏற்றுக்கொள்ளாது.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஜிப்மோச்சி சிகரம், ஜாம்ஃபெரி பள்ளத்தாக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாலைகள் அமைப்பதும், ஊடுருவ முற்படுவதுமான சீனாவின் முயற்சிகளை டோக்லாம் பதற்றத்தின்போது இந்தியா தடுத்து நிறுத்தியது. ஜாம்ஃபெரி பகுதியில் நுழைவதன் மூலம் இந்தியாவின் சிலிகுரி கணவாய் பகுதியில் நேரடியாக நோட்டமிடவும், தேவைப்பட்டால் ஆக்கிரமிக்கவும் முடியும் என்பது சீனாவின் ரகசிய எண்ணம். 

சிலிகுரி கணவாய் என்பது இந்தியாவையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் 20 கி.மீ. மட்டுமே நீளமுள்ள "கோழிக் கழுத்து' என்று அழைக்கப்படும் பகுதி. அதை கைப்பற்றுவதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துண்டித்து தன்னுடன் இணைத்துக்கொள்ள முடியும் என்பது சீனாவின் நீண்டநாள் கனவு.

பூடான் பிரதமர் லோடே ஷெரிங் கடந்த வாரம் ஐரோப்பாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது பெல்ஜியம் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஓரிரண்டு சந்திப்புகளில் சீனாவுடனான எல்லைப்புற பேச்சுவார்த்தைக்கு முடிவு ஏற்படும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். விரைவிலேயே சீனாவின் தொழில்நுட்பக் குழு ஒன்று எல்லை பிரச்னைக்குத் தீர்வு காண பூடானுக்கு வர இருப்பதாகவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதுவரையில் யாருக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை.

ஆனால், டோக்லாம் குறித்த அவருடைய கருத்து தில்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பூடான், இந்தியா, சீனா ஆகிய முத்தரப்பினரும் அமர்ந்து டோக்லாம் முச்சந்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் அவர். நாடு திரும்பிய பிறகு பூடான் பத்திரிகையில் அதுகுறித்து தெரிவிக்கும்போது, டோக்லாம் குறித்த பூடானின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறியிருந்தாலும், அதை இந்தியா முழுமையாக நம்புவதாக இல்லை. 

கடந்த சில ஆண்டுகளாகவே பூடானுடன் ராஜாங்க உறவை ஏற்படுத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டுகிறது சீனா. ராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் பூடானை தன்வசம் ஈர்ப்பதற்கு பல வளர்ச்சித் திட்டங்களை சீனா அறிவித்திருக்கிறது. 

சீனாவைப்போல பூடானுக்கு பொருளாதார உதவிகளை இந்தியாவால் வாரி வழங்கிவிட முடியாது. ஆனால் பூடானின் ஐந்தாண்டு திட்டங்கள் பெரும்பாலும் இந்தியாவின் உதவியுடன்தான் நடைபெறுகின்றன. இப்போதைய 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கு இந்தியா ரூ.4,500 கோடி வழங்கியிருக்கிறது. 

பூடானின் நீர் மின்நிலையத் திட்டங்களுக்கும், எரிசக்தி திட்டங்களுக்கும் இந்தியாவின் பங்களிப்பு ஏராளம். அதேபோல, கல்வித் துறையிலும் பூடான் இந்தியாவை நம்பித்தான் இருக்கிறது. பூடானில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் இந்தியர்கள். 

பூடான் பிரதமர் லோடேய் ஷெரிங் பெல்ஜியன் நாளேடான லா லிபரேக்கு அளித்த பேட்டியை இந்தியா சட்டை செய்யாமல் அடக்கி வாசித்துவிட்டது. ஒருவேளை மன்னரின் அரசுமுறைப் பயணம் நடைபெற இருக்கும் நிலையில் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இந்தியா நினைத்திருக்கலாம். அல்லது அரசுமுறைப் பயணத்தை கருத்து வேறுபாடுகளை அகற்றுவதற்கான வாய்ப்பாகக் கருதியும் மௌனம் சாதித்திருக்கலாம். பூடான் அரசரின் விஜயம் எந்த அளவுக்கு அந்த பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தியது என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இன்றைய சூழலில் ராஜாங்க நட்புறவு என்பது பொருளாதார அடிப்படையிலானது. அதே நேரத்தில் சீனாவின் நிதியுதவியும், பொருளாதார உதவியும் பல நாடுகளை கடனாளியாக்குகிறது என்பதும் கண்கூடு. கடந்த 20 ஆண்டுகளில் 22 வளரும் நாடுகளுக்கு சீனா 240 பில்லியன் டாலர் அளவிலான கடனுதவியை வழங்கியிருக்கிறது. அதன் கடன் வலையில் பாகிஸ்தானையும், இலங்கையையும்போல பூடானையும் சிக்கவைக்கும் சீனாவின் முயற்சியை இந்தியாவால் முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை. 

பூடானுடனான தனது நட்புறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாமலும், முறிந்துவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உண்டு. பூடான் அரசரின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கும் என்று நம்புவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.