நியாயமற்ற போராட்டம்!
ராஜஸ்தானில் கடந்த 17 நாள்களாக தனியார் துறை மருத்துவர்களுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த மருத்துவத்துக்கான உரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.


ராஜஸ்தானில் கடந்த 17 நாள்களாக தனியார் துறை மருத்துவர்களுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த மருத்துவத்துக்கான உரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இருதரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டிருக்கிறார்கள்.
ஏறத்தாழ இரண்டு வாரமா ராஜஸ்தான் மாநிலத்தில் நோயாளிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பெரும்பாலானவை செயல்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இல்லாத நிலையில், மாநிலம் முழுவதும் அவசர சிகிச்சைகூட பெற முடியாத நிலையில் நோயாளிகள் தவித்த காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்து வேதனை அளித்தன.
விரைவிலேயே ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மக்களின் ஆதரவைப் பெற அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவ சேவையை மக்களின் அடிப்படை உரிமையாக்கும் விதத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்தது. அந்த "மருத்துவத்துக்கான உரிமை' மசோதாவின்படி, எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பெற முடியும். மாநில அரசின் "சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் திட்ட'த்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்தாலும்கூட, பல தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை வழங்குவதில்லை என்கிற புகார் காரணமாக மருத்துவத்துக்கான உரிமை மசோதாவை அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்தார் மாநில சுகாதார அமைச்சர் பி.எல். மீனா.
இன்னும் சட்டமாகாத அந்த வரைவு மசோதா, தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்களையும், மருத்துவமனை நடத்துபவர்களையும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வைத்தது. இந்திய மருத்துவ சங்கமும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது. அந்த மசோதா, அவசர சிகிச்சை மட்டுமல்லாமல், அனைவருக்கும் இலவச பரிசோதனை, மருந்துகள், மருத்துவ ஆய்வுகள், ஆம்புலன்ஸ் ஊர்தி வசதி, சிகிச்சை ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.
அந்த மசோதாவில் சில குறைபாடுகளும் சட்ட ரீதியிலான ஓட்டைகளும் இருந்தாலும், அதன் மசோதாவின் நோக்கம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. நோயாளிகளுக்கான 20 உரிமைகளை அம்மசோதா பட்டியலிடுகிறது. அவற்றில் ஒப்புதலுக்கான உரிமை, சிகிச்சை முறை - பரிசோதனைகள் குறித்த விவரங்களுக்கான உரிமை, தங்களது தனிப்பட்ட விவரங்களுக்கான தன்மறைப்பு நிலை (பிரைவஸி) உள்ளிட்டவை அடங்கும். அடிப்படையில் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கும் கடமையை அரசு ஏற்றுக்கொள்கிறது.
தனியார் மருத்துவமனையைப் பொறுத்தவரை, அவர்கள் வழங்கும் அவசர சிகிச்சை உதவிக்கான கட்டணத்தை ராஜஸ்தான் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதைத் தடுப்பதுதான் மசோதாவின் நோக்கம். அவசர சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரும்பினால் அதே மருத்துவமனையில் கட்டணம் செலுத்தித் தொடரவும், இல்லையென்றால் அரசு மருத்துவமனைகளுக்கு மாறிக்கொள்ளவும் வழிவகை செய்கிறது இம்மசோதா.
இந்த மசோதா சட்டமாகுமேயானால் தங்களது தற்போதைய வணிக நடைமுறை பாதிக்கப்படும் என்று தனியார் துறை மருத்துவர்கள் அச்சப்படுகிறார்கள். இதன் மூலம் இலவச சிகிச்சை வழங்கக் கட்டாயப்படுத்தப்படுவோம் என்பதுதான் அவர்களது வாதம். தங்களது அன்றாடச் செயல்பாடுகளில் அரசின் தலையீடு அதிகரிக்கும் என்பதும் அவர்களது அச்சம்.
தமிழகத்தில் "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' என்கிற திட்டம் 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதன்படி, தமிழகத்தில் விபத்து அதிகமாக நடக்கும் 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு அருகில் இருக்கும் 679 அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலம் உடனடி சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை இந்தத் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 1.39 லட்சம் பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் 14,125 பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டம் விபத்துகளுக்கு மட்டும்தான் என்றால், ராஜஸ்தானின் மருத்துவத்துக்கான உரிமைத் திட்டம் அனைத்து அவசரகால சிகிச்சைகளுக்குமானது. மருத்துவ சிகிச்சையில் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே போராடும் கட்டம் மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே அரசியல் சாசனத்தின் 21-ஆவது பிரிவின்படி, எந்தவொரு நோயாளிக்கும் அவசர மருத்துவ சிகிச்சையை மறுக்க முடியாது. 1989-இல் உச்சநீதிமன்றம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 38-உம், 47-உம் கூட ராஜஸ்தான் அரசின் மருத்துவத்துக்கான உரிமை மசோதாவுக்கு வலுசேர்ப்பதாக அமைகின்றன.
இந்தியாவின் அரசு மருத்துவமனைகள் முறையாகவும், திறமையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படுமானால், இப்படியொரு மசோதாவுக்கான தேவையே எழுந்திருக்காது. உலக வங்கியின் கணக்குப்படி, 2019-இல் மருத்துவத்துக்கான செலவு தனிமனித வருமானத்தில் 54%. அப்படியிருக்கும்போது இதுபோன்ற மசோதாக்கள் வரவேற்கப்பட வேண்டுமே தவிர, நிராகரிக்கப்படக் கூடாது.
ஆறு மாத விவாதத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட நல்லதொரு மசோதா, தனியார் துறை மருத்துவர்களின் பிடிவாதத்தால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் இணைக்கப்பட்டு, மருத்துவத்துக்கான உரிமை மசோதா தேசிய அளவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...