நெருக்கடியில் மியான்மர்!
ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதன் மூலம் மேலும் ஓர் அநீதி அரங்கேறியுள்ளது.


ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதன் மூலம் மேலும் ஓர் அநீதி அரங்கேறியுள்ளது. விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை, அந்த நாட்டில் ஜனநாயகம் திரும்புவதற்கான வழிகளை முற்றிலுமாக அடைத்துள்ளது.
மியான்மரில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி 80 சதவீத வாக்குகளைப் பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக நடைபெற்றதாக வெளிநாட்டுப் பார்வையாளர்கள் கூறியபோதும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ராணுவம்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டில் அமைதியைக் குலைத்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின்பேரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
77 வயதாகும் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த சிறைத் தண்டனைகள் மூலம் அவர் ஆயுளுக்கும் வெளியே வர முடியாத சூழல்கூட ஏற்படலாம்.
சர்வதேச அழுத்தத்தைத் தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. வெளிநாட்டவரை திருமணம் செய்ததால் மியான்மர் அரசமைப்புச் சட்டப்படி சூகியால் அதிபராக முடியவில்லை. இருப்பினும் அரசியல் ஆலோசகர் என்கிற பெயரில் நாட்டின் அதிகாரபூர்வமற்ற அதிபராக சூகி செயல்பட்டு வந்தார்.
மியான்மரில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ரோஹிங்கயா மக்கள், பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், ராணுவத்தின் அடக்குமுறைக்கும் ஆளாகி வங்கதேசத்தை நோக்கி புலம்பெயர்ந்தபோது "மௌனம் காத்தார்' என்று சூகி மீது குற்றச்சாட்டு எழுந்தது. ரோஹிங்கயா இன மக்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானபோதிலும், படுகொலை செய்யப்பட்டபோதிலும் அவற்றைத் தடுக்க தவறிவிட்டார் என சர்வதேச அளவில் சூகி மீதான பெயருக்கு களங்கம் ஏற்பட்டபோதும், மியான்மர் மக்களைப் பொருத்தவரை அவர் இன்றுவரை பெரிதும் மதிக்கப்படுபவராகத்தான் இருக்கிறார்.
2020 பொதுத் தேர்தலிலும் ஆங் சான் சூகி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், நாடாளுமன்றம் கூடிய முதல் நாளிலேயே சூகி உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தகவல் தொடர்புக் கருவிகளை சட்டவிரோதமாக தனது வீட்டில் வைத்திருந்ததாக சூகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமார் இரு ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இப்போது கட்சிகள் கலைப்பு என்கிற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது ராணுவம்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் மறு பதிவு செய்துகொள்ள வேண்டுமென கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ராணுவம் அறிவித்தது. அந்த அவகாசம் மார்ச் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மறுபதிவு செய்துகொள்ளவில்லை எனக் கூறி ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் உள்பட 40 கட்சிகள் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தில் மறு பதிவு செய்யவில்லை எனில் அந்தக் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
நாட்டில் ராணுவ ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரியில் ராணுவம் அறிவித்தது. இதனால், ஜூலையில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு ராணுவ ஆட்சி நீடிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால் நிகழாண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ராணுவப் புரட்சி மூலம் மியான்மரில் மக்களாட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக மியான்மரில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அரசுக்கு எதிரான சிறு சிறு குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ராணுவத்துக்கும், இந்தக் குழுக்களுக்கும் இடையிலான மோதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த தேசிய ஜனநாயக லீக் உள்ளிட்ட முக்கியமான அரசியல் கட்சிகளைத் தடைசெய்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு ஒருவேளை நடந்தால் அது மியான்மரை மீண்டும் வரலாறு காணாத வன்முறைக்குத்தான் தள்ளும்.
"அரசியல் கட்சிகளுக்குத் தடை விதித்துள்ள மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்; நாடு ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டும்; ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென' ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்திருந்தாலும், இந்த விவகாரத்தில் மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக உலக நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்காதது ஏன் எனத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...