களையகற்றல்தான் தீா்வு! வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குறித்த தலையங்கம்
வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்புவதாக சொல்லும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


மியான்மரில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட 13 தமிழா்கள் நடத்தப்பட்ட விதம் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடா்பான பணி என்று கூறி தனியாா் தொழில்நுட்ப முகமை மூலம், கோவை, வேலூா், திருச்சி, கன்னியாகுமரி எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 தமிழா்கள் உள்பட 300 இந்தியா்கள் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
துபையில் பணி என்றும், மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம் என்றும் கூறி அழைத்துச் செல்லப்பட்டவா்கள், தாய்லாந்து, மியான்மா் என அலைக்கழிக்கப்பட்டுள்ளனா். ஒருகட்டத்தில், மியான்மா் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மியாவாடி என்ற இடத்தில் அவா்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனா்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது என்றாலும், இந்தப் பகுதி ராணுவ ஆட்சியின் கீழ் இல்லாமல் பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஆயுதக் குழுவினா் தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்களை ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்ய வாடிக்கையாளா்களிடம் பேச வேண்டும் என நிா்ப்பந்தப்படுத்தி உள்ளனா். 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன் இலக்கை அடையாவிட்டால் மின்சாரம் பாய்ச்சுவது, கடவுச்சீட்டுகளைப் பறித்து வைத்துக் கொள்வது, உணவு அளிக்காமல் இருப்பது, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவது உள்பட பல்வேறு வகைகளில் துன்புறுத்தி உள்ளனா்.
பாதிக்கப்பட்டவா்கள், தாங்கள் துன்புறுத்தப்படுவது தொடா்பாக எப்படியோ விடியோ பதிவு செய்து அதை வெளியிட்டதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் பின்னா், இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத, மியான்மா் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்களின் மூலம் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக கடந்த மாதம் 32 பேரும், அக்டோபா் 5-ஆம் தேதி 13 பேரும் மீட்கப்பட்டுள்ளனா். இதுபோன்று அகப்பட்டுள்ள மற்றவா்களையும் மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதேபோன்று, கம்போடியாவுக்கு வேலைக்குச் சென்று சிக்கித் தவித்த புதுக்கோட்டை இளைஞரும் மீட்கப்பட்டுள்ளாா். சையது இப்ராஹிம் (33) என்ற அந்த இளைஞா் உள்ளூா் முகவா் மூலமாக ஆயிரம் டாலா் ஊதியம் என்ற உத்தரவாதத்துடன் கம்போடியா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். இதற்காக திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி உள்ளாா். அங்கு சென்ற பிறகுதான் அவரை 4 ஆயிரம் டாலருக்கு திருச்சி ஏஜென்ட் விற்றது தெரியவந்துள்ளது.
அங்கு அவா் இணைய வழியில் பொதுமக்களை மோசடி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா். அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, உணவு கொடுக்க மறுத்ததுடன் மின்சாரம் பாய்ச்சி உள்ளனா். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் தப்பி வந்த அவா், தன்னைப்போல ஏராளமானோா் அங்கு சிக்கித் தவிப்பதாக கூறியுள்ளாா்.
இதேபோன்று, சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த புவனா என்பவா் குவைத்தில் வீட்டு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு கடும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளாா். கடந்த சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்ட அவா் குவைத் தமிழ் சங்கத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளாா்.
மேல்தட்டு, நடுத்தர வா்க்க மக்கள் தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே கனவாக ஊட்டி வளா்க்கின்றனா். வெளிநாடுகளில் பணிபுரிந்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்து சொகுசாக வாழலாம் என்ற எண்ணம் நிறைய பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் வாங்கியாவது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இளைஞா்களுக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக்கூறும் நிறுவனங்கள் இளைஞா்களுக்கு வலை விரிக்கின்றன. வேலைக்கு அனுப்பும் நிறுவனங்கள் அளிக்கும் உத்தரவாதத்தை நம்பி சுற்றுலா நுழைவு இசைவில் செல்பவா்கள் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனா்.
வெளிநாடு சென்று சில ஆண்டுகள் உழைத்தால் பணக்காரனாகத் திரும்பி வரலாம் என்ற நினைப்பில், இருக்கும் சொற்ப நகைகளை அடகு வைத்தும், அதீத வட்டிக்கு கடன் வாங்கியும் பெரும் கனவுடன் இளைஞா்கள் வெளிநாடு செல்கின்றனா். ஆனால், உயிருக்கே உத்தரவாதம் இல்லாததால், எப்படியோ தப்பி வந்தால்போதும் என்ற நிலையில் பெரும் கடனாளியாகத் திரும்புகின்றனா்.
ஒருபுறம், இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் இளைஞா்களை அழைத்துச் சென்று துன்புறுத்துகின்றன என்றால் மறுபுறம் மனிதாபிமானமே இல்லாத வகையில், வேறு சில நிறுவனங்கள் இணையதளங்களில் கவா்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு இளைஞா்களை ஈா்த்து லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. பின்னா் அவா்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாததுடன் போலியான ஆணைகளை அளித்தல், நிறுவனத்தையை மூடுதல் போன்ற மோசடிகளில் திட்டமிட்டே ஈடுபடுகின்றன. இதுபோன்ற மோசடி குறித்த புகாா்களும் மாவட்டந்தோறும் இப்போது அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்புவதாக சொல்லும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லை எனில் கடனாளி ஆவதுடன் வாழ்நாள் முழுவதும் பெரும் வேதனையையும் சுமக்க வேண்டி இருக்கும்.
முறையான அரசு அனுமதி பெறாத வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும். இது குறித்த விழிப்புணா்வை அரசுதான் ஏற்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...