லூலாவின் வெற்றி! | பிரேஸிலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்த தலையங்கம்


தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 21 கோடி மக்கள்தொகை கொண்ட உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடு, அமேஸான் மழைக் காடுகளின் தாயகம் என்பவை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுடன் சர்வதேச அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு பிரேஸில் என்பதே அதற்குக் காரணம்.
அதிபர் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார் தொழிலாளர் கட்சித் தலைவரும் முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டசில்வா. கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் இவர்கள் இருவர் உள்பட மொத்தம் 11 பேர் களத்தில் இருந்தனர். அதில் வெற்றிக்குத் தேவையான 50 % வாக்குகளை யாரும் பெறாத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த லூலா - பொல்சொனாரோ இடையே இரண்டாம் சுற்றுத் தேர்தல் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்றது.
தேர்தல் முடிவில் லூலா 50.9 % வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொல்சொனாரோ 49.1 % வாக்குகள் பெற்றார். இருமுறை அதிபராக இருந்த லூலாவின் அரசியல் மறுபிரவேசம் இத்தேர்தல் முடிவு என அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்க, தேர்தல் முடிவை ஏற்பதாகவோ மறுப்பதாகவோ கூறாமல் மௌனம் காக்கிறது பொல்சொனாரா தரப்பு. ஜனவரி 1-ஆம் தேதி புதிய அதிபராக லூலா பதவி ஏற்கவுள்ள நிலையில், ஆட்சி அதிகார மாற்றம் அத்தனை எளிதாக இருக்காது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.
பொல்சொனாராவின் தோல்விக்கு அவரேதான் காரணம் எனச் சொல்கிறது அவரது கடந்த கால செயல்பாடுகள். முன்னாள் ராணுவ கேப்டனான பொல்சொனாரோ தனது பேச்சின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவர். கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோதும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்து, கரோனா என்று ஒன்று இல்லவே இல்லை என பகிரங்கமாக அவர் தெரிவித்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமேஸான் மழைக் காடுகளை அழித்து பண்ணைகளையும், சுரங்கங்களையும் அமைப்பதே மக்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி என அவர் தெரிவித்த கருத்தும் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகின் ஆக்சிஜன் உற்பத்தியில் 6-9 % அமேஸான் மழைக் காடுகளில் உற்பத்தியாகிறது. இப்போது அமேஸான் காடுகளில் 17 % அழிக்கப்பட்டுவிட்டது. 2021-இல் பொல்சொனாரோ ஆட்சியில் கடந்த 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 13,000 ச.கி.மீ. வனப்பரப்பு அழிக்கப்பட்டது. பிரேஸிலின் எல்லையில் இருக்கும் அமேஸான் காடுகளில் என்ன செய்ய வேண்டும் என பிரேஸில் அரசுதான் முடிவு செய்யவேண்டும்; அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என பொல்சொனாரோ அடிக்கடி கூறிவந்தார்.
அமேஸான் மழைக் காடுகள் அழிப்பால், உள்நாட்டில் அவர் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டதாகக் கூற முடியாது. ஆனால், பொல்சொனாரோ ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4 % ஆகக் குறைந்து, விலைவாசி உயர்வும், வேலையிழப்பும் ஏற்பட்டது. பொல்சொனாரோ தோல்விக்கான முக்கியக் காரணம் பொருளாதார வீழ்ச்சிதான்.
புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள லூலா, தொழிற்சங்கவாதியாக இருந்து அரசியலில் நுழைந்தவர். 2003-ஆம் ஆண்டு, முதல் முறையாக அதிபரான அவர், தொடர்ந்து இரண்டாவது முறையும் வெற்றி பெற்று 2010 வரை அதிபராகப் பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியதற்காக மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கு பெற்றாலும், ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றதால் 2018-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். மொத்தம் 580 நாள்கள் சிறையில் இருந்த அவர், உச்சநீதிமன்றத்தால் 2021-ஆம் ஆண்டு அந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு அதிபராகவும் தேர்வு பெற்றுள்ளார்.
லூலாவின் வெற்றியை அமேஸான் மழைக் காடுகளின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றியாகவே உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்க்கின்றனர். அமேஸான் மழைக் காடுகள் அழிப்பை முற்றிலும் நிறுத்தப்போவதாக தேர்தல் பிரசாரத்திலேயே லூலா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையேயான சமநிலையைப் பேணி, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைச் சீரமைப்பது அவருக்குப் பெரும் சவாலாக இருக்கும். தேர்தலுக்கு முன்பு இரண்டாக பிளவுபட்டிருந்த நாட்டு மக்களை ஒன்றுபடுத்துவதும் லூலா முன்னெடுக்க வேண்டிய பெரும் பணியாக இருக்கும்.
பிரேஸிலின் 5-ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்கிறது இந்தியா. பிரேஸிலுக்கு இந்தியாவிலிருந்து கடந்த ஜூலையில் ஏற்றுமதி செய்யப்பட்ட வர்த்தகத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ரூ.9,200 கோடியாக உயர்ந்தது. அந்த வகையில் பிரேஸில் நமக்கு முக்கியமான நாடு.
பிரேஸிலின் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் உள்நாட்டு பிரச்னைகள் சார்ந்ததாகவே கருதப்படுகிறது. இருப்பினும், உலகெங்கிலும் இடதுசாரி சித்தாந்தங்கள் வரவேற்பை இழந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் இடதுசாரி தலைவர் அதிபராகியிருப்பது இடதுசாரிகொள்கைகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...