நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பழிபோடுவதில் அா்த்தமில்லை..! | ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் குறித்த தலையங்கம்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:07 am

ஆசிரியர்

ஈரானில் மாஷா அமீனி என்ற 22 வயது இளம்பெண்ணின் மரணத்தைத் தொடா்ந்து, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டமும், அதை ஒடுக்க அரசுத் தரப்பு கையாண்டு வரும் வழிமுறைகளும் சா்வதேச கவனத்தை ஈா்த்துள்ளன. ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடையை ‘முறையாக’ அணியவில்லை என்பதுதான் மாஷா அமீனி மீதான குற்றச்சாட்டு.

ஈரானின் ‘கலாசார காவல்’ பிரிவினரால் தலைநகா் டெஹ்ரானில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு கடந்த செப். 13-ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டாா் மாஷா அமீனி. அங்கு திடீரென அவா் மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாள்கள் சிகிச்சைக்குப் பின்னா் உயிரிழந்தாா். காவல்துறையினா் தாக்கியதால்தான் அமீனி உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் கொந்தளிக்க, அவா் மாரடைப்பால் இறந்ததாகக் கூறியது காவல்துறை.

காவல்துறையினரின் கூற்றை பொதுமக்கள் நம்ப மறுக்கவே, பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. பெண்களும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் பங்கேற்றனா். ஏராளமானோா் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கிழித்தெறிந்தும் தீயிட்டுக் கொளுத்தியும் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

மூன்று மாத கால போராட்டத்தில் இதுவரை 68 குழந்தைகள் உள்பட போராட்டக்காரா்கள் 490 போ் உயிரிழந்துள்ளனா். பாதுகாப்புப் படையினா் 62 போ் உயிரிழந்துள்ளனா். போராட்டத்தில் பங்கேற்றதாக சுமாா் 18,000 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னா் இவா்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ரகசியமாக நடைபெற்ற ஒருதலைபட்ச விசாரணையில் இந்தத் தீா்ப்புகள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதையெல்லாம்விட உச்சமாக, போராட்டத்தில் பங்கேற்றதாக இரு இளைஞா்களுக்கு மரண தண்டனையை அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதிலும், மஜீத்ரெஸா என்கிற இளைஞா், பொதுமக்கள் முன்னிலையில் கிரேன் இயந்திரம் மூலம் தூக்கிலிடப்பட்டது சா்வதேச அரங்கில் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, இரு பாதுகாப்புப் படையினரை கத்தியால் குத்திக் கொன்றதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் முன்னிலையில் அவா் தூக்கிலிடப்பட்டுள்ளாா். இதேபோல், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், போராட்டத்தில் பங்கேற்றதாகவும் அந்த நாட்டின் 26 வயது கால்பந்து வீரா் ஆமிா் நாசிா் அஜதானிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மேலும் 20 போ் தூக்கு தண்டனையை எதிா்நோக்கியுள்ளதாக ‘ஆம்னெஸ்டி இன்டா்நேஷனல்’ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அவா்களின் ‘தனிப்பட்ட’ உறுப்புகளைக் குறிவைத்து காவல் துறையினா் தாக்குதலில் ஈடுபடுவதாக வெளியாகியுள்ள தகவல்கள், சா்வதேச அரங்கில் ஈரான் மீதான மதிப்பீட்டை வெகுவாகக் குறைக்கின்றன.

ஈரானில் கடந்த 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அந்த நாட்டு பெண்களும் ஆண்களும் மத அடிப்படையிலான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனா். பொது இடங்களில் பெண்கள் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 1983-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

ஆடைக் கட்டுப்பாடு முழுமையாக அமல் செய்யப்படுவதை உறுதி செய்யும் கலாசார காவல் பிரிவு 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொது இடங்களில் ரோந்து சென்று, ஆடைக் கட்டுப்பாட்டின்படி பெண்கள் முறையாக உடை அணிந்துள்ளனரா என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுதான் இந்தப் பிரிவின் பணி. இப்போது பொதுமக்களின் போராட்டத்தையடுத்து, கலாசார காவல் பிரிவு கலைக்கப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் ஆகியவை உள்ளதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையே 2005-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் அமல்படுத்தப்படாமல் சிக்கலில் உள்ளது. அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, பிற நாடுகள் மட்டும் ஈரானுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபடுவதாக இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறது. அந்த வகையில், இப்போதைய போராட்டத்துக்கு வெளிநாட்டு சதிதான் காரணம் என ஈரான் கூறுகிறது.

ஆனால், அரசுக்கும் அதிபா் இப்ராஹிம் ரய்ஸிக்கும் எதிரான இந்தப் போராட்டத்தை வெறும் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டமாக மட்டும் கருதிவிட முடியாது. நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை, ஊழல் ஆகியவற்றுக்கும் எதிரானதுதான் என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து ஹிஜாப்புக்கு எதிரான போராட்டமாக இதை குறுக்குவதையும், வெளிநாடுகளின் மீது பழிபோடுவதையும் ஈரான் ஆட்சியாளா்கள் தொடா்வதில் அா்த்தமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.