இது உடனடித் தேவை!
சிறிது காலமாக சற்றே மட்டுப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை வணிகம் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கியிருக்கிறது.


சிறிது காலமாக சற்றே மட்டுப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை வணிகம் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. உள்ளூர் மற்றும் மாநில அளவில் விளம்பரங்களும், தொலைக்காட்சி பரிந்துரைகளும் பரவலாகி வருகின்றன. யூ-ட்யூப் போன்ற சமூக வலைதளங்களிலும் அதிக காட்சித்தொகுப்புகள் இடம் பெறுகின்றன.
இந்த வேகத்துக்குக் காரணம், மத்திய அரசினால் அண்மையில் கொண்டுவரப்பட்ட மனை வணிக சட்டம் இன்னும் மாநில அளவில் அமலுக்கு வரவில்லை என்பதுதான். மத்திய அரசின் மனை வணிகச் சட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் ஏற்று வழிமொழிந்து, இந்த சட்டத்தின்படி மாநில அளவிலான வீடு, மனை ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்பட்டு, 500 சதுர அடி அல்லது எட்டு அடுக்குமாடிகளுக்கு அதிகமாக வீடுகட்டும் திட்டங்கள் அனைத்தும் இந்த ஆணையத்தில் பதிவு செய்யப்படும் என்கிற நிலைமை வந்தால், தற்போது சந்தையில் உள்ள பல வீட்டுமனை நிறுவனங்களால் அந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவே முடியாது.
வீடு, மனை வணிக ஒழுங்காற்று ஆணையம் நடைமுறைக்கு வந்தால், அந்த திட்டத்துக்கான வரைபடங்கள், சந்தை மதிப்பு, பெறப்பட்ட டெபாசிட் என பல்வேறு நிபந்தனைகள் நுகர்வோருக்கு சாதகமாக இருக்கிறது என்பதோடு, நிலத்தின் உண்மையான சொந்தக்காரர் யார் என்பதைத் தெளிவாக காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த சிக்கல் ஏற்படும் முன்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அவற்றை விற்று விடுவதில் தீவிரம் காட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் வீடு, மனை வணிக ஒழுங்காற்று ஆணையம் அமையும் முன்பாகவே, குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மனைகளையும் விற்றுவிட வேண்டும் என்பதிலும், பெருவாரியான பணத்தை திரட்டி எடுத்துவிட வேண்டும் என்பதிலும் மிகப்பெரிய வருவாய் ஈட்டிவிட வேண்டும் என்பதிலும் நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.
வீடு, மனை வணிகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடக்கின்றன. அரசாணையை மீறி, நீர்நிலைகள் பலவும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வேறு பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. உரிமையாளர்களை மாற்றி மாற்றி, அரசை ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. பல நேர்வுகளில் நில விற்பனை தொடர்பான தகராறுகள் கொலையில் முடிகின்றன. ஒசூர் நிலஅளவையர் கொலை வழக்கு இதற்கு ஓர் உதாரணம்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்தன என்றும், தற்போது இவற்றில் பல ஆயிரம் ஏரிகள் வீடுகளாக, அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டுவிட்டன என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 39,202 ஏரிகள் மூலம் தமிழ்நாட்டில் 390 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைத்து விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால் தற்போதுள்ள ஏரி குளங்கள் மூலம் 250 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே சேமிக்க முடிகிறது. அதாவது 140 டி.எம்.சி. தண்ணீரை நாம் ஆக்கிரமிப்பால் இழந்துவிட்டோம். இப்போது காவிரியில் 209 டி.எம்.சி.யும் முழுமையாக கிடைக்கவில்லை என்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், முழுமையான தண்ணீர் கர்நாடகத்தால் தரப்படுமானால் அதை சேமித்து வைக்க நம்மால் முடியாது என்பதுதான் உண்மை.
தற்போது தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம், கட்டுமானம் செய்யப்படாமல் காலியாக உள்ள வீட்டுமனைகள், கட்டு
மானம் முடிவுறாமல் இருக்கும் திட்டங்கள் அனைத்தையும் மறுஆய்வுக்கு உட்படுத்தி, இவை யார் யாருக்குச் சொந்தமானவை என்பதை உறுதி செய்வதும், சம்பந்தப்பட்ட இடங்கள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அல்ல என்பதை உறுதி செய்வதும்தான். இதை உடனடியாக செய்தாக வேண்டும்.
உள்ளாட்சிக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தால் அதற்கான அனுமதியை ரத்து செய்து, நிலத்தை அரசு மீட்டெடுத்தலும் இன்றியமையாதது. பல உள்ளாட்சிகளில் புலச்சுவடிகள் (லேண்டு ரெக்கார்டு) தொலைக்கப்பட்டு விட்டன. அதன் உள்நோக்கம் அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும்கூட, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுத்தல் இயலாத காரியம் அல்ல. அரசு முனைப்புடன் செயல்பட்டால் புறம்போக்கு நிலங்களை மீட்டெடுப்பது அசாத்தியமானது அல்ல.
நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பவை அரசு வளாகங்கள் அல்லது மாற்றிடம் பெறக்கூடிய அரசு கட்டடங்கள் என்றால் அவற்றை இடம் மாற்றி, மீண்டும் அதே இடத்தில் அதே பகுதி மக்களைக் கொண்டு ஏரி குளங்களை, மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்குதல் வேண்டும். இயலாவிட்டால் அருகிலேயே அதே கொள்ளளவு உள்ள நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்.
நிலப்பறிப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாமும் அப்படியே உள்ளன. பாதிக்கப்பட்டு, மிரட்டப்பட்டதால் நிலத்தை இழந்தவர்கள் இன்னமும் அதற்கான இழப்பீட்டை, நீதியைப் பெற இயலவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட்டாக வேண்டும்.
நீர்நிலைப் பகுதிகள் வீட்டுமனைகளாக மாறாதபடி தடுத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்தல், ஏரிகளை பழைய எண்ணிக்கையில் மறுகட்டமைப்பு செய்தல் ஆகியவைதான் தமிழகத்தில் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் காக்கும்முன்னேற்பாடுகள். அதை இப்போதே தொடங்கியாக வேண்டும். நீர்நிலைகளில் வீட்டுமனை வாங்கி ஏமாறாமல் இருக்க, வீடு, மனை வணிக ஒழுங்காற்று ஆணையம் விரைவில் உருவாக்கப்படவேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...