அறிக்கை தீர்வாகாது!
காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான பிரச்னைதற்போது தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் வன்முறைப் போராட்டமாக உருமாறியுள்ளது


காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான பிரச்னை
தற்போது தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் வன்முறைப் போராட்டமாக உருமாறியுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள், 40-க்கும் மேற்பட்ட லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டு, கர்நாடகத்தில் வசிக்கும் எண்ணற்ற தமிழர்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
போக்குவரத்து பாதிப்பு ஒருபுறம் இருக்க, ஒரு லட்சம் தமிழர்கள் உயிர் அச்சத்தால் ஒசூர் எல்லையைக் கடந்து, பாதுகாப்புக்கான இடம் தேடி தமிழக எல்லைக்குள் வந்து குவிந்துள்ளனர். பாகிஸ்தான் பிரிவினைக்கு நிகரான அராஜகங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. காவிரி பாசனத்தில் தங்களுக்குத் தண்ணீர் தீர்ந்துவிடும் என்று வருந்துகிற விவசாயிகள் இந்த அராஜகத்தில் ஈடுபடவில்லை. இந்தக் கலவரத்தை அரசியலுக்காகவும், சுய ஆதாயத்துக்காகவும் அரசியல் பின்னணியுடைய கும்பல் தூண்டிவிட்டு நடத்துகிறது என்பதே உண்மை.
காவிரி விஷயத்தில் கர்நாடக, தமிழக மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் விதத்தில் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதேபோல, தொலைக்காட்சிகளும் வன்முறைக் காட்சிகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பி மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. பதற்றமான பிரச்னைகள் தலைதூக்கும்போது சமூக வலைதளங்களும், 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளும் சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை மாநில அரசு தடுத்திருக்க முடியும். 15,000 கனஅடி தண்ணீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோதே,
கன்னட அமைப்புகளின் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையின் பாதுகாப்பில் கொண்டு வந்திருந்தால், கலவரமே தொடங்கியிருக்காது. ஆனால் இந்த விவகாரத்தைச் சட்டம் } ஒழுங்கு பிரச்னையாக மாற்றி, நீதிமன்றத்தில் அதைக் காரணம் காட்டித் தீர்ப்பில் சலுகை பெறலாம் என்கின்ற உள்நோக்கம் கர்நாடக அரசுக்கு இருந்ததால்தான் அது வன்
முறையை வேடிக்கை பார்த்தது.
இதை உறுதி செய்யும் வகையில், நீதிமன்றத்திலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை முன்வைத்து, தண்ணீர் வழங்கும் தீர்ப்புக்குத் தடை கோரியது கர்நாடக அரசு. ஆனால் நீதிமன்றம், கர்நாடகத்தின் இந்தக் கூற்றை ஏற்க மறுத்துவிட்டது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க கர்நாடகம் விடுத்துள்ள கோரிக்கை ஒருவித அதிகார தொனியில் இருப்பதாக நீதிமன்றம் குறை கூறியது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை சுமுகத் தீர்வுக்கு வழிவகுக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றம், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்பதால் இன்னும் கடுமையாக சட்டம் - ஒழுங்கை குலைப்போம் என்கின்ற நோக்கில்தான், மீண்டும் செப்டம்பர் 12-ஆம் தேதி, தீர்ப்பு வெளியான சில மணித்துளிகளில், கர்நாடகத்தில் வன்முறை தீவிரமடைந்து, தீயிட்டுக் கொளுத்தும் நடவடிக்கைகள் தொடங்கின. ஒரு தனியார் பேருந்து பணிமனை முழுவதுமே தீக்கிரையாக்கப்பட்டதும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்துத் தடை காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட லாரிகள் எரிக்கப்பட்டதும், நீதிமன்றம் சட்டம் - ஒழுங்கு பிரச்னையைக் கருத்தில் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடுதானே தவிர வேறல்ல.
கர்நாடக அரசு உண்மையாகவே வன்முறைக்கு உடன்படாத அரசாக இருந்திருக்குமேயானால், நீதிமன்றத்தில் இத்தகைய
கண்டனம் எழுப்பப்பட்ட உடனேயே, மாநிலம் முழுவதிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் அப்போதும் அதனை கர்நாடக அரசு செய்யாமல் தவிர்த்தது. எல்லா வன்முறையும் நிகழ்ந்து முடிந்து, காவல் துறை வாகனத்தைக் கொளுத்த முயன்றபோதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதுவரை, கன்னட அமைப்புகளின் தீவிரமான போராளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. வன்முறையைக் கட்டுப்படுத்தும் முன்ஜாக்கிரதை முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை.
எல்லா கலவரமும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்தது கர்நாடக அரசு. இப்போது மத்திய ராணுவ உதவியைக் கோரும் கர்நாடக அரசு, ஞாயிற்றுக்கிழமையே கோரி
யிருக்க வேண்டாமா? அதைத்தானே முதல்வர் சித்தராமையா செய்திருக்க வேண்டும்?
நீதிமன்றமும் காவிரி மேற்பார்வைக் குழுவும் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க நினைத்தால் அதிரடி அழுத்தம் தருவதற்காகத்தான் இந்த வன்முறைகள் நடத்தப்படுவதை கர்நாடக அரசு மெளனமாக அனுமதித்தது என்பதுதான் உண்மை.
தமிழ்நாட்டில் சில அமைப்புகள் கர்நாடகத்துக்குப் பதிலடியாகத் ஒரு சில வாகனங்களைத் தாக்க முற்பட்டதும், கன்னடர் நடத்தும் கடை, ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுத்ததும் மனதை வாட்டுகிற செய்திகளாக இருப்பினும், பெரும் வன்முறைத் தீ தமிழகத்தில் பரவவில்லை என்பது ஆறுதலளிக்கிறது. கர்நாடக அரசைப் போலல்லாமல் பொறுப்புடன் நடந்து கொண்ட தமிழக அரசையும், காவல் துறையையும் பாராட்டியாக வேண்டும்.
அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் அறிக்கை வெளியிடுவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் கர்நாடக அணைகள் மீதான உரிமையைக் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றுங்கள். இரு மாநில விவசாயிகள் சேர்ந்து பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கையாக மாற்றுங்கள். அதுதான் தீர்வாக இருக்கும். வெறும் அறிக்கைவிடுவதால் பயனில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...