இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

குட்டெரெஸூக்கு வாழ்த்துகள்!

மிகப்பெரிய சோதனைகளையும், பின்னடைவுகளையும் சந்திக்கும் எந்தவொரு நாடோ...

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:27 pm

ஆசிரியர்


மிகப்பெரிய சோதனைகளையும், பின்னடைவுகளையும் சந்திக்கும் எந்தவொரு நாடோ, அமைப்போ, அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி, சூழலை மாற்றி அமைக்கும் திறமைசாலி அல்லது தீர்க்கதரிசியைத்தான் எதிர்நோக்கும். வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்கள், நலிவடைந்து கொண்டிருக்கும் நிறுவனத்தை நிமிர வைக்கும் திறமைசாலியைத்தான் விரும்புவார்கள். ஜனநாயகத்தில் வாக்காளர்களும் சரி, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்கிற நம்பிக்கையைத் தோற்றுவிப்பவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றில் மட்டும்தான், இதற்கு நேரெதிரான மனநிலை அதன் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும்போது காணப்படும்.
உலகில் பிரச்னைகள் அதிகரித்து, சர்வதேச அளவில் குழப்பம் ஏற்படும் சூழலில் உலக நாடுகள் எதுவுமே அதற்குத் தீர்வு காணக்கூடிய, சவாலை எதிர்கொண்டு சமாளிக்கக் கூடிய ஒருவரை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்து அவரிடம் முழு அதிகாரத்தையும் அளித்ததாக சரித்திரமே இல்லை. எந்தப் பிரச்னைக்கும் துணிந்து முடிவு எடுக்கத் தயாராக இல்லாத ஒருவரையே பொதுச் செயலாளராக்க, ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினர் நாடுகள் விரும்பும். அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது.
ஐ.நா. சபை பாதுகாப்புக் குழுவின் ஒருமனதான ஆதரவுடன் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரும் ஐ.நா. சபையின் அகதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான அன்டோனியோ
குட்டெரெஸ் அடுத்த பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டுடன் தற்போதைய பொதுச் செயலாளரான பான் கீ மூனின் பதவிக்காலம் முடிவடைந்ததும் குட்டெரெஸ் 2017 ஜனவரி 1-ஆம் தேதி ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்பார்.
15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில், சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். ஐ.நா.வின் பொதுச் சபையிலோ, பாதுகாப்புச் சபையிலோ நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நிராகரித்து ரத்து செய்யும் அதிகாரம் இந்த ஐந்து நாடுகளுக்கு உண்டு. அங்கோலா, எகிப்து, ஜப்பான், மலேசியா, நியூஸிலாந்து, செனகல், ஸ்பெயின், உக்ரைன், உருகுவே, வெனிசுலா ஆகிய பத்து நாடுகளும் பாதுகாப்புக் குழுவில் இரண்டு ஆண்டு காலம் மட்டுமே பதவி வகிக்கும் தாற்காலிக உறுப்பினர்கள்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் 13 நாடுகள் அன்டோனியோ
குட்டெரெஸ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்தன. இரண்டு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதிகாரபூர்வமில்லாத வாக்கெடுப்பு முறையில் நியூஸிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், பல்கேரியா நாட்டின் கிறிஸ்டாலினா ஜார்ஜியா ஆகியோரைவிட அதிகம் ஆதரவு பெற்று
குட்டெரெஸ் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த முறையும் பெண் ஒருவர் ஐ.நா.வின் பொதுச்
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் போயிருக்கிறது.
தற்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அடிப்
படையில் வெளியுறவுத் துறை அதிகாரி. அவரைப்போல அல்லாமல், முன்னாள் போர்ச்சுகல் பிரதமரான குட்டெரெஸ், அரசியல் ரீதியாகச் சிந்தித்து செயல்படக் கூடியவர். மற்றபடி, இவரும் இதற்கு முந்தைய ஐ.நா. பொதுச் செயலாளர்களைப்போலவே வல்லரசு நாடுகளை அனுசரித்துப் போகக் கூடியவர்தானே தவிர, தனக்கென ஒரு தனித்துவத்தையோ, தனியான செல்வாக்கையோ தேடிச் செல்பவரல்ல. அதனால்தான் இவரை "நிராகரிப்பு உரிமை' உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ஆதரித்திருக்கிறார்கள்.
ஐ.நா. சபையின் செயல்பாடுகளும், அதன் முக்கியத்துவமும், எந்த அளவுக்கு ஐந்து வல்லரசு நாடுகளும் குறிப்பிட்ட பிரச்னையில் ஒத்துப் போகின்றன அல்லது கருத்து வேறுபடுகின்றன என்
பதைப் பொறுத்துத்தான் அமையும். அந்த ஐந்து நாடுகளுடன், சமீப காலமாக, இந்தியா, பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளின் நிலைப்
பாடும்கூட கருத்தொற்றுமைக்கு அவசியமாகிறது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் இதை மனதில் வைத்துக் கொண்டுதான் செயல்பட்டாக வேண்டும்.
பனிப்போர் முடிவடைந்து, சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட காலகட்டத்தில், ஐ.நா.வின் செயல்பாடுகளில் புதிய உத்வேகம் தென்பட்டது. அதற்குக் காரணம் பல்வேறு பிரச்னைகளில்
அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒத்துப்போனதுதான். இப்போது நிலைமை அதுவல்ல. பிரச்னைக்குப் பிரச்னை வல்லரசு நாடுகளிடையேகூடக் கருத்தொற்றுமை இல்லாத நிலைமை. இப்படிப்பட்ட சூழலில் அரசியல்வாதியான அன்டோனியோ குட்டெரெஸ் போன்ற ஒருவரால்தான் நெளிவு சுளிவு
களுடன் வல்லரசு நாடுகளை சமாளித்துக் கொண்டு ஐ.நா. சபையையும் கட்டிக் காத்து நடத்த முடியும்.
ஐ.நா. சபையை நடத்துவதற்கு மிக அதிகமாகப் பணம் தருவது அமெரிக்காதான். ஐ.நா. சபையின் மொத்த செலவில் 22% அமெரிக்கா தருகிறது எனும்போது, அமெரிக்காவை அனுசரித்துப் போகும் ஒருவர்தான் பொதுச் செயலாளராக இருந்தாக வேண்டும். அந்தப் பொறுப்பை அன்டோனியோ குட்டெரெஸ் திறம்படச் செய்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இந்தியாவிடம், அன்டோனியோ குட்டெரெஸூக்குத் தனி ஈர்ப்பு உண்டு. அவரது மனைவி கோவாவில் பிறந்தவர் என்பதால், குட்டெரெஸ் தம்பதியர் அடிக்கடி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்பவர்கள். ஐ.நா. சபையின் 9-ஆவது பொதுச் செயலாளராகப் பதவி ஏற்க இருக்கும் குட்டெரெஸூக்கு, சமாதானத்தையும் அமைதியையும் விழையும் உலக மக்களின் சார்பில் நமது வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.