உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்வதிலும், இந்திய ஜனநாயகம் துடிப்புடன் செயல்படு
கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால், நமது ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால், உண்மையிலேயே நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா என்கிற ஐயப்பாடு எழுகிறது.
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நமது காஷ்மீரத்தின் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசு இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தனது பின்னடைவை சமாளித்து, அப்படி எந்தவிதத் தாக்குதலும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் சப்பைக்கட்டுக் கட்டலாம். ஆனால், அதை இந்தியாவில் இருப்பவர்களே வழிமொழிவது எப்படி சரியாகும்?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியபோது அதை வரவேற்ற காங்கிரஸும், ஏனைய எதிர்க்கட்சிகளும் இப்போது பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான விடியோ ஆதாரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று கூறுவது போன்ற அரசியல் அநாகரிகமும், முட்டாள்தனமும் வேறு எதுவுமே இருக்க முடியாது.
மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறார். முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த
ப. சிதம்பரமோ, இப்படி வெளிப்படையாக விளம்பரப்படுத்திக் கொண்டு இந்திய அரசு நடத்தி இருக்கும் துல்லியத் தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பகைமையை அகற்றுவதற்கு எந்த அளவுக்கு உதவும் என்று கேள்வி எழுப்பி, தாக்குதல் நடத்தியதை விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி இதுகுறித்து என்ன சொல்கிறது என்று பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. முதலில், அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய காங்கிரஸ் இப்போது தான் ஏதோ தவறிப் போய் அரசைப் பாராட்டி விட்டதுபோல பதற்றப்படுகிறது.
இந்தியா இப்படி பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது புதிதல்ல என்றும், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது 2008, 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் இதுபோலப் பல துல்லியத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் காங்கிரஸ் இப்போது தெரிவிக்கிறது. தாக்குதல் நடத்தியதை வெளிப்படுத்தி நரேந்திர மோடி அரசைப் போல அரசியல் ஆதாயம் தேடத் தாங்கள் விரும்பவில்லை என்றும், சற்று தாமதமாகத் தெரிவிக்கிறது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வச் செய்திக்குறிப்பு. அதுமட்டுமல்ல, இப்படி நடத்தப்படும் தாக்குதல்களை விளம்பரப்படுத்தினால் அது பாகிஸ்தானை மேலும் எரிச்சலூட்டி, அந்த நாட்டுடன் சமாதானம் பேசுவதற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடும் என்பதால் தங்களது அரசு மெளனம் காத்ததாகக் கூறுகிறது காங்கிரஸ்.
தாங்கள் ஆட்சியில் இருந்தபோது தாக்குதல் நடத்தியது குறித்து ஏன் வெளிப்படுத்தவில்லை என்பதற்கு காங்கிரஸ் கூறும் காரணங்கள், இப்போது தாக்குதல் குறித்த ஆதாரங்களை அரசு வெளிப்படுத்தாததற்கும் பொருந்தும் என்பது காங்கிரஸுக்குத் தெரியாதா, இல்லை அரசியல் ஆதாயத்துக்காகத் தெரியாதது போல நடிக்கிறதா? இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய, இந்திய ஜனநாயகத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக வழிநடத்திய காங்கிரஸ், அரசின் ராஜதந்திர நடவடிக்கையை விமர்சிப்பது என்பது அதன் தலைமை எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது.
காங்கிரஸ்தான் இப்படி என்றால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும் கூட அரசு விடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று அறிக்கை விடுத்து, பாகிஸ்தானிய தொலைக்காட்சி நேயர்களை மகிழ்விக்கும் அவலத்தை என்னவென்று சொல்ல? இப்படி இந்தியாவுக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் எழுவதைத்தானே பாகிஸ்தான் விரும்பும்.
ஆளும் பா.ஜ.க. தலைவர்களாவது பொறுப்புடன் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. பாகிஸ்தான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்னும் மயக்கம் தெளியாத நிலையில் இருக்கும் நோயாளியாகத் தோற்றமளிக்கிறது என்றும், ஹனுமானுக்குத் தனது பலம் தெரியாமல் இருப்பதுபோல இருந்த இந்திய ராணுவம் இப்போதுதான் தனது சக்தியைப் புரிந்து கொண்டு வீறு கொண்டு எழுந்திருக்கிறது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகிறார். மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அரசின் முடிவையும், ராணுவத்தின் செயல்பாட்டையும் விமர்சிப்பது என்பது பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்றது என்று கூறுகிறார். இவர்கள் எல்லாம் தெரிந்துதான் இப்படிப் பேசுகிறார்களா?
நல்லவேளையாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமைச்சரவையைக் கூட்டி, ராணுவ நடவடிக்கை குறித்து நாம் அரசியல் ஆதாயத்துக்காக மார்தட்டிக் கொள்ளக்கூடாது என்று தனது அமைச்சரவை சகாக்களை எச்சரித்திருப்பதுடன், இந்தப் பிரச்னை குறித்து அனுமதிக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டுமே கருத்துத் தெரிவிக்கலாம் என்று கட்டுப்பாடும் விதித்திருக்கிறார். ஜனநாயகத்தில் அரசைக் கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால், ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிப்பதும், விவாதப் பொருளாக்குவதும் பொறுப்பற்ற செயல். இதை நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

