

முதலில் குஜராத், பிறகு ஹரியாணா இப்போது மகாராஷ்டிரம் என்று இட ஒதுக்கீட்டுப் பிரச்னை மீண்டும் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ராஜஸ்தான் அரசு உயர் ஜாதியினரில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கும் இட ஒதுக்கீடு என்று எப்போது அறிவித்ததோ அப்போது முதலே இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ஒவ்வொரு மாநிலமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
ஏனைய மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சி தொடங்கி வலுப்பெற்றதற்கும், மகாராஷ்டிரத்தில் இப்போது எழுப்பப்பட்டிருப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. மகாராஷ்டிர மாநிலத்தில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிப் போராட்டத்தில் இறங்கி இருக்கும் மராத்தாக்களுக்கு எந்தவித அரசியல் பின்னணியோ, போராட்டத்திற்கான தலைமையோ கிடையாது.
கடந்த ஜூலை 13 அன்று மகாராஷ்டிர மாநிலம் அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள கோபார்டி என்கிற கிராமத்தில் நடந்த சம்பவம்தான் இப்போது காட்டுத் தீயாகப் பரவியிருக்கிறது. புதிய மோட்டார் சைக்கிள் வாங்கியதைக் கொண்டாடிக் கொண்டிருந்த மதுபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் 15 வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். குற்றுயிரும் குலையுயிருமாக அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது,மக்கள் அதிர்ந்தனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் அந்தச் சிறுமி மரணமடைந்து விட்டார்.
மராத்தா வகுப்பைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்றாலும்கூட, மராத்தா இனத்தவர்களின் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருந்த அதிருப்தி, இட ஒதுக்கீடு கோரிக்கையாக வெடித்துக் கிளம்பியது.
மராத்தாக்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வேளாண் குடிமக்கள். வசதி படைத்த நிலச்சுவான்தார்கள். மொத்த மக்கள்தொகையில் 34% எண்ணிக்கை பலம் கொண்டவர்கள். 1960 மே 1-ஆம் தேதி தனி மாநிலமாக மகாராஷ்டிரம் உருவான பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகள் மராத்தா இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வராக இருந்திருக்கின்றனர்.
அரசியலிலும் நிர்வாகத்திலும் மட்டுமல்ல, மாநில சர்க்கரைக் கூட்டுறவு ஆலைகள் அவர்கள் வசம்தான் இருக்கின்றன. இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த விவசாயிகள் அவர்கள்தான். அது கூட்டுறவுப் பால் சங்கங்களானாலும் கூட்டுறவு வங்கிகளானாலும் அவை மராத்தாக்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. சொல்லப் போனால், இடைநிலை ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மகாராஷ்டிர அரசியலையும், நிர்வாகத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் மராத்தாக்கள்தான்.
குஜராத்தில் படேல்தார்களின் போராட்டத்தை ஹார்திக் படேல் தலைமையேற்று நடத்தியது போல, மராத்தாக்களின் போராட்டத்தை யாரும் வழிநடத்தவில்லை. ஒளரங்காபாதில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட முதலாவது பேரணி எதிர் பாராத திருப்பமாக அமைந்தது. வெறும் 5,000 பேர் மட்டும்தான் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த அந்தப் பேரணியில்,லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டபோது, எந்த அளவுக்கு மராத்தாக்கள் கோபாவேசமாக இருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டது.
ஊருக்கு ஊர் பேரணிகள் நடைபெறத் தொடங்கின. எந்தவித கோஷமோ, வன்முறையோ கிடையாது. வாயில் துணியைக் கட்டிக் கொண்டு, கோரிக்கைகளைப் பதாகைகளாகப் பிடித்துக் கொண்டு இந்த மெளனப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. இந்தப்பேரணிகளை முன்னின்று நடத்துவது பெண்கள்தான் என்பது அதைவிட வியப்பான ஒன்று. கலந்து கொண்டோரில் ஏறத்தாழ 30%-க்கும் அதிகமானவர்கள் பெண்களாக இருப்பது அதைவிட ஆச்சரியம்.முந்தைய காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் அரசு 2014 தேர்தலுக்கு முன்னால், மராத்தா இனத்தவரைக் கவர்வதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் உட்பிரிவாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மராத்தாக்களுக்கு 16% ஒதுக்கிச் சட்டம் இயற்றியது. இப்போது மராத்தாக்களின் "மெளனப் பேரணிகள்' முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்று அந்தச்சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது.இரண்டாவது கோரிக்கை, கோபார்டி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது. மூன்றாவது கோரிக்கை, வேளாண்மை சார்ந்த மராத்தா இனத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது.
சமூக அந்தஸ்துள்ள, வேளாண்மை சார்ந்த படேல், ஜாட், மராத்தா சமூகங்கள் இட ஒதுக்கீடு கேட்டுத் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவதில் வியப்படைய ஒன்றுமில்லை. விவசாயம் லாபகரமாக இல்லாத நிலையில், அவர்களுக்கு அரசு வேலைஅவசியமாகிறது. ஏனைய நலிந்த சமுதாயப் பிரிவினர் இட ஒதுக்கீடு முறையில் வேலைகள் பெறும்போது, உயர் ஜாதியாகவும் இல்லாமல் பட்டியல் இனத்தவராகவோ, பிற்படுத்தப்பட்டவ
ராகவோ இல்லாமல் தாங்கள் ஒதுக்கப்படுவதால் அவர்கள் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பை ஏற்படுத்தாத வளர்ச்சி ஒருபுறம், நலிந்து வரும் விவசாயம் இன்னொரு புறம் என்று இடைநிலை ஜாதியைச் சேர்ந்த வேளாண் குடிமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் இந்த இடஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள்.
இந்தியா விடுதலை அடைந்தபோது, பட்டியல் இன மக்களுக்கு நூறாண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரமாக, தாற்காலிக ஏற்பாடாக இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர், காலாகாலம் எங்கள் சமுதாயத்தை ஊன்றுகோலில் நிற்க வைத்து விடும் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அதை எதிர்த்தார். ஆனால், பண்டித நேருவும், சர்தார் படேலும் வற்புறுத்தியதற்கு இணங்கத்தான் பத்து ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டார்.
சுதந்திரம் அடைந்தபோது, ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டை, தமிழகம் தவிர எந்த மாநிலமும் விரும்பவில்லை. அரசுப் பதவிகளிலும், கல்வியிலும் 15% இட ஒதுக்கீடு தர உள்துறை அமைச்சர் சர்தார் படேல் முன்வந்தபோது, முஸ்லிம் தலைவர்கள் அதை நிராகரித்தனர். எங்களை ஏனைய பிரிவினரிலிருந்து இந்தச் சலுகை வேறுபடுத்திக் காட்டிவிடும் என்று மறுத்தனர். சமூக அநீதியைக் களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடே ஒரு சமூக அநீதியாக மாறிவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது சாத்தியமாகாமல் இருக்கலாம். ஆனால், இட ஒதுக்கீட்டில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, பயனடைந்தோரே மீண்டும் மீண்டும் பயனடையும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையென்றால், இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு கோரும் போராட்டங்கள் பரவும் ஆபத்து ஏற்படும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தில்லியில் அரசு ஊழியரைத் தாக்கி தங்கச் சங்கிலி பரிப்பு: 3 போ் கைது!

ஆயுஷ்மான பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் விதவை, ஊனமுற்றோா் திட்டப் பயனாளிகள்! தில்லி அரசு முடிவு!!

ஃபரீதாபாத்தில் தனியாா் நிறுவன பெண் ஊழியரின் உடல் சீலிங் ஃபேனில் தூக்கிய தொங்கிய நிலையில் கண்டெடுப்பு!

காலமானாா் முன்னாள் அமைச்சா் வெள்ளூா் வீராசாமி
வீடியோக்கள்

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

