கடமையும் பொறுப்பும்
ஐந்தாவது உறுப்பு நாடாக இலங்கையும் பின்வாங்கிவிட்ட நிலையில், நவம்பரில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை பாகிஸ்தான் ஒத்திவைத்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.


ஐந்தாவது உறுப்பு நாடாக இலங்கையும் பின்வாங்கிவிட்ட நிலையில், நவம்பரில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை பாகிஸ்தான் ஒத்திவைத்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இன்னும் தாமதித்திருந்தால் மொரீஷஸூம், சீனா என்ன சொல்லுமோ என்கிற தயக்கத்தில் இருந்த நேபாளமும்கூட பாகிஸ்தானில் நடக்கும் "சார்க்' மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு எடுத்து பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.
"சார்க்' அமைப்பின் எட்டு உறுப்பு நாடுகளில் பாகிஸ்தான் தவிர்த்த ஏனைய ஏழு நாடுகளையும் ஒருங்கிணைத்துப் புதிதாக ஓர் அமைப்பை ஏற்படுத்த இந்தியா முன்வருவதுகூடத் தவறில்லை. தெற்காசிய நாடுகளின் நலனுக்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அப்படியொரு அமைப்பு இருப்பது அவசியம். "சார்க்' அமைப்பை மட்டுமல்ல, வளர்ச்சி அடையும் நாடுகளின் கூட்டமைப்பான அணிசாரா நாடுகள் இயக்கத்தை வலுவாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு.
அமெரிக்கா, சோவியத் யூனியன் என்கிற இரண்டு வல்லரசு நாடுகளும் பனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வல்லரசு நாடுகளுடனும் இணையாத, சுதந்திர நாடுகளைக் குறிக்க 1953-இல் ஐ.நா. சபையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் "அணிசாரா நாடுகள்' என்பது. 1954-இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்த வார்த்தையைப் பயன்படுத்தி, அணிசாரா நாடுகளின் அடிப்படைக் கொள்கையாக "பஞ்சசீலம்' என்கிற ஐந்து கோட்பாடுகளைக் குறிப்பிட்டார்.
1955-இல் பாண்டூக்கில் இந்தோனேஷிய அதிபர் சுகர்ணோவால் கூட்டப்பட்ட ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மாநாட்டில் எகிப்து அதிபர் நாசர், இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, யூகோஸ்லோவிய அதிபர் ஜோசப் டிட்டோ, கானா அதிபர் குவாமே நிக்ருமா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில்தான் முதன் முதலில் வல்லரசு நாடுகளின் பனிப்போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் உலக சமாதானத்திற்காக நேருவின் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது.
அணிசாரா நாடுகளின் தலைவர்கள் மாநாடு யூகோஸ்லோவியத் தலைநகர் பெல்கிரேடில் 1961 செப்டம்பரில் நடந்தது. 1970-இல் ஜாம்பியா தலைநகர் லுசாகாவில் நடந்த தலைவர்களின் கூட்டத்தில் தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது, வல்லரசு நாடுகளுடன் எந்தவித ராணுவ ஒப்பந்தத்திலும் இணைத்துக் கொள்ளாமல் இருப்பது ஆகிய இரு விதிமுறைகளையும் இந்த நாடுகளின் தலைவர்கள் வகுத்துக் கொண்டனர். 1976-இல் கொழும்பில் நடந்த கூட்டத்தில்தான் "அணிசாரா நாடுகள் இயக்கம்' என்கிற பெயரும் அமைப்பும் உருவானது.
இந்த அணியில் இருக்கும் நாடுகள், ஆரம்பம் முதலே ஏதாவது வல்லரசைத் தங்களது பொருளாதாரத்திற்காகவும், ராணுவத் தேவைக்காகவும் சார்ந்திருந்தாலும்கூட, பனிப்போர் காலகட்டத்தில், வளர்ச்சி அடையும் நாடுகள் என்கிற ஒற்றுமையுடன் அணிசாரா நாடுகளின் இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொண்டன. சோவியத் யூனியன் பிளவுபட்டது, பனிப்போர் முடிவுக்கு வந்தது போன்ற நிகழ்வுகள் அணிசாரா நாடுகள் இயக்கத்திற்கு மிகப்
பெரிய பின்னடைவை ஏற்படுத்தின. 1991 பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிறகு இந்தியாவும் இதில் அக்கறை காட்டுவதைக் குறைத்துக் கொண்டபோது, அணிசாரா நாடுகள் இயக்கம் பலவீனப்பட்டு விட்டது.
கடந்த மாதம் வெனிசூலாவில் கூடிய அணிசாரா நாடுகள் இயக்கத்தின் 17-ஆவது மாநாட்டில் முக்கியமான தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. கடந்த முறை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 16-ஆவது மாநாடு நடந்தபோது 27 அதிபர்கள், 2 மன்னர்கள், 7 பிரதமர்கள், 9 துணைத்தலைவர்கள் என்ற உலகத் தலைவர்களின் அணிவகுப்பே நடந்தது. இந்த முறை, உறுப்பு நாடுகளில் பாதிக்கு மேல் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட நாடுகளும், ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்த பிரதிநிதி
களில் ஒருவரை அனுப்பி வைத்ததே தவிர, தலைவர்கள் அதிகமாகக் கலந்துகொள்ளவில்லை.
"நாம்' அமைப்பின் பல குறிக்கோள்கள், இன்றைய உலகச் சூழலில் வளர்ச்சி அடையும் நாடுகளின் தேவைக்கு எதிராக இருக்கின்றன என்பது உண்மையே. எளிதான நுழை உரிமை (விசா), உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் செயல்பாடுகளில் பங்கு, ஐ.நா. பாதுகாப்பு சபையின் சீர்திருத்தம் உள்ளிட்ட கருத்துகளில் இந்தியா தொடங்கி பல நாடுகளுக்கு உடன்பாடு உண்டுதான். ஆனால், பல அணிசாரா நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் பிரச்னையில் இருப்பதால், இந்தியா, நைஜீரியா, எகிப்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தலைமையேற்று நடத்தத் தயங்குகின்றன.
இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை பாகிஸ்தான் எதிர்த்ததால் 17-ஆவது மாநாட்டில் அதை நிறைவேற்றவில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவாவது அணிசாரா நாடுகள் இயக்கம் வலுப்பெற்றாக வேண்டும். இது ஐ.நா.வைப்போல வலுவானதாக இல்லாவிட்டாலும், எண்ணிக்கை பலத்தால் சக்திவாய்ந்ததாக இருக்க முடியும்.
ஐ.நா. சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் நாடுகள், 55% உலக மக்கள்தொகையினர், 150-க்கும் அதிகமான உறுப்பு நாடுகள் கொண்ட அணிசாரா நாடுகளின் இயக்கம் பலவீனப்படுவது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லதல்ல. "சார்க்', "நாம்' ஆகிய இரு அமைப்புகளும் இந்தியாவால் தொடங்கப்பட்டவை. இவற்றிற்கு தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...