மாநகரத்தில் உள்ள கழிவுநீர் ஓடைகளை மேம்படுத்த ரூ.11.2 கோடி ஒதுக்கீடு செய்து மாநகராட்சியின் மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநகராட்சி நினைத்திருந்தால் பல திட்டங்களை முடுக்கிவிட்டு முடித்திருக்க முடியும். ஆனால், எந்த சுறுசுறுப்பும் காட்டாமல் தூங்கி வழிந்துவிட்டு, இப்போது தனது பதவிக்காலம் முடியப்போகும் வேளையில் விழித்துக்கொண்டு சுறுசுறுப்பாகிறது என்பதுதான் உண்மை நிலை.
ரூ.1,243 கோடியில் சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலங்களுக்கான கழிவு நீர்த்திட்டம் தீட்டப்பட்டு தேங்கிக் கிடக்கிறது.
ஜப்பான் சர்வதேசக் கூட்டுறவு அமைப்பின் உதவியுடன், ரூ.1,717 கோடி செலவில் திருவெற்றியூர், மணலி, மாதவரம் மண்டலங்களை இணைத்து 320 கி.மீ. நீளத்தில் குசஸ்தலை ஆற்றுடன் இணைக்கும் கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கப்படவே இல்லை. ஜப்பானுடன் தொடர்ந்து பேசி இந்தத் திட்டத்திற்காக உதவியைப் பெறுவதில் மாநகராட்சி காட்டும் மெத்தனம்தான் இதற்குக் காரணம்.÷280 கி.மீ. நீளத்திலான வடிகால் திட்டம், வளசரவாக்கம், ஆலந்தூர், அம்பத்தூர் மண்டலங்களில் ஏற்படுத்த உலக வங்கியிடம் ரூ.1,100 கோடிக்கு அனுமதி பெற்றாகிவிட்டது. ஆனால், அதில் 5% வேலைதான் இதுவரை நடைபெற்றிருக்கிறது.
மழைநீர் வடிகால்களையும், கழிவுநீர் வடிகால்களையும் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அரசு போதிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் இல்லை. மழைநீர் வடிகால் துறை 2012-13இல் ரூ.136.05 கோடி, 2013-14இல் ரூ.215 கோடி, 2014-15ஆம் ஆண்டு ரூ.450 கோடி என்று மாநகராட்சிக்கு வாரி வழங்கி இருக்கிறது. அப்படி இருந்தும் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் சென்னை மாநகரம் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது என்றால் அதற்குக் காரணம் மாநகராட்சி எந்தவொரு வடிகாலையும் முறையாகப் பராமரிக்காததுதான்.
நவம்பர் மாதம் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதே, உடனடியாக அத்தனை ஓடைகளையும், வடிகால்களையும் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டாமா? சென்னை நகரிலுள்ள எந்தவொரு ஓடையும் இன்றும் கழிவுப் பொருள்கள் மண்டிக்கிடக்க, செடி, கொடி புதர்கள் நிறைந்திருக்க தூர் வாரப்படாமல்தான் காட்சி அளிக்கிறது. கால்வாய்களின் கதியும் அதுதான்.
சென்னை நகரத்துக்கான கழிவுநீர் வெளியேற்றும் திட்டம் 1910-இல் உருவாக்கப்பட்டுவிட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் மக்கள்தொகை ஏறத்தாழ ஏழு லட்சமாக இருக்கக்கூடும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன்தான் இங்கே கழிவுநீர்க் குழாய்களும், சாக்கடைகளும் ஏற்படுத்தப்பட்டன. மீண்டும் 1958-இல் போடப்பட்ட விரிவாக்கத் திட்டமும், வருங்கால வளர்ச்சியை உத்தேசித்துத்தான் செயல்படுத்தப்பட்டது.
கூவம், அடையாறு, குசஸ்தலை என்று மூன்று ஆறுகள் இருப்பது போதாதென்று, சென்னையில் பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய் என 16 கால்வாய்கள் இருக்கின்றன. சென்னையில் 98% பகுதிகளில் கழிவுநீர் குழாய்களும், சாக்கடைகளும் அமைக்கப்பட்டு, அவை ஏதாவது ஒரு கால்வாயிலோ, ஆற்றிலோ கலக்க வழிகோலப்பட்டுள்ளன. இத்தனை இருந்தும், மழை பெய்தால் வெள்ளம் வடியாமல் தேங்குகிறது என்றால், அதற்குக் காரணம் மாநகராட்சி அந்தக் கால்வாய்களையும், குழாய்களையும், சாக்கடைகளையும் முறையாகப் பராமரிக்கவில்லை என்பதுதான்.
மழைக்காலத்துக்கு முன்னால், அத்தனை ஓடைகளையும், கால்வாய்களையும் சுத்தம் செய்வதும், மழைநீர், கழிவுநீர் வடிகால் குழாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பதும் நிர்வாகம் செய்ய வேண்டிய முன்னேற்பாடு. ஆனால், கணக்குக் காட்டப்படுமே தவிர, முறையாகச் செய்யாமல் விடுவதுதான் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மழைநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக, ஏறத்தாழ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான திருட்டுக் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து அகற்ற ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? முறைகேடாகத் திருட்டுக் கழிவுநீர் இணைப்புகள் இருந்தால், ஜாமீனில் வெளிவர முடியாத கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டு ஆறுமாத சிறை தண்டனை என்று சட்டம் இயற்றினால், திருட்டு இணைப்புகள் தானாகவே அகற்றப்பட்டுவிடுமே, ஏன் செய்வதில்லை?
கடந்த நவம்பர் மாதம் பெருமழையில், நியாயமாகப் பார்த்தால் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ்டவுன், புரசைவாக்கம் போன்ற சென்னையின் பழைய பகுதிகள்தான் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் உருவான வேளச்சேரி போன்ற புறநகர்ப் பகுதிகள்தான் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அதற்குக் காரணம், முறையான கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்படாததும், பராமரிக்கப்படாததும், திருட்டு இணைப்புகள் அனுமதிக்கப்பட்டதும்தான்.
இவ்வளவு பெரும் மழைக்குப் பின்னும் ஓடைகள் சுத்தம் செய்யப்படவில்லை. கூவம், அடையாறு ஆறுகளின் கரைகளில் அடுக்குமாடிக் கட்டடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, கழிவுநீர் வாய்க்கால்களை செப்பனிட, அதிகரித்த நிதி ஒதுக்கீடு செய்து என்ன பயன் கிடைக்கப்போகிறது?
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி சென்னையில் அதிக இடங்களில் வெற்றி பெறாததற்குக் காரணம், நவம்பர் மாதம் பெய்த மழையும், மழை வெள்ளமுமல்ல, சென்னை மாநகராட்சி செயல்படாமல் இருந்ததுதான். மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்!