மோடி அரசு தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. எது குறித்தும் கருத்துத் தெரிவிக்காத மெளனியாக இருக்கிறார் என்பதுதான் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் குறித்த விமர்சனமாக இருந்தது என்றால், பேசிக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடி குறித்த கருத்தாக இருக்கிறது. 45.6 மணிக்கு ஒருமுறை ஏதாவது பேசுகிறார், அறிக்கை விடுகிறார் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தொடர்ந்து இடைவிடாது மாநிலத் தேர்தல்களில் பிரசாரம் செய்ய நேர்ந்ததால்கூடப் பிரதமர் மோடி அதிகம் பேசுகிறார் என்கிற விமர்சனம் எழுந்திருக்கலாம்.
நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனை, கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காதது மட்டுமல்ல, ஊழலையும் முறைகேடுகளையும் தடுக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தியதுதான். அலைக்கற்றை, நிலக்கரி போன்ற முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எல்லா ஒதுக்கீடுகளிலும் இணைய ஏலமுறை மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தியது மோடி அரசின் மிகப்பெரிய சாதனை.
பொருளாதாரத்தைப் பொருத்தவரை, 2013-14இல் 4.5% ஆகத் தொய்ந்துபோய் இருந்த வளர்ச்சி 7.6% ஆக உயர்ந்திருக்கிறது. 14% ஆக இருந்த விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2014-இல் 1.7% ஆக இருந்தது, 2016-இல் 12.6% ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு இதுவரை இல்லாத அளவில் 363.12 பில்லியன் டாலரை (ரூ.23,59,500 கோடி) எட்டியிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளும் இந்தியா எல்-நினோவின் தாக்கத்தால் மிகக் கடுமையான இரண்டு வறட்சிகளை சந்தித்த நிலையிலும், பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, வளர்ச்சிப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பது என்பது பாராட்டுக்குரிய செயல்பாடுதான், சந்தேகமே இல்லை. 2013-14இல் தேசிய நெடுஞ்சாலை அமைத்தல் 3,500 கி.மீ. இருந்தது. இப்போது 10,000 கி.மீ.ஆக அதிகரித்திருக்கிறது.இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும் சரி, எரிசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் சரி, ராணுவத்தை நவீனப்படுத்துவதிலும் சரி நரேந்திர மோடி அரசின் இரண்டாண்டு சாதனைகள், முந்தைய 10 ஆண்டுகளில் நடைபெறாத அளவிலான சாதனைகள் என்பதுதான் நிஜம்.
நரேந்திர மோடி அரசு குறித்த மிகப்பெரிய விமர்சனம் அவர் பொழுது புலர்ந்து, பொழுது சாய்ந்தால் புதிதாக ஏதாவது திட்டத்தை அறிவித்த வண்ணம் இருக்கிறார் என்பது. இந்தத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குக் கடந்த இரண்டாண்டுகளில் ஏறத்தாழ ரூ.1,000 கோடிக்கு மேல் அரசு விளம்பரத்துக்காகச் செலவிட்டிருக்கிறது. ஆனால், இத்தனை திட்டங்களையும் அரசால் முறைப்பட செயல்படுத்த முடியுமா என்பதுதான், மெத்தனமான நிர்வாகத்தை மட்டுமே பார்த்திருக்கும் இந்திய மக்களுக்கு சந்தேகமாக இருக்கிறது.÷
ஜன்தன் யோஜனா, தூய்மை இந்தியா, அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமர் கிராமப்புற வீடுகட்டும் திட்டம், திறன்மிகு இந்தியா, எழுக இந்தியா, செயல்படு இந்தியா, முத்ரா வங்கி, இந்தியாவில் தயாரிப்பு என்று பல நல்ல திட்டங்களை மோடி அரசு அறிவித்திருப்பது உண்மை. ஆனால், இதில் ஜன்தன் யோஜனா, தூய்மை இந்தியா, அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமர் கிராமப்புற வீடுகள் போன்ற சில திட்டங்கள் மட்டுமே மக்களை எட்டியிருக்கின்றன, பயன்படத் தொடங்கி இருக்கின்றன.
28 கோடி புதிய வங்கிக் கணக்குகள் ஜன்தன் யோஜனா திட்டத்தில் தொடங்கப்பட்டு, வங்கியில் ரூ.36,000 கோடி சேமிப்பு செய்யப்பட்டிருப்பது அசுர சாதனை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்பது மோடி அரசின் முனைப்பு.
கடந்த ஆண்டில் 8 லட்சம் புகார்கள் இணையம் மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் பிரதமர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டு, அதில் 80% புகார்களுக்கு மூன்றே வாரத்தில் தீர்வு பெறப்பட்டிருக்கும் அதிசயம் நடந்திருப்பது பலருக்கும் தெரியாது. பொதுமக்கள் பிரதமர் அலுவலகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிகிற அளவில் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் இருப்பது பாராட்டுக்குரிய முன்னேற்றம்.
கடந்த இரண்டாண்டுகளில் 40 நாடுகளைச் சுற்றிவந்து இந்தியாவுக்கு உலக அரங்கில் மரியாதை ஏற்படுத்தித்தந்தும்கூட, பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, மிக விரைவாக வளரும் பொருளாதாரம் என்று எதிர்பார்க்கப்படும் நிலைக்கு உயர்த்தியும்கூட, நரேந்திர மோடி அரசு அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டுகளையும் பெற முடியாமல் போனது ஏன் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.
இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த, வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல, ஊழல், முறைகேடுகள் அற்ற நிர்வாகத்தை நிலைநிறுத்தத்தான் நரேந்திர மோடிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளுக்குத் தொடர்பே இல்லாத மதமாற்றத் தடைச் சட்டம், மாட்டிறைச்சிப் பிரச்னை போன்றவை, நரேந்திர மோடியின் சாதனைகளை மங்கச் செய்கின்றன.
ஆண்டுதோறும் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தேவையற்ற சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல், ஒரு நல்ல மேய்ப்பராக இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதுதான் பிரதமராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நரேந்திர மோடியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்!