ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தீபா கர்மாக்கரின் சாதனை!

நமது ஊடகங்களில் அரசியலுக்கும், திரைத்துறைக்கும், ஓரளவுக்குப் பொருளாதாரத்துக்கும் தரப்படும் முக்கியத்துவம் இதர பல பிரிவுகளுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக, விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால், அதிகம் பணம் புரள்கிறது, விளம்பரம் செய்யப்படுகிறது என்பதாலோ என்னவோ கிரிக்கெட்டும், டென்னிஸும் தான் பரவலாக ஊடக வெளிச்சம் பெறுகின்றன.

Updated On :2 மே 2016, 8:31 pm

நமது ஊடகங்களில் அரசியலுக்கும், திரைத்துறைக்கும், ஓரளவுக்குப் பொருளாதாரத்துக்கும் தரப்படும் முக்கியத்துவம் இதர பல பிரிவுகளுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக, விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால், அதிகம் பணம் புரள்கிறது, விளம்பரம் செய்யப்படுகிறது என்பதாலோ என்னவோ கிரிக்கெட்டும், டென்னிஸும் தான் பரவலாக ஊடக வெளிச்சம் பெறுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 23 வயது தீபா கர்மாக்கரின் சாதனை வெளியில் தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை.
 தீபா கர்மாக்கர் என்கிற பெண் தனது மனவலிமையாலும், அசுரத்தனமான பயிற்சியாலும் ரியோ டி ஜெனிரோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் பந்தயத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொள்ள தகுதி பெற்றிருக்கிறார் என்பது சாதாரண விஷயமல்ல. அதிலும், அதிகமாக வெளியில் தெரியாத "ஜிம்னாஸ்டிக்ஸ்' பிரிவில் பங்கு பெறுவதற்கு அவர் தகுதி பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய சாதனை.
 ஒலிம்பிக் போட்டியில் "ஜிம்னாஸ்டிக்ஸ்' பிரிவில் தேர்வு பெற்றிருக்கும் முதல் இந்தியப் பெண் என்பது தீபா கர்மாக்கரின் தனிச்சிறப்பு. இதற்கு முன்னால், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டென்னிஸ், குத்துச் சண்டை, ஹாக்கி, பளு தூக்குதல் போன்ற பல பிரிவுகளில் இந்தியர்கள் ஒலிம்பிக் சாதனை செய்திருக்கிறார்கள். ஆனால், "ஜிம்னாஸ்டிக்ஸ்' பிரிவில் இந்தியப் பெண் ஒருவர் கலந்துகொள்ளப் போவது இதுதான் முதல் முறை.
 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஒருவர் "ஜிம்னாஸ்டிக்ஸ்' பிரிவில், ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 11 இந்தியர்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளனர். 1952-இல் 2 பேரும், 1956-இல் 3 பேரும், 1964-இல் 6 பேரும் கலந்து கொண்டார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே ஆண்கள்.
 "ஜிம்னாஸ்டிக்ஸ்' என்பது உடலை வளைத்துச் செய்யப்படும் சாகச விளையாட்டு. சர்க்கஸ் கூடாரங்களில் பெண்கள் நீண்ட காலமாக இந்த சாகசத்தைச் செய்து கைதட்டல் பெறுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அதை ஒரு விளையாட்டாக, முறையான தேர்ச்சி பெற்று யாரும் சாதனை படைத்ததில்லை.
 சீனர்கள், கொரியர்கள், ஜப்பானியர் போன்றவர்கள் இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் தலை சிறந்தவர்கள். அவர்களுக்கு இணையாக நாம் இளம் திறமைசாலிகளை அடையாளம் கண்டு தேர்ச்சி அளிக்கத் தவறிவிட்டோம். சர்க்கஸில் சாதனை புரியும் பெண்களையே முறையாகத் தேர்ச்சி அளித்திருக்கலாம். நாம் செய்யவில்லை; ஏனோ தெரியவில்லை.
 உடலை வளைத்துச் செய்யும் "ஜிம்னாஸ்டிக்ஸ்' சாகசத்தில் மிகவும் சிரமமானது "வால்ட்' அல்லது கரணம் என்கிற சாகசம். அதிலும்கூட "ப்ரோடுனோவா வால்ட்' என்பது மிகவும் கடினமான சாகசம். உயரக் குதித்தெழும்பி காற்றிலேயே இரண்டு குட்டிக்கரணங்கள் போட்டு பாதங்களைப் பதித்து நிற்க வேண்டும். தீபா கர்மாக்கர் போல, வெற்றிகரமாக இந்த "ப்ரோடுனோவா வால்ட்' சாகசத்தைச் செய்து காட்டியவர்கள் நான்கே பேர்தான்.
 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், 2015 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் "வால்ட்' பிரிவில் தீபா கர்மாக்கர் பதக்கம் வென்றிருக்கிறார். கிளாஸ்கோவில் நடந்த 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் "வால்ட்' பிரிவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தார் தீபா கர்மாக்கர்.
 "வால்ட்' பிரிவில் மட்டுமல்லாமல், "பாலன்ஸ் பீம்', "அன்ஈவன் பார்', "ப்ளோர் எக்சர்சைஸ்' ஆகியவற்றிலும் தீபா கர்மாக்கர் கலந்து கொண்டிருக்கிறார் என்றாலும், அவரது தனிக்கவனம் ஆரம்பம் முதலே "வால்ட்' பிரிவில் தான் இருந்து வந்தது. "வால்ட்' பிரிவில் பதக்கம் வென்ற நாடுகள் அமெரிக்கா, ரஷியா, சீனா, ருமேனியா ஆகியவைதான். ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் தீபா கர்மாக்கர் சாதனை படைத்தால் இந்தியாவும் அந்த நாடுகளின் பட்டியலில் சேரக்கூடும்.
 தீபா கர்மாக்கரின் சாதனையின் தனிச்சிறப்பு, அவருக்கு இயற்கையான "வால்ட்' சாகசம் செய்வதற்கான வடிவமைப்பு இல்லை என்பதுதான். "ஃப்ளாட் புட்', அதாவது,அவருக்குத் தட்டையான பாதங்கள். பாதங்கள் சமமாக இருத்தல், உயரத் துள்ளி எழும்புவதற்கு உதவியாக இருக்காது. அந்தத் தடையைத் தனது தீவிரப் பயிற்சியால் தகர்ந்தெறிந்திருக்கிறார் இந்தப் பெண். எப்படியும் ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொண்டாக வேண்டும் என்கிற தீபா கர்மாக்கரின் வெறிதான் அவரது சாதனைக்குக் காரணம்.
 திரிபுராவின் தலைநகரான அகர்தலாவைச் சேர்ந்த தீபா கர்மாக்கரின் தந்தை துலால் பளுதூக்குதல் வீரர். பலருக்கும் பளுதூக்குதலில் பயிற்சி அளித்து வருபவர். தனது மகள் "ஜிம்னாஸ்டிக்ஸ்' பிரிவில் ஈடுபாடு காட்டுகிறார் என்று தெரிந்ததும் அவரை முறையான பயிற்சியாளரை வைத்துப் பயிற்சி அளித்திருக்கிறார்.
 தீபா கர்மாக்கரின் சாதனை அவரது தனிப்பட்ட சாதனை. மேலை நாடுகளில் "ஜிம்னாஸ்டிக்ஸ்' வீரர்கள் பயிற்சி செய்ய எவ்வளவோ வசதிகள் செய்து தருகிறார்கள். இங்கே பயிற்சி முறையாகத் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பிலிருந்தும், அதிகாரிகள் தரப்பிலிருந்தும் அவர்களுக்குப் போதிய ஊக்கமும் உற்சாகமும் தரப்படுவதில்லை.
 விளையாட்டு குறித்த அரசின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டால் ஊருக்கு ஒரு தீபா கர்மாக்கர் இந்தியாவில் உருவாகக்கூடும். நாம் விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டுமே கருதுகிறோம். அது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் என்பதை உணராமல் இருக்கிறோம்!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.