நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ரத்தம் - எய்ட்ஸ் - தீர்ப்பு!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை அடுத்த கல்யாண் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தத்தில் "எய்ட்ஸ்' தொற்று இருந்திருக்கிறது. அந்தப் பெண்மணி தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் எதிர்பாராத தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:29 pm

ஆசிரியர்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை அடுத்த கல்யாண் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தத்தில் "எய்ட்ஸ்' தொற்று இருந்திருக்கிறது. அந்தப் பெண்மணி தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் எதிர்பாராத தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

சாதாரணமாக, இதுபோன்ற வழக்குகளில், நுகர்வோருக்கு இழப்பீடாக மொத்தமாக ஒரு தொகை வழங்கும்படி உத்தரவிடுவதுதான் வழக்கம். விபத்து உள்ளிட்ட வழக்குகளிலும் அதுதான் நடைமுறை. ஆனால், இந்த வழக்கில், அந்த நோயாளியின் ஆயுட்காலம் முடியும்வரை அந்த மருத்துவமனை அவருக்கு மாதம் ரூ.12,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்.

பொதுவாக இதுபோன்ற அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாவோர் அல்லது அவரது நெருங்கிய உறவினர்களிடமிருந்து, அவர்களது ஒப்புதலையும் பின்விளைவுகளுக்கு மருத்துவமனையோ, மருத்துவரோ காரணமில்லை என்றும் எழுதி வாங்குவது வழக்கம். நோயாளிகளிடம் அவர்கள் தரும் ஒப்புதல் குறித்து யாரும் விளக்கிச் சொல்வதில்லை. அப்போதைக்கு குணமானால் போதும் என்கிற மனநிலையில் இருக்கும் நோயாளிகள் எதையும் படித்துப் பார்க்காமலும், புரிந்து கொள்ளாமலும் கையொப்பமிட்டு வருவதுதான் நடைமுறை வழக்கம். முடிவெடுக்க முடியாத பரிதவிப்பில் இருக்கும் மனநிலையில் ஒருவரிடம் ஒப்புதல் வாங்கியிருந்தால் அது செல்லாது என்று ஏற்கெனவே பல தீர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்த பிரச்னை முன்னதைவிடச் சிக்கலானது. இதுவரை மருத்துவ சிகிச்சை என்பது ஒரு சேவையாக மட்டுமே கருதப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களை நாடி சேவைக் குறைபாடுகளுக்கு நியாயம் கேட்க முடியும் என்பதாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போதைய தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் உத்தரவின் மூலம், "ரத்தம்' என்பது ஒரு சந்தைச் சரக்காகக் கருதப்பட்டு, அது வணிகச் சட்டத்தின் கீழே கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரத்தம் என்பது ஒரு திசு. திசுக்கள் இணைந்து ஓர் உறுப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால், உறுப்புகளை மாற்றுவது போன்ற சிகிச்சைகளும் ஆணையத்தின் பார்வையில் சேவையல்ல, அதுவும் வணிகமாகக் கருதப்பட்டு இழப்பீடுகளுக்கு உரித்தானதாகிவிடும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வணிகச் சட்டத்திற்கு உள்படுத்தப்படுமேயானால், மருத்துவமனைகள் அந்த உறுப்புகளின் செயல்பாட்டுக்குக் குறைந்தபட்ச உத்தரவாதம் அளித்தாக வேண்டுமே, அது சாத்தியம்தானா? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, திசுக்கள் மாற்றம் என்று மருத்துவ அறிவியல் புதிது புதிதாகப் பல வியக்கத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில், நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு, சேவை என்பதை வணிகமாக மாற்றி இருக்கிறதே, அது வளர்ச்சியை, புதிய கண்டுபிடிப்புகளை பாதிக்காதா என்கிற கேள்வி எழுகிறது.

நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு மருத்துவத் துறைக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது என்பது ஒருபுறம். அந்த உத்தரவுக்குக் காரணமான வழக்கிற்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது. அது குறித்தும் நாம் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட்டாக வேண்டும்.

சமூக ஆர்வலர் சேதன் கோத்தாரி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருக்கும் தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் 2,234 பேர், ஹெச்.ஐ.வி. என்று கூறப்படும் "எய்ட்ஸ்' தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் முழுமையான பரிசோதனை செய்யப்படாமல், ரத்ததானம் பெற்று அதை நோயாளிகளுக்கு செலுத்துவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 361, குஜராத்தில் 292, மகாராஷ்டிரத்தில் 276, தில்லியில் 264 பேர் "எய்ட்ஸ்' தொற்றுள்ள ரத்தம் தரப்பட்டதால், அந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக சேதன் கோத்தாரிக்குக் கிடைத்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. முறையாகக் கவனம் செலுத்தாமல், சோதனைக்கு உள்படுத்தாமல் நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்தும் மருத்துவமனைகள் மீதோ, ரத்த வங்கிகள் மீதோ கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் 2014-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 30 லட்சம் யூனிட் ரத்தம் இந்தியாவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதில் 84% ரத்தம் தனியார் மற்றும் சமூகசேவை நிறுவனங்களின் ரத்த தான முகாம்களின் மூலம் பெறப்

படும் ரத்தம். இதுதான் "எய்ட்ஸ்' தொற்றுக்கான காரணம். இங்கே, ரத்த தானம் செய்பவர்கள் முறையான சோதனைக்கு உள்படுத்தப்

படாமல் அவர்களது ரத்தம் சேகரிக்கப்படுகிறது என்பதுதான் பிரச்னை.

2011-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் "எய்ட்ஸ்' தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 20.9 லட்சம். இதில் 86% பேர் 15 முதல் 49 வரையிலான வயதினர்.

15 வயதுக்குக் கீழேயுள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1.45 லட்சம் (7%). பெண்களில் பாதிப்புடையவர்கள் 8.16 லட்சம் (39%).

தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு, மருத்துவத் துறையினருக்கு சவாலாகவும், எய்ட்ஸ் குறித்தும், ரத்த வங்கிகளின் செயல்பாடு குறித்தும் அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. இவை நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள். என்ன செய்யப் போகிறோம், எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.