நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அணுகுமுறை மாற வேண்டும்!

இந்த ஆண்டு காரீஃப் சாகுபடிக் காலத்தில் (ஜூலை முதல் அக்டோபர் வரையிலான பருவம்) உற்பத்தியாகும் பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதாரவிலை கடந்த ஆண்டைவிட அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:28 pm

ஆசிரியர்

இந்த ஆண்டு காரீஃப் சாகுபடிக் காலத்தில் (ஜூலை முதல் அக்டோபர் வரையிலான பருவம்) உற்பத்தியாகும் பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதாரவிலை கடந்த ஆண்டைவிட அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 5.4% முதல் 6.3%-ஆக இருந்த பருப்புக்கான ஆதாரவிலை, இந்த ஆண்டு 7.7%-லிருந்து 9.2% வரையாக அதிகரித்திருக்கிறது.

பருப்பு வகைகளுக்கு மட்டுமல்லாமல், எண்ணெய் வித்துக்களின் ஆதாரவிலையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மணிலாவுக்கும், சோயாபீன்சுக்குமான ஆதாரவிலை 4.7% - 6.7%-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், நெல்லுக்கான ஆதாரவிலை 4.2% மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சாத, இந்தியாவில் தட்டுப்பாடு காணப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் மாறத் தயாராக வேண்டும் என்பதுதான், இந்தக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் மூலம் அரசு உணர்த்தும் செய்தி.

பருப்பு வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்திருப்பதால் தேசிய அளவிலான பருப்பு உற்பத்தியில் மிகப்பெரிய மாற்றம் வந்துவிடாது என்றுதான் தோன்றுகிறது. அதற்குக் காரணம், பருப்பு வகைகளின் சந்தை விலை, அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச விலையைவிட 60% அதிகம். துவரம் பருப்புக்கு ரூ.5,050-உம், உளுந்துக்கு ரூ.5,000-மும் குவிண்டாலுக்கு (100 கிலோ) குறைந்தபட்ச விலையாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், சந்தையில் ரூ.9,000-மும் ரூ.10.000-மும் குவிண்டாலுக்கு விற்கப்படும்போது, நாடு தழுவிய அளவில் பற்றாக்குறையும் காணப்படும் நிலையில், அரசின் நோக்கம் எந்தளவுக்கு நிறைவேறும் என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது.

2015-16 நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவில், 58 லட்சம் டன் பருப்பு வகைகளை 3.9 பில்லியன் டாலர் (ரூ.25,350 கோடி) அன்னியச் செலாவணி கொடுத்து நாம் இறக்குமதி செய்திருக்கிறோம். அதேபோல, 1.5 கோடி டன் சமையல் எண்ணெய் 10.49 பில்லியன் டாலர் (ரூ.68,185 கோடி) செலவில் இறக்குமதி செய்திருக்கிறோம். இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், அரசு பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மேலும் அதிகரித்து, சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

சமையல் எண்ணெயைப் பொருத்தவரை, இறக்குமதி செய்வதில், அன்னியச் செலாவணி தேவைப்படும் என்பதுதவிர, வேறு சிக்கல்கள் எதுவும் இல்லை. சர்வதேசச் சந்தையில் பாமாயில், சோயாபீன்ஸ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை தாராளமாகக் கிடைக்கின்றன. பருப்பு வகைகள் அப்படியல்ல. சாதாரணமாக ஆண்டுதோறும் சுமார் 1.9 கோடி டன் பருப்பு வகைகள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. ஆனால், சர்வதேசச் சந்தையில் விற்பனைக்கு வரும் பருப்பு வகைகளின் மொத்த அளவே 1.5 கோடி டன் மட்டுமே. அதனால், பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்தது. சில பருப்பு வகைகளின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது. இதற்கு பருப்பு வியாபாரிகள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்திவிட்டனர் என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததும், அதிகப் புரதச்சத்துள்ள உணவை மக்கள் உண்ணத் தொடங்கியதும் கூடக் காரணமாக இருக்கலாம்.

ஒன்றுமட்டும் நிச்சயம், நமது தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏறத்தாழ 1.9 கோடி டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டும், நாம் 58 லட்சம் டன் இறக்குமதி செய்ய நேர்ந்தது. இந்த ஆண்டு அரசு பருப்பு உற்பத்திக்கு 2 கோடி டன் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அப்படியே இருந்தாலும் நமது தேவைபூர்த்தியாகுமா என்பது சந்தேகம்தான்.

குறைந்தபட்ச ஆதாரவிலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி நிர்ணயிக்கப்பட்டிருப்பது முறையாக விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தப்படுகிறதா என்றால் சந்தேகம்தான். கடந்த ஆண்டு மொத்த பருப்பு உற்பத்தியில் வெறும் 1% மட்டும்தான் அரசு கொள்முதல் செய்தது. அரிசி, கோதுமை ஆகியவற்றிற்கு இருப்பதுபோல, பரவலான கொள்முதல் திட்டம் ஏற்படுத்தப்படாதவரை, விவசாயிகள் பருப்பு உற்பத்தியில் அக்கறை காட்டமாட்டார்கள்.

அரிசி, கோதுமை, கரும்பு உற்பத்தியிலிருந்து நமது விவசாயிகள் பருப்பு, எண்ணெய் விதைகள் போன்றவற்றிற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. முதலாவது காரணம், நமது உணவு தானியக் கிடங்குகளில் நமது தேவையைவிட இரண்டு மடங்கு அதிகமான அரிசியும், நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுத் தேங்கிக் கிடக்கின்றன. இப்படித் தொடர்ந்து கொள்முதல் செய்தால் அவற்றில் பாதிக்குப்பாதி வீணாகிப் போகக்கூடும்.

நெல், கோதுமை, கரும்பை விடக் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் பயிர்கள் பருப்பு வகைகள். அதனால், வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சாகுபடி நிலங்களில் இனிமேல் பருப்பு பயிரிடுவதுதான் புத்திசாலித்தனம். அதுமட்டுமல்ல, ஏனைய பயிர்களைப் போலல்லாமல், பருப்பு வகைகள் அறுவடைக்குப் பிறகு நிலத்திலேயே இயற்கை உரமாவதால், மண்ணின் உயிர்ப்புத்தன்மையும் மேம்படும்.

குறைந்தபட்ச ஆதாரவிலையை அதிகமாக்குவதால் பருப்பு உற்பத்தியை அரசு அதிகரித்துவிட முடியாது. அதற்கு, திட்டமிட்ட அணுகுமுறையும், விவசாயிகளுக்கு சந்தை விலை கிடைப்பதற்கான உத்திரவாதமும் தரப்பட வேண்டும். அரசின் நோக்கம் சரி. ஆனால், அணுகுமுறையில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.