உடனடித் தீர்வு அவசியம்!
நிர்வாகத்திற்கும் நீதித் துறைக்கும் இடையேயான மோதல் மீண்டும் உருவாகி இருக்கிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்டு, இப்போதைய நரேந்திர மோடி அரசால் சட்டமாக்கப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம், உச்சநீதி


நிர்வாகத்திற்கும் நீதித் துறைக்கும் இடையேயான மோதல் மீண்டும் உருவாகி இருக்கிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்டு, இப்போதைய நரேந்திர மோடி அரசால் சட்டமாக்கப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம், உச்சநீதி
மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு ரத்தாகியது. நீதிபதிகள் நியமன ஆணையத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், இடமாற்றம் தொடர்பாகப் பரிந்துரைக்க நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வைப் பணித்தது.
நீதிபதி கேஹர் தலைமையிலான அந்த அமர்வுக்குப் பல ஆலோசனைகள் பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டன. நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் "கொலிஜியம்' முறையில் தற்போது குறைபாடுகள் இருப்பதால் அதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை நீதிபதி கேஹர் ஏற்றுக் கொண்டு, என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதற்காக ஆலோசனைகளை வரவேற்றார்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை கேஹர் ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக, நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கானத் தகுதிகள், வழிமுறைகள் என்னென்ன என்பதற்குத் தெளிவாக "நியமன நடைமுறை விதிகள்' வகுக்கப்பட வேண்டும் என்றும் அதை சட்ட அமைச்சகம் உருவாக்கி அரசியல் சாசன அமர்வின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் தயாரித்திருக்கும் "நியமன நடைமுறை விதிகள்' நீதித் துறைக்கு ஏற்புடையதாக இல்லை.
இப்போதைய நடைமுறைப்படி, நீதிபதிகளின் "கொலிஜியம்' பரிந்துரைக்கும் நபர்களை நீதிபதிகளாக அரசு ஏற்றுக்கொண்டாக வேண்டும். அந்தப் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்தவோ, நிராகரிக்கவோ அரசுக்கு உரிமை இல்லை. நியமன நடைமுறை விதிகளின்படி, தேசப் பாதுகாப்பு, தேச நலன் காரணங்களுக்காக "கொலிஜியம்' பரிந்துரைக்கும் நபர்களை நிராகரிக்கும் உரிமையைக் கோருகிறது அரசு.
தேசப் பாதுகாப்பு, தேச நலன் என்கிற இரண்டு வார்த்தைகளுக்குமே நிர்வாகம் தனது வசதிக்கேற்ப விமர்சனம் கொடுத்துக்கொள்ள முடியும் என்பதால், நீதித் துறை அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. நீதிபதியாக நியமிக்க "கொலிஜியம்' பரிந்துரைத்த நபரை, அரசு தேசப் பாதுகாப்பு, தேச நலன் காரணமாக நிராகரித்துவிட்டால், "கொலிஜியம்' வற்புறுத்தினாலும்கூட அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை. சட்ட அமைச்சகம் தயாரித்து அளித்த "நியமன நடைமுறை விதிகள்' பரிந்துரையை நீதிபதி கேஹர் நிராகரித்துத் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
சட்ட அமைச்சகம் தயாரித்திருக்கும் நியமன நடைமுறை விதிகளில் உள்ள இன்னொரு அம்சத்தையும் நீதித் துறை நிராகரித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை சட்ட ஆலோசகருக்கும்,
உயர்நீதிமன்றத்தின் தலைமை சட்ட வழக்குரைஞருக்கும் நீதிபதிகள் நியமனத்திலும், பதவி உயர்விலும் பரிந்துரைக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதை நீதித் துறை ஏற்க மறுத்துவிட்டிருக்கிறது.
நீதிபதிகள் நியமனத்தில் தனக்கும் சமபங்கு இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. நீதிபதிகளே நீதிபதிகளை எந்தவித விதிமுறையோ, வெளிப்படைத்தன்மையோ இல்லாமல் நியமிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதேநேரத்தில், நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசிடமே தந்துவிடுவது என்பதும் ஆபத்தானது. அரசியல் சார்ந்த நபர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்
களேயானால், ஜனநாயகத்திற்கு அதைவிடப் பெரும் கேடு வேறு எதுவும் இருக்க முடியாது.
அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள், வளர்ச்சி அடைந்த நாடுகளின் நீதிபதிகள் நியமனம் என்பது முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது உண்மை. இன்னும் சொல்லப்
போனால், அமெரிக்காவில் நாடாளுமன்றக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அந்த நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்பட்டால், நீதித் துறை முழுக்க முழுக்க அரசியலாக்கப்படும் அவலத்துக்கு இடமளித்ததாகி விடும்.
இப்போதும்கூட, நீதித் துறையின் செயல்பாடுகள் நிர்வாகத்தின், அதாவது நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எந்தவொரு நீதிபதியும் தவறிழைத்தாலோ, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாலோ அவரைப் பதவியிலிருந்து அகற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. இந்திய நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் பெரும்பான்மையானவை, அரசாலோ அல்லது அரசுக்கு எதிராகவோ தொடுக்கப்படுபவைதான் எனும் நிலையில், அரசே நீதிபதிகளை நியமிப்பது என்பது ஆரோக்கியமான ஜனநாயக நெறிமுறையாக இருக்காது.
உயர்நீதிமன்றங்களில் உள்ள 1016 இடங்களில் 400 நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கீழமை நீதிமன்றங்களில் 5000-க்கும் அதிகமான இடங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாத நிலைமை. மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. 81 லட்சம் வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், நீதித் துறைக்கும் அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு இனியும் தொடர்வதும், நீதிபதிகள் நியமனம் தடைபட்டுக் கிடப்பதும் சரியல்ல. நீதித் துறையும் அரசும்
அதாவது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், பிரதமரும், உட்கார்ந்து கலந்து பேசி இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...