நா காக்க..!
அரசியலில் நாம் என்ன பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம், பேசப்படும் நபரின் பின்புலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு பேசாவிட்டால் யாராக இருந்தாலும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.


அரசியலில் நாம் என்ன பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம், பேசப்படும் நபரின் பின்புலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு பேசாவிட்டால் யாராக இருந்தாலும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி குறித்த தரக்குறைவான விமர்சனத்துக்காகக் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டார்.
அவர் மீது குற்றவழக்குப் பதிந்து, கைது செய்ய வேண்டும் என்று லக்னௌவில் மிகப்பெரும் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. தயாசங்கர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் பேரில், தற்போது போராட்டத்தை நிறுத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. என்றாலும் இந்தப் பிரச்னை நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி பணம் வாங்கிக்கொண்டு கட்சிப் பதவிகளை கொடுக்கிறார் என்று சொன்ன தயாசங்கர் சிங் அச் செயலை விபச்சாரத்துக்கு ஒப்பிட்டு பேசியதுதான் பிரச்னைக்குக் காரணம். பெரும்பாலான கட்சிகளில் இப்படியொரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது என்பதும் அண்மைக் காலமாக பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் பலர் இதே குற்றச்சாட்டை நாகரிகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
உத்தரப் பிரதேச பா.ஜ.க. பிரமுகர்களுக்கு வெறுப்பை உழிழும் பேச்சுகள் புதிதல்ல. வருண் காந்தி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ் போன்ற பலரும் பிரச்னையை உருவாக்கும் கருத்துகளைத் தெரிவித்ததுண்டு. ஆனால், அவை யாவும் கொள்கை ரீதியாக அல்லது மத உணர்வை அடிப்படையாகக் கொண்ட கருத்துகளாக இருக்கும். அதனால் கட்சிக்கு பெரும் இழுக்கு நேராது. அவர்கள் மீதெல்லாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே கட்சி மேலிடம் நாம் என்ன பேசினாலும் ஏற்றுக் கொள்ளும் என்கிற தயாசங்கரின் எண்ணம்தான் மாயாவதியை தரக்குறைவாக விமர்சிக்கத் தூண்டியிருக்கிறது.
அரசியலில் இருக்கும் பெண்கள் மீது எதிர்க்கட்சியினர் மிகத்தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைப்பதும், அதைவிட மோசமாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசி, அப்பெண்மணிகளை ஏளனம் செய்வதும் இந்திய அரசியலில் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளது. தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்கொண்ட விமர்சனங்கள் எண்ணிலடங்கா. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதேபோன்ற தரம்குறைந்த விமர்சன தாக்குதலுக்கும் கருத்துப்படங்களுக்கும் ஆளானவர்தான்.
"வார்த்தை சவுக்கடியால் தாக்கப்பட்டுள்ள மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது' என்று அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, "எனது அரசியல் வாழ்வில் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்து உள்ளேன். பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் இத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
அரசியல் தலைவர்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்க்கும் நாகரிகம் இந்தியாவில் இன்னும் முழுமையாக வரவில்லை. அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதபோது, எதிர்க்கருத்துள்ள தலைவர்களின் அந்தரங்கம், ஜாதி, குடும்பம் ஆகியவற்றைப் பற்றி பேசி, மனம் நோகச் செய்யும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அல்லது இரண்டாம் வரிசைத் தலைவர்களைவிட்டுப் பேச வைத்து, திருப்தி அடைகிறார்கள். தயாசங்கர் சிங்கை பாஜக தலைமை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதைப் போல எல்லா கட்சிகளின் தலைமையும் செயல்படுமேயானால் இந்த போக்குக்கு கடிவாளம் போட முடியும்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த நேரம் காமராஜர் முதல்வராக இருந்தார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களில், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் பி. ராமமூர்த்தி முக்கியமானவர். அவருக்கு காலில் சற்று ஊனம் இருந்தது. முதல்வர் காமராஜர் கலந்து கொண்ட மேடையில் கட்சிக்காரர் ஒருவர் தோழர் ராமமூர்த்தியின் உடல் ஊனத்தை
குறிப்பிட்டு பேசினார். வெகுண்டு எழுந்த காமராஜர் மேடையிலேயே அவரை வன்மையாக கண்டித்ததோடு மேலும் பேசவும் அனுமதிக்கவில்லை. இதன்மூலம் எதிர்க்கட்சியினர் பற்றிய தரக்குறைவான விமர்சனங்கள் ஏற்புடையதல்ல என்பதைத் தனது கட்சியினருக்கு காமராஜர் உணர்த்தினார். அதுபோல, இன்றைய கட்சித் தலைவர்கள் செயல்படாமல் இருப்பதுதான் இந்த போக்குக்கு காரணம்.
அரசியலில், ஒருவரைக் குற்றம்கூறும்போது அது கொள்கை சார்ந்ததாக அல்லது அவரது செயல் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். தேவையற்ற ஒப்பீடுகளும், தரம் தாழ்ந்த விமர்சனங்களும் தவிர்க்கப்பட வேண்டும். கட்சித் தலைமை இத்தகைய நாகரிகத்தைக் கடைப்பிடிக்கவும், தங்கள் கட்சியின் இரண்டாம் வரிசைத் தலைவர்களை நாகரிகமாகப் பேச வைக்கவும் வேண்டும். கட்சியிலிருந்தே தயாசங்கர் நீக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் பா.ஜ.க.வில் மட்டுமே நடந்ததாக இருந்துவிடக் கூடாது. தரக்குறைவான, முகம் சுளிக்கும் விமர்சனங்களைச் செய்தவர்கள் நீக்கப்படுவது எல்லாக் கட்சிகளிலும் நடைபெறுமானால் இத்தகைய தரங்கெட்ட விமர்சனங்கள் தானே முடிவுக்கு வரும்.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பேச்சுரிமையின் விவாத கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேநேரத்தில், தனிநபர் விமர்சனங்களுக்கும் தரக்குறைவான ஒப்பீடுகளுக்கும் அங்கே இடம் கிடையாது. இதை நமது அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...