குடும்பத்துக்குள் பெற்றோருக்கு உதவுதல் என்பது குறித்தும் வரையறுக்கப்பட வேண்டும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கை. அவர்களது வாதம் இதுதான். அந்தக் குழந்தையின் உதவி அல்லது உழைப்பு, தந்தைக்கான கூலியாக அமைந்தால், அத்தகைய தொழில்முறைகளும் குழந்தைத் தொழிலாளர் முறையாகவே கருதப்பட வேண்டும். பெற்றோர் பீடி சுற்றினால், குழந்தையும் அவர்களுக்கு உதவியாக பீடி சுற்றும்போது, அது தந்தைக்குக் கிடைக்கும் கூலியின் அளவை உயர்த்தவே உதவுகிறது. அதேவேளையில், சொந்த வயலில் நீர்ப்பாய்ச்ச உதவுதல், பூ அல்லது காய்கள் பறித்துக் கொடுத்தல் ஆகிய வேலைகளில் சிறார்கள் ஈடுபடும்போது, அதற்கான கூலி தந்தைக்கு கிடைப்பதாகக் கருத முடியாது. இதுபோன்று, எந்தெந்தக் குடும்பத் தொழில்களில் சிறார்களை ஈடுபடுத்துவது என்பதை மேலும் நுட்பமாக இச்சட்டம் ஆராய வேண்டும் என்பதே அவர்களது வாதம்.