/

பரவும் வெறுப்பு நெருப்பு...!

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஜூலை 14, 1789-இல் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட அந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். நைஸ் நகரத்தில் இந்தக் கொண்டாட்டம் நடக்கும்போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:45 pm

ஆசிரியர்

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஜூலை 14, 1789-இல் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட அந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். நைஸ் நகரத்தில் இந்தக் கொண்டாட்டம் நடக்கும்போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டில், கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறையாக நிகழ்த்தப்பட்டுள்ள இந்த பயங்கரவாதத் தாக்குதல் உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த பயங்கரத்தை நிகழ்த்திய பிரெஞ்சு குடியுரிமை பெற்ற துனீசியா நாட்டைச் சேர்ந்த 31 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றாலும், அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் புகுந்ததாகக் கருதியிருப்பார்களே தவிர, இது திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்பதையோ, இந்த லாரியை அந்த நபர் ஒரு நாள் முன்னதாக இதே வழித்தடத்தில் வெள்ளோட்டம் பார்த்ததையோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 130 பேர் இறந்தனர். அடுத்ததாக "சார்லி எப்தோ' பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் இறந்தனர். தற்போது பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில், கடற்கரையில் குழந்தைகளுடன் வாணவேடிக்கையைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டி நசுக்கிய நாசக்காரச் செயல் நடந்தேறியுள்ளது. 84 பேர் இறந்தனர். இதில் 10 பேர் சிறார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிய நாடு (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பினர், சிரியா போரில் தங்களுக்கு எதிராகக் கூட்டு சேர்ந்திருக்கும் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த அநியாயக் கொலைகள், அப்பாவிகள் மீது நடத்தப்படுகின்றன. பயங்கரவாதிகளின் தாக்குதலானது குழந்தைகளையும் பலி கொள்கிறது.

எல்லா மதங்களிலும் வழிபாட்டாளர்களாக, பக்திநெறி கொண்டவர்களாக இருப்பவர்கள் அதிகமாகவும் பக்திவெறி கொண்டவர்கள் மிகச் சிலராகவும் இருப்பார்கள். அவர்களும்கூட, தங்கள் கருத்தை எதிர்ப்போருடன்தான் மோதுவார்கள். ஆனால் பிரான்ஸிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அப்பாவிகள் மீதே நடத்தப்

படுகின்றன. அரசியல்வாதிகள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதே இல்லை. அவர்களுக்கு உளவுத் துறையின் தகவல் கிடைக்கிறது. போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு இதெல்லாம் கிடையாது.

இஸ்லாமிய விரோதிகளை உங்கள் காரை ஏற்றிக் கொல்லுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய நாடு அமைப்பின் தலைவர் சொல்லிச் சொல்லி, தங்கள் ஆதரவாளர்களை மூளைச்சலவை செய்வார்கள் என்றால், எத்தனை கார்களை நாம் தடை செய்ய முடியும்? எத்தனை லாரிகளைத் தடுத்து நிறுத்திவிட முடியும்? அனைத்து முஸ்லிம்களையும் சந்தேகப்படுவதும் சோதனைக்கு உள்ளாக்குவதும் நியாயமாகுமா? இயலக்கூடியதா?

ஒரு பயங்கரவாத அமைப்பு, அல்லது கொரில்லா தாக்குதல் நடத்தும் அமைப்பு தங்கள் இயக்கத்தில் உள்ள நபர்களையோ, தங்கள் பாசறையில் பயிற்சி பெற்றவர்களையோ தற்கொலைப் படையாகப் பயன்படுத்தும் போக்கு இன்றில்லை. இணையத்தின் மூலமாக ஆதரவு திரட்டுகிறார்கள். இணையத்தின் வாயிலாக வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி தருகிறார்கள். இணையத்தின் மூலமாகப் பணப்பரிமாற்றம் நிகழ்கிறது. ஆனால் தாக்குதல் மட்டும் நேரிடையாக நடத்தப்படுகிறது. உயிர்கள் நிஜத்தில் அழிக்கப்படுகின்றன. கணினித் தொழில்நுட்பம் உலகத்தை மட்டும் சுருக்கவில்லை. மனித அறிவையும், உணர்வையும்கூடச் சுருக்கி விட்டது.

இன்றைய சூழலில் மற்றைய நாடுகள் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொண்டாலும், இந்தியாவில் இஸ்லாமிய நாடு அமைப்பின் ஆதரவாளர்கள் பெருகாமல் இருக்கவும், அவர்கள் அந்த அமைப்புடன் தொடர்பில் இருத்தல் அல்லது அவர்கள் சொல்லும் இடத்துக்கு சென்று பயிற்சி பெற்றுத் திரும்புதல் ஆகிய நடவடிக்கைகளைத் தடுக்கவும் அதிதீவிர கண்காணிப்புகளை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லையெனில், மும்பை தாக்குதல் போன்ற ஒன்றினை இந்தியாவின் பல பகுதிகளில் விரைவில் நாம் எதிர்கொள்ள நேரிடும்.

அண்மையில் கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதியிலிருந்து, 21 படித்த இஸ்லாமிய இளைஞர்கள் யாருக்கும் தெரியாமல் சிரியா சென்றிருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அந்நாட்டில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் எத்தகைய பயங்கரவாதப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது தெரியாது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், லஷ்கர் இ தொய்பா இயக்க முகாமின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு கேரள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அதையடுத்து, நடத்தப்பட்ட புலனாய்வில், அரபு நாடுகளுடன் அதிகளவு வேலைவாய்ப்புத் தொடர்பில் இருக்கும் கேரள மாநிலத்தில், பயங்கரவாத அமைப்புகள் தங்கள் கிளைகளை விரிப்பதாக தெரியவந்தது. அந்த புலனாய்வு அறிக்கையைப் புறக்கணித்ததன் விளைவுதான் தற்போது 21 இளைஞர்கள் சிரியா சென்றிருப்பது.

இதனைக் கருத்தில் கொண்டே, இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உளவுத் துறை தகவல்களைப் பரிமாறிக்கொள்வதிலும், பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதிலும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.