/

ரத்தத்தின் ரத்தமே!

கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது என்றாலும்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:44 pm

ஆசிரியர்

கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது என்றாலும், அன்றாடத் தேவைக்கும் தானம் பெறும் ரத்தத்தின் அளவுக்குமான இடைவெளி குறைந்தபாடில்லை. இதற்குக் காரணம், அதிகரித்து வரும் மக்கள்தொகை மட்டுமல்ல, கூடுதலான சாலை விபத்துகளும், அறுவை சிகிச்சைகளும், மாற்று உறுப்பு சிகிச்சைகளும்தான்.

ஒவ்வொரு நாடும் தனது தேவையைவிட 1% அதிகமாக ரத்தத்தை சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை, தனது தேவையைவிட 25% குறைவாகத்தான் நமது ரத்த சேமிப்பு இருந்து வருகிறது. இந்தப் பற்றாக்குறை ஒரு சில மாதங்களில் மேலும் அதிகரிக்கவும் செய்கிறது.

ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும், அதை ஒருங்கிணைத்து முறைப்படுத்துவது குறித்தும் தேசிய அளவிலோ, மாநில அளவிலோ போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை. பல தனியார் ரத்த வங்கிகளை நாம் செயல்பட அனுமதித்திருப்பதில் தவறில்லை. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் மிகவும் கவனத்துடன் கண்காணிக்கப்படுகின்றனவா என்றால் இல்லை. இதன் விளைவாக, மது அருந்துபவர்களின், எய்ட்ஸ் தொற்று இருப்பவர்களின் ரத்தம்கூட, கவனமான பரிசோதனைக்கு உள்படுத்தப்படாமல் சேகரித்து, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலகின் பல நாடுகளில் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தரப்படும் தனிநபர், சமுதாய ரத்த தானங்கள்தான் அதிகமானவை. பல நாடுகளில், பள்ளிக்கூடங்களில் படிக்கும்போதே, குழந்தைகளுக்கு ரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இயங்கும் குடியிருப்பு சங்கங்களும், மாதந்தோறும் ரத்த தான முகாம்கள் நடத்தி, ரத்த வங்கிகளுக்கு ரத்தம் வழங்குவதைக் கடமையாகச் செய்து வருகின்றன. அத்தகைய சிந்தனை இந்தியாவில் ஏற்படுத்தப்படவில்லை.

இந்தியாவைப் பொருத்தவரை, இப்போதும் 60% ரத்தம், அவசர நிகழ்வுகளில் தேவைப்படும்போது, உறவினர்கள், நண்பர்களிடம் பெறுவதாகத்தான் இருந்து வருகிறது. ரத்த தானம் என்பது அவசர காலங்களில் செய்யப்பட வேண்டியது என்கிற கருத்துதான் பரவலாக நிலவுகிறது. ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும், யாராவது ஒருவருக்கு அப்படிப்பட்ட அவசரத் தேவை நிலவுகிறது என்பதைப் பரவலாக நாம் உணரத் தவறியிருக்கிறோம்.

ரத்த தானம் செய்வதால், உடலிலுள்ள ரத்தம் குறைந்து பலவீனப்படுவார்கள் என்கிற தவறான கருத்து இன்னமும்கூட அகற்றப்படவில்லை. நாம் ரத்த தானம் செய்தால் அடுத்த சில மணி நேரத்தில் அந்த ரத்தம் பழையபடி உடலில் ஊறிவிடும் என்கிற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. அது மட்டுமல்ல, ஆண்டுக்கு இருமுறை அல்லது மூன்று முறை ரத்த தானம் கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பதும், அது ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் என்பதும் பொதுமக்களுக்கு உணர்த்தப்படாமலேயே இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக ரத்த தானம் செய்கிறார்கள். மகளிர் அமைப்புகளும் சங்கங்களும் ரத்த தான முகாம்களை நடத்தி, ரத்த வங்கிகளுக்குக் கொடுப்பதைத்தான் மிகப்பெரிய சேவையாகக் கருதிச் செய்து வருகின்றன. அதுபோன்றதொரு ஆர்வமும் சிந்தனையும் இந்தியாவில் இன்னும் ஏற்படாமல் இருப்பதை நாம் உணர வேண்டும்.

ரத்த தானத்தைப் பொருத்தவரை, நகர்ப்புறங்களிலுள்ள கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியிலும், இளைஞர் சமுதாயத்தினர் மத்தியிலும் விழிப்புணர்வு காணப்படுகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு வெறும் 30% இளைஞர்களிடம்தான் இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.

லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள், அரசியல் கட்சிகளின் இளைஞர் மற்றும் மகளிர் அணியினர், ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமிய இளைஞர் அமைப்பினர் ஆகியோர் ரத்த தான முகாம்களை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அவையெல்லாம் போதுமானதாக இல்லை. ரத்த தானம் குறித்த விழிப்புணர்வும், ஆர்வமும் இன்னும் இந்தியாவில் பெரும்பாலான பெரு நகங்களையும், கிராமங்களையும் சென்றடையவில்லை என்பதுதான் நிலைமை.

போதுமான அளவுக்கு ரத்த தானம் கிடைக்காமல் இருப்பதால்தான் கருப்புச் சந்தையில் ரத்தம் விற்கப்படும் அவலம் காணப்படுகிறது. இந்தக் கருப்புச் சந்தைக்காரர்கள், மருத்துவமனைகளிலும் ரத்த வங்கிகளிலும் உள்ளவர்களுடன் கைகோத்துத் தவறான பல நடைமுறைகளுக்கு வழிகோலுகிறார்கள். எந்தவிதப் பரிசோதனையுமில்லாமல், குடிகாரர்களிடமும் நோயாளிகளிடமும் குறைந்த பணத்துக்கு ரத்தத்தைப் பெற்று அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுகிறார்கள். விளைவு? தொற்று நோய்கள் பரவுகின்றன. ரத்தம் கொடுக்கப்பட்டும் நோயாளிகள் மரணமடைகிறார்கள்.

அரசு தரப்பிலும், தனியார் தரப்பிலும் ரத்த வங்கிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றின் எண்ணிக்கை போதாது. குண்டடிபட்டு மரணத்தின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆரை ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தம் காப்பாற்றியது என்பதால்தான் அவர் தமிழக மக்களை "ரத்தத்தின் ரத்தமே' என்று மனம் நெகிழ்ந்து அழைத்தார். ஆம், ரத்தம் அனைவரையும் இணைக்கும் தன்மையது. இன, மொழி, ஜாதி, மத வேறுபாடில்லாத ஒரே தன்மையது.

ரத்தம் விலை பேசப்படாத, தேவைக்குப் போதுமானதாக இருக்கும் நிலைமையை ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வு நெருப்பாய் பரவ வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.