இரு நாள்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கவாதிகள் எனக் கருதப்படும் 5 நபர்கள், இந்தியாவின் முதன்மை நகரங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலும் அரசு அலுவலகங்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்தக் கைது மூலம் சதித்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதற்காக தேசிய புலனாய்வு அமைப்பை (என்.ஐ.ஏ.) நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தப் பயங்கரவாத இயக்கவாதிகள் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில் கிடைத்துள்ள டி.ஏ.டி.பி. ரசாயனப் பொருள்கள் (டிரைஏஸ்டோன் டிரைபெராக்ûஸடு) மிக எளிதாகச் சந்தையில் கிடைக்கக்கூடிய வேதிப்பொருள்களின் கலவை என்றும், இதனைத் தயாரிக்க, அறிவைக் காட்டிலும் அனுபவமே போதுமானது என்றும் கூறப்படுகிறது. பட்டவர்த்தனமாக அனைத்தையும் எழுதுவதே இதழியல் நுணுக்கமாக அறியப்படும் இன்றையச் சூழலில், நல்லவேளையாக, டி.ஏ.டி.பி. வேதிப்பொருள் கலவைக்கு தேவைப்படும் ரசாயன பொருள்கள் என்னென்ன என்பதை விலாவாரியாகப் புட்டுப்புட்டு வைக்கப்படவில்லை என்பதே ஆறுதல்.
சுவாதி கொலைவழக்கிலும்கூட, கொலையாளி பயன்படுத்திய கத்தியின் கைப்பிடி, மென்மையான நெகிழியால் அமைக்கப்பட்டிருந்ததால் கைரேகை பதியவில்லை என்ற நுட்பமான தகவல், இதுவரை அறிந்திராத கொலையாளிகளுக்கும் உதவும் வகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுவாதியின் செல்லிடப்பேசியைக் கொலையாளி தன்னோடு கொண்டு சென்றாலும், டூப்ளிகேட் நம்பர் மூலம் அவரது செயலி, தொடர்பு அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுவரும் தகவலும்கூடப் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதெல்லாம் தேவையா?
இந்த டி.ஏ.டி.பி. வேதிப்பொருள்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல இடங்களில் பயன்படுத்தும் வெடிபொருள். புருஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலிலும், பாரீஸில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலிலும் இதே வேதிப்பொருள்தான் வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதே வேதிப்பொருளைப் பயன்படுத்தி வெடிகுண்டுகள் தயாரித்து, நாசவேலைகளை நிகழ்த்த திட்டமிடல் நடந்துகொண்டிருந்த வேளையில், தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு, இந்த சதிச்செயலை முறியடித்துள்ளது தேசிய புலனாய்வு அமைப்பு. சந்தையில் கிடைக்கும் சாதாரண ரசாயனப் பொருள்களைக் கொண்டு ஒரு பயங்கர வெடிப்பொருளைத் தனிநபர் உருவாக்க முடியும் என்றால், இதைவிடப் பேராபத்து என்னவாக இருக்க முடியும்?
மேலும், ஹைதராபாத் சோதனையில் கிடைத்துள்ள வெடிகுண்டைத் தயாரித்தவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டவர் என்றும், இவர் சிரியாவைச் சேர்ந்த பயங்கரவாதி மூலம் யூ-ட்யூப் காட்சிகள் வழியாக வெடிகுண்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மிகச் சிறிய அளவிலான வெடிகளைத் தயாரித்து, அதைப் பெரிய பாத்திரங்களுக்குள் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். யூ-ட்யூப் போன்ற வலைதளங்களில் லட்சக்கணக்கில் பதிவேற்றப்படும் விடியோ காட்சித்துணுக்குகள் அனைத்தையும் கண்காணிப்பதோ, முடக்குவதோ சாத்தியமில்லை. ஆனால் வேதிப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் சாத்தியமே!
பயங்கரவாதிகளுக்குப் பணம் கிடைப்பதைத் தடுக்க வங்கிகள் மூலமாக பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைப்போல வேதிப்பொருள் விற்பனையிலும் கண்காணிப்பும் முறைப்படுத்தலும் அவசியம்.
இத்தகைய கெடுபிடிகள் தொழிலை பாதிப்பதாக பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும். சாதாரணமாக நடைபெறும் தங்கள் தொழில் மீது சுமத்தப்படும் புதிய நிபந்தனைகளாக அவர்கள் கருதுவதுதான் இந்த எதிர்ப்புக்குக் காரணம். இருப்பினும்கூட, வேதிப்பொருள் விற்பனை அனைத்தும் கண்காணிப்புக்கு உள்படுத்தும் தேவை எழுந்துள்ளது. வேதிப் பொருள்களை யார், எத்தகைய தொழிலுக்காக வாங்குகிறார்கள்? அவர்கள் அதனை பயன்படுத்தும் அளவு எவ்வளவு? உண்மையாகவே அந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்டதா? அல்லது போலியாக கணக்கெழுதி வேறு பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதம் என்று மட்டுமன்றி, சாதாரணமாக ஊராட்சித் தலைவரைக் கொல்லவும்கூட பைப் வெடிகுண்டு வைக்கும் போக்கும், மதுரையில் நடந்ததுபோல, நெருக்கடி தரும் காவல் துறையை அச்சுறுத்தும் விதமாகவும்கூட வெடிகுண்டுகள் வைத்து மிரட்டுவதும் சர்வசாதாரணமாகிவிட்ட இன்றைய சூழலில், வேதிப்பொருள் விற்பனை முழுவதும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட வேண்டும். கூட்டுப்பொருள் அல்லது கலவை மூலம் வெடி மருந்து தயாரிக்க முடியுமானால், அத்தகைய ரசாயனங்கள் அனைத்தும் பயங்கரவாதிகளால் மட்டுமல்ல, தனிநபர் பகைமைக்கும்கூட பழிவாங்கப் பயன்படுத்தப்படும். ஆகவே அமிலம், வேதிப்பொருள் அனைத்திலும் அதன் விற்பனை, வணிகம் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
மகளிர் மீது அமிலவீச்சு நிகழ்த்தப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னர் நைட்ரிக் ஆசிட் போன்ற ஆபத்தான, வீரியமான அமிலங்கள் சிலவற்றின் விற்பனை முறைப்படுத்தப்பட்டது. அமிலம் வாங்குவோர் அடையாளம், முகவரி, எதற்காக வாங்குகிறார் அவரது தொழில் என்ன என அனைத்து விவரங்களும் பெறப்பட்ட பின்னரே அமிலம் விற்கும் நடைமுறை பல மாநிலங்களிலும் அமலுக்கு வந்தது.
இப்போது பயங்கரவாதத்தின் நிழல் எல்லா இடங்களிலும் நீள்வதால், வேதிப்பொருள்கள் அனைத்தையும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டியது காலத்தின் தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

