நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

நிறவெறி அல்ல மனவெறி!

பெங்களூரு நகரில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 21 வயது பெண் தாக்கப்பட்டச் சம்பவத்தில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும், வெள்ளிக்கிழமை வரை 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும் இச்சம்பவத்தின் மீதான சமூக எதிர்வினைகளின் தீவிரத்தை மட்டுப்படுத்தியுள்ளன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

ஆசிரியர்

பெங்களூரு நகரில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 21 வயது பெண் தாக்கப்பட்டச் சம்பவத்தில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும், வெள்ளிக்கிழமை வரை 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும் இச்சம்பவத்தின் மீதான சமூக எதிர்வினைகளின் தீவிரத்தை மட்டுப்படுத்தியுள்ளன.
 ஜனவரி 31-ஆம் தேதி சூடான் நாட்டைச் சேர்ந்தவர் ஓட்டிச் சென்ற மகிழுந்து மோதி பெங்களூரு நகரைச் சேர்ந்த ஒரு பெண் இறந்தார். இந்தச் சம்பவத்தால் கொதிப்படைந்திருந்த ஒரு பெருந்திரள் கூட்டம், அந்த நேரத்தில் அவ்வழியாகச் சென்ற, இந்தச் சம்பவத்துக்குச் சிறிதும் தொடர்பில்லாத தான்சானியா மாணவர்கள் சென்ற மகிழுந்தைத் தாக்கியிருக்கிறது; அந்த மகிழுந்தில் பயணம் செய்த 3 மாணவர்கள், ஒரு மாணவியை தாக்கியது. அந்த மாணவியின் ஆடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 ஒரு விபத்து நடக்கும்போது அங்கே பெருந்திரள் மனக்கொதிப்பு என்பது இயல்பான ஒன்று என்றபோதிலும், அந்தக் கோபம் பெரும்பாலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீதும், விபத்தை நிகழ்த்திய நபர் மீதும்தான் இருக்குமேயொழிய, அந்த வழியாகப் போகிறவர்கள் மீதெல்லாம் அந்தக் கோபம் தெறிக்காது. ஆனால், பெங்களூருவில் நடந்த சம்பவத்துக்கு ஒரே அடிப்படைக் காரணம், விபத்து நடத்திய நபரும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர், அவ்வழியாகச் சென்ற மாணவர்களும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்கின்ற எண்ணமே இத்தகைய அர்த்தமற்ற வெறித்தாக்குதலை நிகழ்த்த வைத்துள்ளது. இது மடமை அல்லது மனநோய் என்பதில் சந்தேகமில்லை.
 பெங்களூரு விவகாரத்தைப் பொருத்தவரை, இந்தச் சம்பவத்தின் மிக மோசமான நிகழ்வு எதுவென்றால், இந்தச் சம்பவம் குறித்து தான்சானியா பெண் கொடுத்த வழக்கை காவல் துறையினர் ஏற்கவில்லை என்பதுதான். இரண்டு நாள்கள் கழித்து, பிப்ரவரி 2-ஆம் தேதி, இந்தச் சம்பவத்தில் மாநில அரசின் மெத்தனம் குறித்து அனைத்து ஆப்பிரிக்க மாணவர்கள் சங்கம் மூலமாக தான்சானியா தூதரகத்துக்குச் சொல்லப்பட்ட பிறகே, பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகம் தீவிர நடவடிக்கையிலும், கைது மற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் ஆகியவற்றிலும் இறங்கியது. பெருந்திரள் மனநோயைக் காட்டிலும் காவல் துறையின் இந்த மெத்தனநோய்தான் இந்தியாவின் பெருமையை சீர்குலைத்திருக்கிறது.
 இந்தச் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே காவல் துறை தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து, சிலரைக் கைது செய்து இருக்குமேயானால், இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர் அனைவரும், இந்த நாட்டில் தங்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாக நம்பிக்கை பெற்றிருக்கக்கூடும். அல்லது தான்சானியா மாணவி புகார் கொடுத்தபோது அதை ஏற்று நடவடிக்கை எடுத்திருந்தாலும்கூட இந்தியாவின் பெருமை காப்பாற்றப்பட்டிருக்கும். அனைத்தையும் குலைத்திருக்கிறது பெங்களூரு காவல் துறையின் செயல்பாடு. இந்த விவகாரத்தில் வெறும் பணியிடை நீக்கம் அல்லது பணியிடமாறுதல் மட்டுமே தீர்வாகாது.
 இந்தியாவுக்கு வந்து பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 76,000. இதில் ஆப்பிரிக்க மாணவர்கள் சுமார் 12,000 பேர் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்.
 வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு சுமார் 1,200 அமெரிக்க டாலர்களை செலுத்துகின்றனர். அவர்கள் இங்கிலாந்து நாட்டிலோ அல்லது அமெரிக்காவிலோ கல்வி பயில்வதாக இருந்தால் ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 15,000 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டியிருக்கும். ஆகவேதான் அவர்கள் இந்தியாவைத் தேர்வு செய்கின்றனர். ÷இந்தியாவில் அமெரிக்காவுக்கு இணையான தரமான கல்வியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் வருகின்றனர். வெள்ளையர்களால் அடிமைப்பட்ட இந்தியாவில் நிற வெறி இருக்காது, இந்திய மக்கள் ஆப்பிரிக்கர்களை நிறத்தால் வெறுக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் வருகின்றனர். இத்தகைய சம்பவங்கள் அந்த நம்பிக்கையை முறிக்கிறது.
 அவர்களது நடை, உடை, பாவனை, பழக்கவழக்கம் எல்லாமும் நம்மிலிருந்து மாறுபட்டுள்ளது என்பதாலும், அவர்கள் முரடர்கள் என்ற தவறான எண்ணத்தாலுமே ஆப்பிரிக்கர்கள் மீதான தேவையற்ற வெறுப்பும், அலட்சியமும் இந்தியர்களுக்கு இருக்கிறது. அத்தோடு, அவர்களைத் தாக்கினால் நம்மைக் கேட்க யாருமில்லை என்ற எண்ணமும் இத்தகையத் தாக்குதலுக்கு வித்திடுகிறது.
 இது நிறவெறி சார்ந்த தாக்குதல் இல்லை என்றும், ஆப்பிரிக்க மாணவர்கள் பலரும் பெங்களூரு நகரில் வாகனத்தை படுவேகமாக ஓட்டி, மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அடக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் என்றும் கூறப்படுவது சப்பைக்கட்டாக இருக்குமே தவிர, உண்மை அதுவல்ல. ஏனெனில், வசதி படைத்த இந்திய இளைஞர்கள் பலரும் தங்கள் வாகனத்தை அதிவேகத்தில் தலைதெறிக்க ஓட்டுகிறார்கள். எல்லோர் மீதுமா தாக்குதல் நடத்தப்படுகிறது? இந்திய வெளியுறவுத் துறை தலையிட்டு நடவடிக்கை எடுப்பதும், இந்த மாணவர்களுக்கு நியாயம் செய்வதும்தான் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு இந்தியாவின் மீது புதிய நம்பிக்கையைத் தரும்.
 இந்தத் தாக்குதல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்தில் நடக்காமல் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலம் ஏதாவது ஒன்றில் நடந்திருந்தால், இதற்குள் ஒரு மிகப்பெரிய ஊடகப் பிரளயமே ஏற்பட்டிருக்கும். பிரதமர் நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம் என்று ஆளுக்குஆள் அறிக்கை வெளியிட்டுத் தங்களது தேசப்பற்றை வெளிக்காட்டியிருப்பார்கள். தப்பித்தார் பிரதமர்!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.