உடனடியாகத் தீர்வு காண வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய எத்தனை எத்தனையோ பிரச்னைகள் நாட்டில் இருக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் எதற்காகத் தேவையில்லாத பிரச்னைகளை எல்லாம் தோண்டி எடுத்து விவாதப் பொருளாக்குகிறார்கள் என்பது புரியவில்லை. ஊராட்சி, நகராட்சி அமைப்புகளில் தொடங்கி சட்டப் பேரவை, மக்களவை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்று பா.ஜ.க. உள்கட்சிக் கூட்டமொன்றில் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்திருக்கும் கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
1983-இல் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் முதலாவது அறிக்கையில், அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஆர்.கே.திரிவேதி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். சட்டமாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், ஒரு மரபாகவோ, வழக்கமாகவோ மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்பதுதான் அவர் முன்வைத்த கருத்து.
1967 முதல் பல மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து ஆங்காங்கே மாநிலக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றத் தொடங்கின. வலுவான தேசியக் கட்சி எதுவும் இல்லாத நிலையில் பல மாநிலங்களில் கூட்டணி அமைச்சரவை பதவிக்கு வந்தது. கட்சி மாறுதல், ஆட்சிக் கவிழ்ப்பு என்று இந்தக் குழப்பம் ஆங்காங்கே தொடர்ந்ததன் பின்னணியில்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் திரிவேதி அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஜனதா கட்சி 1977-இல் ஆட்சிக்கு வந்தபோது காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பல மாநில அரசுகளையும், 1980-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்ற மாநில அரசுகளையும் கலைக்க முற்பட்ட பின்னணியில் எழுந்த கருத்துதான் அது. சட்டப் பேரவைகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பல மாநிலங்களில் இல்லாமல் போய் பல ஆண்டுகளாகிவிட்டன.
இப்படிப்பட்ட நிலைமைக்குக் காரணமாக இருந்தவை இரண்டு நிகழ்வுகள். 1959-இல், அரசியல் சட்டப் பிரிவு 356-இன் கீழ் கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசை அன்றைய பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு கலைக்க முற்பட்டது முதல் காரணம். 1971-இல் பிரதமர் இந்திரா காந்தி பதவிக்காலம் முடிவதற்கு முன்னாலேயே மக்களவைக்குத் தேர்தலை அறிவித்தது இரண்டாவது காரணம். 1977 தேர்தலுக்குப் பிறகு ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது என்றாகிவிட்டது.
கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று இதே கருத்தை முன் வைத்திருக்கிறது. அடிக்கடி தேர்தல் நடத்துவது என்பது மக்களுக்கும், அரசு இயந்திரத்திற்கும் ஜனநாயகத்தின்மீது கசப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது என்று நிலைக்குழு தெரிவித்திருக்கும் கருத்தில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதற்குத் தீர்வாக தடாலடியாக ஒரே நேரத்தில் தேர்தல் என்று கூறுவது நடைமுறைச் சாத்தியமாகத் தெரியவில்லை.
ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற இந்தக் கருத்தை பா.ஜ.க. நீண்ட நாள்களாகவே கூறி வருகிறது. வாஜ்பாய் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராக இருந்தபோது, ஒரு தடவை எல்.கே. அத்வானி இந்தக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல, பா.ஜ.க.வின் 2009, 2014 தேர்தல் அறிக்கைகளிலும் இதுகுறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மாறி மாறித் தேர்தல்கள் வரும்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விடுகின்றன. மக்கள் நலப் பணிகள் மட்டுமல்லாமல், அரசின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் முடங்கி விடுகின்றன. தேர்தல் வேலையில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டாக வேண்டும் என்பதால், அரசு நிர்வாகம் அவ்வப்போது ஸ்தம்பித்து விடுகிறது. ஆட்சியாளர்களும் சரி, அதிகாரிகளும் சரி தொடர்ந்து தங்களது பணியைச் செய்ய விடாமல் தேர்தல் நடத்தை விதிகள் தடுத்து விடுகின்றன.
இதெல்லாம் சரி. ஆனால், ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற கோரிக்கை, மத்திய - மாநில ஆட்சியாளர்கள் முக்கியமான அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளில் மக்களிடம் அவர்களது அனுமதி பெறுவதைத் தடுக்கிறதே, அது எப்படி சரி? நாடாளுமன்ற ஜனநாயகத்தில், ஒரு ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்தால், மீண்டும் மக்களைச் சந்தித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஆட்சியமைப்பது என்பதுதானே சரியாக இருக்கும்? ஒரு ஆட்சி பெரும்பான்மை பலம் இழந்துவிட்டால், ஐந்தாண்டுகள் முடியும் வரை அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி நடத்துவதா? அது எப்படி சரியாக இருக்கும்?
அரசியல் நிர்ணய சபையில் இந்தப் பிரச்னைகள் எல்லாமே விவாதிக்கப்பட்டு கடைசியில் நாடாளுமன்ற ஜனநாயகம்தான், பல்வேறு இனங்களையும் மொழிகளையும், மதங்களையும் கொண்ட இந்தியாவுக்கு சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அடிக்கடி தேர்தல் நடப்பதால், அரசுக்குப் பெரும் பணம் செலவாகிறது என்பது மட்டுமல்ல, பெரிய அளவில் கருப்புப் பணம் புழங்குவதற்கும் அது வழிகோலுகிறது. ஆனால், அதற்குத் தீர்வு ஒரே நேரத்தில் தேர்தலா என்றால் அதுவும் இல்லை.
தேர்தலில் பணம் அதிக அளவில் புழங்குவதைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேபோல, தேவையில்லாத ஆட்சிக் கலைப்பு, அடிக்கடி தேர்தல் நடத்துதல் போன்றவை அரசியல் கட்சிகளால் மரபாகப் பின்பற்றப்படுவதைத் தடுக்க வலியுறுத்தப்பட வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயக முரணாக இருக்குமே தவிர பிரச்னைக்கான தீர்வாக இருக்க முடியாது!