நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அமெரிக்க அடாவடி!

சூரியஒளி மின்னாற்றல் உற்பத்தியில் உலக வர்த்தக நெறிமுறையை இந்தியா மீறிவிட்டது என்ற அமெரிக்க நிறுவனங்களின் குற்றச்சாட்டு நியாயமானது என்ற உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மேல் முறையீடு செய்யவுள்ளது. இந்த மேல்முறையீடு என்பது வழக்கு முடியும் வரையிலான தாற்காலிக தீர்வாகத்தான் இருக்க முடியும் என்று கருதப்படுகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:08 pm

ஆசிரியர்

சூரியஒளி மின்னாற்றல் உற்பத்தியில் உலக வர்த்தக நெறிமுறையை இந்தியா மீறிவிட்டது என்ற அமெரிக்க நிறுவனங்களின் குற்றச்சாட்டு நியாயமானது என்ற உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மேல் முறையீடு செய்யவுள்ளது. இந்த மேல்முறையீடு என்பது வழக்கு முடியும் வரையிலான தாற்காலிக தீர்வாகத்தான் இருக்க முடியும் என்று கருதப்படுகிறது.
 சூரியஒளி மின்னாற்றல் உற்பத்தியில் தேவைப்படும் சோலார் செல்ஸ், சோலார் மாடூல்ஸ் எனப்படும் துணைக் கருவிகளை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யாமல், உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும்விதமாக திட்டங்களை அறிவித்துள்ளது. இது உலக வர்த்தக நெறிமுறைக்கு எதிரானது என்று அமெரிக்க சோலார் மின்உற்பத்திக்கான கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியா மீது வைத்த குற்றச்சாட்டு நியாயமானது என்கின்றது உலக வர்த்தக அமைப்பின் விசாரணை நடுவர்மன்றம்.
 இந்தியாவில் எல்லா காலங்களிலும் வெயில் காய்கிறது. ஆகவே, சூரியஒளி மின்சாரத்தின் மூலம் இந்தியாவின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதே இந்திய அரசின் நம்பிக்கை. இந்த மாற்று மின்னாற்றல் மூலம், அனல்மின் நிலையங்களின் மின்உற்பத்தியைக் குறைக்கவும், புவிவெப்பமாதலைத் தடுக்கும் பணியில் மேலும் தீவிரமாக உதவிடவும் இயலும். பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணுமின் சக்தியைக் கூடிய வரையில் தவிர்ப்பதற்கு சூரிய ஒளி மின்னாற்றலைப் போன்ற மாற்று எரிசக்திகளை ஊக்குவிப்பது என்பதுதான் அரசின் எண்ணமாக இருக்கக்கூடும்.
 2022-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரத்தை சூரியஒளி மூலம் தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதை ஊக்குவிக்கும் திட்டங்களை இந்தியா அறிவித்து வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான், இந்தியாவில் வீடுகளின் கூரைகளில் அமைக்கப்படும் சூரியஒளித் தகடுகளுக்கு மானியம் அளிப்பது என்பது. இந்தத் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் அரசு சலுகைகள் அறிவித்துள்ளது.
 ஒரு மெகாவாட் மின்உற்பத்திக்கான கருவிகளை வழங்குவோருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்பதும் இதில் ஒருவகை சலுகை. இத்தகைய சலுகைகளை அறிவித்த அரசு, அத்தகைய நிறுவனங்கள் சூரியமின் உற்பத்திக்கான கருவிகளின் ஒரு பகுதியை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கினால் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும்.
 இதே நிபந்தனை பசுமை மின்னாற்றல் உற்பத்தியில் ஒருபகுதியான காற்றாலைகளுக்கும் பொருந்தும். 2022-ஆம் ஆண்டுக்குள் 60,000 மெகாவாட் மின்உற்பத்தியை காற்றாலைகள் மூலம் எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இத்துறையை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த ஊக்கம் அனைத்தும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அமைகின்றன.
 இவ்வாறு உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தினால், அமெரிக்க நிறுவனங்களால் சூரியஒளி மின்னாற்றல் உற்பத்திக்கான கருவிகளை இந்தியாவில் விற்க முடியாத நிலை ஏற்படும். ஆகவே, உலக வர்த்தக நெறிமுறையை இந்தியா மீறிவிட்டது என்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாப்பதுதான் உலக வர்த்தக நிறுவனத்தின் குறிக்கோள் என்கிற குற்றச்சாட்டை மெய்ப்படுத்துகிறது இந்தத் தீர்ப்பு.
 இந்தியாவைப் பொருத்தவரை, இத்தகைய நிபந்தனை என்பது, அதாவது உள்நாட்டு நிறுவனங்களின் பொருள்களை குறிப்பிட்ட அளவு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டாயம், எந்தெந்த திட்டங்களுக்கு மானியம் அளிக்க அரசு உறுதி கூறியுள்ளதோ அந்தத் திட்டங்களுக்கு மட்டுமே. அவை இந்தியாவின் அதிகபட்ச இலக்கில் மிகவும் சிறிய பகுதி. அதனால் பயனடையப் போவது சாதாரண வீட்டுக் கூரையில் சூரிய மின்தகடுகள் அமைப்போர் மட்டும்தான். இதை அவர்கள் பெரிது படுத்த வேண்டிய அவசியமே இல்லை.
 ஆகவே, பெருவாரியான கருவிகள் வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படும். இதனால், உலக வர்த்தக விதிமுறைகள் மீறப்பட்டுவிட்டதாகப் பொருள் இல்லை. இதனை மேல்முறையீட்டில் வலியுறுத்துவோம் என்கிறது அரசுத்தரப்பு. அமெரிக்காவும்கூட, பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களில் இத்தகைய உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு, சலுகை அளிப்பதாகவும், அதைப் போன்றதுதான் இந்திய அரசு தனது உள்நாட்டு நிறுவனங்களை ஆதரிப்பது என்றும் விளக்கம் தருகின்றனர்.
 புவிவெப்பம் அதிகரிக்காமல், பசுமை ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் வற்புறுத்துகின்றன. அதற்காக வளரும் நாடுகள் தங்களது நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து புவிச்சூழலை மேன்மைபடுத்த வலியுறுத்துகின்றன. ஆகவே, அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தியைப் படிப்படியாகக் குறைக்க நிதியுதவி, தொழில்நுட்பம் அளிக்கின்றன.
 இந்த நிதியுதவி முழுவதும் அமெரிக்கா அல்லது வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களுக்கே மறுசுழற்சியில் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள். இந்தியா போன்ற வளரும் நாடுகள், உள்நாட்டு நிறுவனங்களின் சூரியஒளி மின்உற்பத்திப் பொருள்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படும். அவர்கள் புவிவெப்பக் குறைப்புக்காக வழங்கிய பணம், மீண்டும் அவர்களிடமே போய்ச் சேராது.
 இது அப்பட்டமான அமெரிக்க அடாவடி என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், உலக வர்த்தக அமைப்பின் விசாரணைக் குழுவின் முன்பாக மேல்முறையீடு செய்துதான் தீர்வு காண விழைந்தாக வேண்டும்; வேறுவழியில்லை.
 வெளித்தோற்றத்துக்குத் தாராளம். ஆனால், கொடுத்த பணம் வீடு வந்து சேர வேண்டும். இதற்குப் பெயர்தான் உலகமயமாக்கல். இப்போது புரிகிறதா சூட்சுமம்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.