குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை நாம் அசட்டையாக ஒதுக்கிவிட முடியாது. கடந்த சில நாள்களாகவே, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்குர், நீதித் துறை எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், சவால்களையும் குறித்துக் கவலை தெரிவித்து இருக்கிறார்.
தில்லியில் நடந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில முதல்வர்கள் கூட்டு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய தாக்குர், நீதித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுத்தபடி பேசியதைக் கேட்ட அனைவரும் நிலைகுலைந்தனர். ""காலதாமதம் இல்லாமல் தீர்ப்புகள் வழங்க முடியாத சூழல் நிலவுமேயானால், பிரதமரின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் எப்படி முன்வருவார்கள்'' என்கிற கேள்வியை சரியான நேரத்தில், பொருத்தமான இடத்தில் எழுப்பி இருக்கிறார் தலைமை நீதிபதி தாக்குர். அவர் எழுப்பிய கேள்விகள் அனைத்துமே உடனடியாக இந்திய அரசு எதிர்கொண்டாக வேண்டியவை.
1950-இல் சுதந்திர இந்தியாவில் உச்சநீதிமன்றம் செயல்படத் தொடங்கியபோது, தலைமை நீதிபதி உள்பட மொத்தம் எட்டு நீதிபதிகள் இருந்தனர். அப்போது நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 1,215. அதாவது ஒரு நீதிபதிக்கு ஏறத்தாழ நூறு வழக்குகள் என்கிற நிலைமை. 1960-இல், நீதிபதிகளின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்தபோது, நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கையும் 3,247-ஆக அதிகரித்திருந்தது.
1977-இல், நீதிபதிகளின் எண்ணிக்கை 18 ஆகவும், வழக்குகளின் எண்ணிக்கை 14,501 ஆகவும் உயர்ந்தன. 2009-இல் நீதிபதிகளின் எண்ணிக்கை இப்போது இருக்கும் 31-ஆக அதிகரித்தது. ஆனால், நிலுவையில் தேங்கி இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 77,181-ஆக உயர்ந்தது. 2014-இல் தேங்கிக் கிடந்த வழக்குகள் 81,582. இப்போது நீதிபதிகளின் கடுமையான முயற்சியால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 60,260-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
1987-இல் சட்ட ஆணையம், 10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் என்கிற விகிதம் 50 நீதிபதிகள் என்று அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. 2002-இல் உச்சநீதிமன்றம், சட்ட ஆணையத்தின் பரிந்துரையைச் சுட்டிக்காட்டி, நீதிபதிகளின் எண்ணிக்கையை 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகளாக உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைந்த நாடாளுமன்றத்தின் சட்டத் துறைக்கான நிலைக்குழுவும் சட்ட ஆணையத்தின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வழிமொழிந்தது; எதுவும் நடக்கவில்லை.
இன்றைய நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் என்கிற நிலைமை காணப்படுகிறது. சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2.5 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களுக்குள் ஒவ்வொரு வழக்கையும் விவாதித்துத் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகக் கூறுகிறது. அமெரிக்காவில் ஒரு நீதிபதி நாளொன்றுக்கு மூன்று முதல் ஐந்து வழக்குகளை விசாரிக்கும்போது, இங்கே இந்தியாவில் பல நீதிபதிகள் சராசரியாக 150 வழக்குகளை விசாரிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் வழக்குகளை அவர்களால் எப்படித் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறது அந்த அறிக்கை.
உச்சநீதிமன்றத்திலேயே போதிய நீதிபதிகள் இல்லாத நிலையில், உயர்நீதிமன்ற, கீழமை நீதிமன்ற நிலைமை அதைவிட மோசம். 24 உயர்நீதிமன்றங்களில் 43% நீதிபதிகளின் இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. 1,044 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 599 பேர்தான் இருக்கிறார்கள். கீழமை நீதிமன்றங்களில் 5,000-க்கும் அதிகமான நீதிபதிகள் இடம் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதற்கு மாநில அரசுகளும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
இப்போது இருக்கும் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 21,000-த்தில் இருந்து 40,000 மாக உயர்த்தித் தந்தால்தான், பெருகி வரும் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியும் என்று தலைமை நீதிபதி தாக்குர் பிரதமருக்கு விடுத்திருக்கும் உணர்ச்சிகரமான வேண்டுகோள் அனைவரையுமே உலுக்கி விட்டிருக்கிறது.
"இதை ஏதோ வழக்குத் தொடுப்பவர்கள் சார்பாகவோ, சிறையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகள் சார்பாகவோ, வேலைப்பளுவால் வேதனைப்படும் நீதிபதிகள் சார்பாகவோ மட்டும் நான் கோரிக்கை எழுப்பவில்லை. தேசத்தின் வளர்ச்சி விரைந்து தீர்ப்புகள் வழங்கப்படுவதில்தான் இருக்கிறது என்பதால் கூறுகிறேன். காலதாமதமான தீர்ப்புக்குப் பழியை நீதித்துறையின்மீது மட்டுமே சுமத்துவது தவறு' என்கிற தலைமை நீதிபதியின் கருத்தை யாரால் மறுக்க முடியும்?
அன்றைய கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நீதித் துறையுடன் உடனடியாகக் கலந்தாலோசித்து இந்தப் பிரச்னைக்கு விடை காண்பதாக உறுதியளித்திருக்கிறார். நீதித் துறையும் அரசும் இணைந்து செயல்பட்டுப் பிரச்னைகளுக்கு சுமுகமான, ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்படுவதுதான், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தாக்குர் கூறுவதுபோல தேசத்தின் வளர்ச்சிக்கான உடனடித் தேவை!