நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

போகாத ஊருக்கு வழி!

மத்திய நிதியமைச்சகம் எடுக்கும் பல முடிவுகள் திகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றன. வருங்கால வைப்பு நிதியில் தேவையில்லாமல் நிபந்தனைகளை விதித்துப் பிறகு அதைத் திரும்பப் பெற்றதிலாகட்டும், சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டியைக் குறைக்க முற்பட்டதிலாகட்டும், நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் குறித்த சிந்தனையே நரேந்திர மோடி அரசுக்கு இல்லாமல் இருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:06 pm

ஆசிரியர்

மத்திய நிதியமைச்சகம் எடுக்கும் பல முடிவுகள் திகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றன. வருங்கால வைப்பு நிதியில் தேவையில்லாமல் நிபந்தனைகளை விதித்துப் பிறகு அதைத் திரும்பப் பெற்றதிலாகட்டும், சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டியைக் குறைக்க முற்பட்டதிலாகட்டும், நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் குறித்த சிந்தனையே நரேந்திர மோடி அரசுக்கு இல்லாமல் இருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்துத் தரப்பு மக்களையும், குறிப்பாக அடித்தட்டு மக்களைக் குறிவைத்து சில நல்ல திட்டங்களை முன்வைக்கிறார் என்றால், நிதியமைச்சர் அதை மழுங்கடித்து அரசின்மீது வெறுப்பை அதிகரிக்க வைக்கும் அறிவிப்புகளைச் செய்தவண்ணம் இருக்கிறார்.
 கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்புத் திட்டம், அஞ்சல் நிலைய தொடர் வைப்புத் தொகை ஆகியவற்றின் வட்டியைக் குறைத்திருக்கிறது நிதியமைச்சகம். இதுபோன்று சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் அடுத்த காலாண்டுக்கு 1/4 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. பிரதமரால் அறிவிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருத்தி யோஜனா, முதியோர் சேமிப்புத் திட்டம், மாத வருமானத் திட்டம் போன்றவற்றுக்கு இந்த வட்டிக் குறைப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும்கூட சிறிய அளவில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
 அரசின் கடனீட்டு ஆவணங்களுடன் (செக்யூரிட்டீஸ்) இணைக்கப்பட்ட சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டியை ஒவ்வொரு காலாண்டுக்கும் தீர்மானிப்பது என்கிற முடிவையும் எடுத்திருக்கிறார்கள். தற்போது அவை நிதியாண்டு அடிப்படையில் நிச்சயிக்கப்படுகின்றன. இனி வரப்போகும் நாள்களில் மேலும் அதிகரித்த வட்டிக் குறைப்பை நடுத்தர வர்க்க சிறு முதலீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
 குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கும், மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கும் இது சாதகமானது என்கிற விசித்திரமான காரணத்தை முன்வைக்கிறது நிதியமைச்சகம். சிறு சேமிப்புதான் நடுத்தர, சாமானிய மக்களின் சேமிப்பின் அடிப்படை எனும்போது, அதன் வட்டிக் குறைப்பு எப்படி அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது நமக்குப் புரியவில்லை.
 இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) ஏறத்தாழ 30% சேமிப்பாக இருக்கிறது. ஏனைய நாடுகளில் எல்லாம் அரசு பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மாத வருவாய் ஈட்டுவோர் அவர்களது பணிக்காலம் முழுவதும் சேமித்து வைக்கும் தொகைதான் அவர்களது முதுமைக்காலப் பாதுகாப்புக்கும், குழந்தைகளின் வருங்காலத்துக்கும் உதவியாக இருக்கிறது.
 பணி ஓய்வு பெற்ற பிறகும்கூட பலர் சிக்கனமாக வாழ்ந்து சேமிக்கின்றனர். பரவலான வங்கிப் பரிமாற்ற வசதி இன்னும்கூட இந்தியாவில் ஏற்படாத நிலையிலும், அடித்தட்டு ஏழை மக்கள் சேமிக்கத் தவறுவதில்லை. தேசிய சேமிப்பின் மூன்றில் இரண்டு பங்கு, குடும்பங்களின் சேமிப்பால்தான் கிடைக்கிறது. அரசுத் துறைகளும், தனியார் வணிகக் கூட்டாண்மை துறையும் சேர்ந்து இரண்டில் ஒரு பங்குதான் சேமிப்புப் பங்களிக்கின்றன.
 இப்படிப்பட்ட பின்னணியில், அடிப்படைப் பொருளாதாரமும், நிதி நிர்வாகமும் தெரிந்தவர்கள்கூட, சிறு சேமிப்பை ஊக்குவித்து அதன் மூலம் பெறும் சேமிப்பை தேசத்தின் கட்டமைப்பு வசதிகளுக்குப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்று ஒப்புக்கொள்வார்கள். ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடி தனது "ஜன்தன்' திட்டத்தின் மூலம் இந்தியர்கள் அனைவரையும் வங்கிப் பரிமாற்றத்திற்குப் பழக்கவும், அதன்மூலம் சேமிப்பை அதிகப்படுத்தவும் முனையும்போது, நிதியமைச்சகம் வட்டி விகிதத்தைக் குறைத்து நடுத்தர மக்களின் சேமிப்பைத் தடுக்க முற்படுவது ஏன் என்பது புதிராக இருக்கிறது.
 அரசின் உத்தரவாதமுள்ள, பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள் இல்லாமல் போனால், சேமிப்புப் பழக்கத்தில் ஊறியிருக்கும் இந்தியர்கள் மோசடியான சீட்டு நிறுவனங்களிலும், இல்லையென்றால் அரசுக்கு எந்தவிதத்திலும் பயன்படாத தங்கம், மனை வாங்குதல் போன்றவற்றிலும் முதலீடு செய்ய முற்படுவார்கள். சிறு சேமிப்பின் வட்டிக் குறைப்பு என்பது அவர்களை பங்குச் சந்தையிலும், வங்கி சேமிப்புக் கணக்கிலும் முதலீடு செய்யத் தூண்டும் என்று நிதியமைச்சகம் நினைத்தால் அது ஏமாற்றத்தில்தான் முடியும்.
 இந்த முடிவின் பின்னணியில் இருப்பது பொதுத் துறை வங்கிகள்தான் என்று கூறப்படுகிறது. அரசின் சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், வங்கிகளின் வைப்பு, கடன் ஆகியவற்றின் வட்டியைக் குறைக்க முடியாமல் இருந்தது. இப்போது அவர்கள் தங்களது வட்டி விகிதத்தையும் குறைப்பார்கள். அதனால், தொழில் முனைவோருக்கும், கடன் வாங்கும் வியாபாரிகளுக்கும், வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன் பெறுவோருக்கும் நன்மை ஏற்படும் என்பது வங்கித் தரப்பினரின் வாதம்.
 அதிக வட்டி தரப்படுவதால் அரசின் சிறு சேமிப்புத் திட்டங்கள் தங்களது வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்தது என்றும், இனிமேல் தங்களது சேமிப்புக் கணக்குகளிலும் வங்கி சேமிப்புகளிலும் கணிசமான வரவு இருக்கும் என்பதும் வங்கிகளின் எதிர்பார்ப்பு. ஆனால், அது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான்.
 கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுமக்களின் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம், சேமிப்பதற்குத் திட்டங்கள் இல்லாததல்ல, விலைவாசி அதிகரிப்பால் சேமிக்க வழியில்லாமல் இருப்பதுதான் காரணம். நிதியமைச்சகம் அரசனை (வங்கிகளை) நம்பிப் புருஷனை (நடுத்தர வர்க்கப் பொதுமக்கள்) கைவிடுகிறது. தவறான முடிவு!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.