நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கைகுலுக்கலா, அரவணைப்பா?

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டன் கார்ட்டர் கடந்த ஓராண்டில் இரண்டு முறை இந்தியா விஜயம் செய்துவிட்டார். நமது பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் அமெரிக்க விஜயமும், அதைத் தொடர்ந்து மீண்டும் ஆஷ்டன் கார்ட்டரின் இந்திய விஜயமும் இந்திய - அமெரிக்க உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:04 pm

ஆசிரியர்

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டன் கார்ட்டர் கடந்த ஓராண்டில் இரண்டு முறை இந்தியா விஜயம் செய்துவிட்டார். நமது பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் அமெரிக்க விஜயமும், அதைத் தொடர்ந்து மீண்டும் ஆஷ்டன் கார்ட்டரின் இந்திய விஜயமும் இந்திய - அமெரிக்க உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
 இந்திய - அமெரிக்க உறவு என்பது ராஜதந்திர ரீதியாக வலுவாக இருப்பது இந்தியாவுக்கு நல்லது. அதேநேரத்தில், எல்லா பிரச்னைகளிலும், அமெரிக்காவை வழிமொழிய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படுவதாக இருந்தால் அந்த உறவு நமக்கு ஏற்றதும் அல்ல. இதை முந்தைய மன்மோகன் சிங் அரசும், இப்போதைய நரேந்திர மோடி அரசும் நன்றாகவே உணர்ந்துதான் செயல்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
 கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவுக்கு மிக அதிகமாக ஆயுதங்களை வழங்கிய நாடு அமெரிக்காதான். 2007-இல் இருந்து இதுவரை 14 பில்லியன் டாலருக்கும் (ரூ.91,000 கோடி) அதிகமான ராணுவத் தளவாடங்களை நாம் அமெரிக்காவிலிருந்து பெற்றிருக்கிறோம். அடுத்த பத்து ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள (ரூ.6,50,000 கோடி) ராணுவத் தளவாடங்களை நாம் வாங்கினால்தான், சீனாவின் ராணுவ பலத்துக்கு சற்றொப்ப நிகராக நாம் நமது படைகளை வலுப்படுத்த முடியும். புதிய தளவாடங்கள் பெறுவது ஒருபுறம் இருக்க, நமது பழைய போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், காலாட்படையின் டாங்குகள் ஆகியவற்றை மாற்றி நமது ராணுவத்தைப் புதுப்பிக்கவும், நவீனப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.
 ஆஷ்டன் கார்ட்டரின் விஜயத்தில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான முடிவு, இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் தங்களது ராணுவ, கப்பல்படை, விமானப்படைத் தளங்களை பயன்படுத்திக் கொள்ளவும், எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் ஒப்புக்கொண்டிருப்பது. அதேநேரத்தில், இந்திய மண்ணில் அமெரிக்கப் படைகள் தங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
 அமெரிக்க எதிர்பார்ப்பான கூட்டுப் பயிற்சி, கூட்டுக் கண்காணிப்பு இரண்டையும் இந்தியா நிராகரித்து விட்டதில் அமெரிக்கத் தரப்புக்கு சற்று வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், கடல்வழிப் பாதுகாப்பு குறித்து இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கின்றன. இதற்கு ஆசிய - பசிபிக் பகுதிகளில் அதிகரித்து வரும் சீனாவின் ராணுவக் கப்பல்களின் நடமாட்டம்தான் பின்னணியான காரணம்.
 அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத்தான் சீனாவின் அதிகரித்த கடல்வழி ஆதிக்கத்தால் அச்சுறுத்தல் அதிகம். இந்து மகா சமுத்திரத்தில் மிகப்பெரிய சக்தியாக மாற சீனா முயன்று வருகிறது; பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணம் க்வாதர் என்கிற இடத்தில் தனது கடற்படைக்குத் தளம் அமைப்பதற்காக ஒரு துறைமுகத்தைத் தயார் செய்து வருகிறது. அதேபோல, இலங்கையிலும் துறைமுகங்களை அமைத்துக் கொடுத்து, படிப்படியாகத் தனது கடற்படையை நிறுத்துவதற்குத் தளம் அமைத்துக் கொள்ளத் திட்டமிடுகிறது.
 சீனாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் 65% இந்து மகா சமுத்திரத்தைக் கடந்துதான் செல்கிறது. இதுவரை இந்து மகா சமுத்திரத்தில், குறிப்பாக மலாக்கா வளைகுடா பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியாவின் முக்கியத்துவத்தை இப்போது சீனா பின்னுக்குத் தள்ள முற்பட்டிருக்கிறது. இந்து மகா சமுத்திரத்தில் நமது உரிமையும், முக்கியத்துவமும் குறைவது என்பது நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பின்னாளில் எழக்கூடும்.
 அமெரிக்காவுடனான கடற்படை ஒத்துழைப்பு என்பது இந்து மகா சமுத்திரத்தில் குறைவான ராணுவக் கப்பல்கள் உள்ள இந்தியாவுக்குப் புதிய பலத்தையும், அதிகரித்த கப்பல்களின் நடமாட்டத்தையும் தரும். சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஆதரவு அளித்துவரும் நிலையில், அமெரிக்காவுடனான தந்திரபூர்வ நெருக்கம், புத்திசாலித்தனமானது என்பதில் ஐயமில்லை.
 இந்தியாவின் பல பகுதிகளில் பல பிரிட்டீஷ் ராணுவ வீரர்களின் கல்லறைகள் காணப்படுவதுபோல, இங்கிலாந்துக்காக உலக யுத்தங்களில் போரிட்ட இந்திய வீரர்களின் நினைவுச் சின்னங்களை ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் காணலாம். இரண்டாம் உலகப் போரில் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் விழுந்தன. 1942-இல் விழுந்த அந்த விமானங்களின் பகுதிகளையும் வீரர்களின் உடமைகளையும் முடிந்தவரை தேடிப்பிடித்து அமெரிக்காவிடம் ஒப்படைத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. இதன் மூலம் சீனாவின் எதிர்ப்பையும் மீறி, அருணாச்சல பிரதேசம் நமது எல்லைக்கு உள்பட்டது என்பதை இந்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறுது.
 பாதுகாப்பு ஒப்பந்தங்கள், அமெரிக்கப் போர் விமானங்களை அவர்களது தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது, கடற்படையில் அமெரிக்காவுடனான கூட்டு ஒப்பந்தம் இவையெல்லாமே சரி, அதேநேரத்தில் சில உறுத்தலான கேள்விகளையும் நாம் கேட்டாக வேண்டும்.
 அமெரிக்காவுடன் நாம் நெருக்கமான உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், எந்த அளவுக்கு நெருக்கம் என்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டும். இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால், அமெரிக்காவின் நட்புறவு வேண்டும் என்பதில் காங்கிரஸுக்கும், பா.ஜ.க.வுக்கும் அதிகமான கருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை. நாடாளுமன்றத்திலேயே இந்த ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்தப்பட்டு, அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலுடன், அமெரிக்க உறவு நெருக்கமானதாக மட்டும் இருக்குமா, இல்லை அரவணைப்பாக மாறுமா என்பதைத் தெளிவுபடுத்துவது மோடி அரசின் கடமை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.