சித்திரை பிறப்பதற்கு முன்பே இந்த ஆண்டு கோடையின் தாக்கமும், தண்ணீர்ப் பஞ்சமும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவிலுள்ள 10 மாநிலங்களில் உள்ள 256 மாவட்டங்களைச் சேர்ந்த 2,55,923 கிராமங்கள் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. இதனால், 33 கோடி பேர் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
ஸ்வராஜ் அபியான் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் பொதுநல வழக்கில் உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, ஜார்க்கண்ட், பிகார், ஹரியாணா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறித்து மத்திய - மாநில அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவிலுள்ள 91 பெரிய நீர்த்தேக்கங்களில் 23% தண்ணீர்தான் காணப்படுகிறது. கோடை வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இது மேலும் கணிசமாகக் குறையக்கூடும். இதே மாதங்களில் 2009-ஆம் ஆண்டு 26% தண்ணீரும், 2012-ஆம் ஆண்டு 28% தண்ணீரும் இந்த நீர்த் தேக்கங்களில் காணப்பட்டன.
1987 வறட்சிக்குப் பிறகு 2001 வரை, பெரிய வறட்சி ஏற்படாமல் இந்தியாவை இயற்கை காப்பாற்றியது. கடந்த 15 ஆண்டுகளில் வறட்சி சூழலை இந்தியா மீண்டும் மீண்டும் சந்தித்து வருகிறது என்றாலும் இந்த ஆண்டு நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது என்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ இந்தியாவில் 40 சதவீத பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, குடிநீர் இல்லாமல், பாசனத்திற்கு வழியில்லாமல், நிலத்தடி நீரை உறிஞ்ச பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
வெயிலின் கொடுமை தாங்காமல் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெப்பக் காற்றுத் தாக்கத்தால் தெலங்கானாவில் 66 பேரும், ஆந்திரத்தில் 45 பேரும் மரணமடைந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு (2015) கோடை வெப்பத்தால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,300-க்கும் அதிகம். முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த ஆண்டுக்கான எண்ணிக்கை அதைவிட அதிகரிக்கக் கூடும்.
வறட்சியால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரம் ஆகியவைதான். மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் பகுதிகளில் காணப்படும் கடும் வறட்சியும், தண்ணீருக்கான போராட்டமும் மத்திய அரசை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. 50,000 லிட்டர் தண்ணீருடன் ரயில்கள் லாத்தூருக்கு அனுப்பப்படுகின்றன. இதுவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது. இப்படி எத்தனை நாளைக்கு ரயிலில் தண்ணீர் அனுப்பப் போகிறோம்? எத்தனை ஊர்களுக்கு அனுப்பிவிட முடியும்?
விவசாயம், உணவு, நீர்ப்பாசனம் போன்றவை மாநில அரசின் அதிகாரத்திற்கு உள்பட்டவை. வறட்சி நேரக்கூடும் என்று எதிர்பார்த்து மாநில அரசின் ஆட்சியாளர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாததால் வந்த விளைவுதான் இப்படிப்பட்ட வறட்சி. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிர மாநிலத்தின் பிரச்னைக்குக் காரணம் அரசியல்வாதிகள் கையாண்ட தவறான விவசாயக் கொள்கை.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு வெறும் 4 சதவீத விவசாயப் பரப்பில்தான் சாகுபடி செய்யப்படுகிறது என்றாலும், அந்த மாநிலத்தின் மொத்தப் பாசன நீரில் 70%, கரும்பு சாகுபடியால் உறிஞ்சப்படுகிறது. இங்கே தமிழகத்தில் அரசியல்வாதிகள் பொறியியல் கல்லூரிகளும், சாராய ஆலைகளும் அமைப்பதுபோல, மகாராஷ்டிரத்திலுள்ள முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் சர்க்கரை ஆலை அதிபர்களாக இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 20 புதிய சர்க்கரை ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மராத்வாடா பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் இந்த சர்க்கரை ஆலைகள் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சிவிடுகின்றன. பிறகு குடிநீருக்கு எங்கே போவது?
மிக அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சும் பயிர் கரும்பு. ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய, பயிரிடுவதிலிருந்து தயாரிப்புவரை 1,500 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் தேவைப்படுகிறது. பணப் பயிர் என்று கருதப்படும் கரும்பை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிய அளவில் பயனடைகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஆனாலும் கரும்பு உற்பத்தியையும், சர்க்கரை ஆலைகளையும் நாம் ஊக்குவிக்கிறோம். இதற்குப் பதிலாக சர்க்கரையை இறக்குமதி செய்துகொண்டு, குறைந்த அளவு பாசனம் தேவைப்படும் பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்; ஆனால், செய்வதில்லை.
கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் பிரச்னையை நாம் எதிர்நோக்குகிறோம். ஆனாலும் கோடையை எப்படி எதிர்கொள்வது, வறட்சியின் பாதிப்பை மட்டுப்படுத்துவது, தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் உயிரினங்களையும், வாழ்வாதாரங்களையும் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக சிந்திக்கவோ, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து நடத்தவோ முனையவில்லையே ஏன்? குளிர்ப்பதன அறையில் அமர்ந்து திட்டமிடுபவர்களுக்குத் தெருவோரவாசியின் பாதிப்புகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் வியப்பில்லைதான்!