நாமும் நினைத்தால் நடக்காதா?
மத்திய நீர்வள அமைச்சகமும் - கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் (ஐ.ஐ.டி. - கே) கங்கையை புத்தாக்கம் செய்யும் முயற்சிக்கான 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


மத்திய நீர்வள அமைச்சகமும் - கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் (ஐ.ஐ.டி. - கே) கங்கையை புத்தாக்கம் செய்யும் முயற்சிக்கான 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மத்திய அரசின் கங்கை நதி மேலாண்மைத் திட்டத்தை செம்மையாக நிறைவேற்றுவதற்கான தொழில்நுட்ப உதவியை ஐ.ஐ.டி. கான்பூர் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் அம்சம். இதற்காக, கங்கை நதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பையும் இதே நாளில் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசு கங்கை நதியை தூய்மைப்படுத்த மிகப்பெரும் தொகையைச் செலவு செய்து வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்குள் ரூ.20,000 கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நீங்கலாக, கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நான்கு கோடி மரங்களை நட்டு வளர்ப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மட்டும் இந்த நிதியாண்டில் ரூ.951 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மரங்களும்கூட, 200 ஆண்டுகளுக்கு முன்பு இமாலயத்தில் எத்தகைய வனச்சூழல் இருந்ததோ அதை அப்படியே மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அமையும் என்கிறார் மத்திய நீர்வளத் துறையின் அமைச்சர் உமா பாரதி.
கங்கை நதியைத் தூய்மை செய்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. குறுகிய காலத்தில் செய்துவிடவும் முடியாது. மத்திய அமைச்சர் உமா பாரதி குறிப்பிட்டதைப்போல, இங்கிலாந்தில் தேம்ஸ் நதியைத் தூய்மை செய்ய 27 ஆண்டுகள் ஆகின. கங்கைக்கும் அதே காலஅளவு ஆகும் என்று கொள்ள வேண்டியதில்லை. இன்றைய தொழில்நுட்பமும், கண்காணிப்பு முறைகளும் இதை வேகமாக நடைபெறச் செய்யும்.
கங்கை நீர்ப்பிடிப்புப் பகுதியில் வனத்தை உருவாக்குவதன் மூலம், மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன், வனத்தின் வழியாக நீர் தொடர்ந்து கசிந்துகொண்டே இருக்கும். இது நதியின் உயிர்ப்பான நீரோட்டத்துக்குத் துணை புரியும்.
நதிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் சாக்கடைக் கழிவுகள் சுத்திகரிப்பு மையம், தொழிற்கழிவுகள் சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்துவதை மட்டுமே தீர்வாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால் அதனை விடவும் முக்கியமானது, நதியில் ஒரு குறிப்பிட்ட அளவு நீர் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்வது.
இன்றைய எல்லா ஜீவநதிகளின் பிரச்னை என்னவென்றால், ஆற்றில் எப்போதும் ஓடக்கூடிய நீர் அளவு மிகவும் குறைந்துபோவதும், சில நேர்வுகளில் வறண்டுபோவதும்தான். இதற்குக் காரணம் அணைகள். கங்கை நதி ஐந்து மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தனது சுய தேவைக்காக அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டிக்கொள்வதால் கங்கையின் பல இடங்களில் நீரோட்டம் இல்லாத நிலைமை ஏற்படுகிறது.
ஜீவநதியாகவே இருந்தாலும்கூட நதியின் நீரளவு குறையும்போது, ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. குறைவான நீரோட்டம் உள்ள நதியில் ஆக்கிரமிப்புகளுடன் கூடவே கழிவுகளும் கலக்கும்போது, நதி வெள்ளம் சாக்கடை வெள்ளமாக மாறிவிடுகிறது. எல்லா நதிகளுக்குமே ஏற்படும் சோதனை இதுதான்.
தற்போது தொடங்கப்பட்டிருக்கும் கங்கை நதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் கங்கை நதியை மீட்டெடுப்பதில் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, புதுமை, சமூகப் பங்களிப்பு, பொருளாதாரம், நிதி ஆதாரம், முதலீடு, வன விரிவாக்கம் என எல்லா வகையிலும் பரந்துபட்ட பார்வையுடன் செயல்படும். இதற்கான உதவிகளை ஐ.ஐ.டி. கான்பூர் வழங்கும்.
இதேபோன்று, தமிழ்நாட்டில் காவிரி, தாமிரவருணி இரண்டையும் மீட்டெடுக்க நாம் ஏன் தனியாக ஒரு மையத்தை, அந்நதிகளின் வழித்தடத்தில் உள்ள தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து தொடங்கக் கூடாது?
அண்மையில் கோவையில், நொய்யல் மீட்டெடுப்பு பணியில் சிறுதுளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திவரும் சேவை, மறைந்துபோன நொய்யலை மீண்டும் தடம் காணச் செய்துள்ளது. கோவை மக்களுக்கான ஒரே நதி நொய்யல் மட்டுமே. சிறுவாணி அந்நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தாலும், அது தமிழகத்தின் நதி அல்ல; கேரளத்தின் நதி.
ஒரு நொய்யல் நதியை மீட்டெடுப்பது தொண்டு நிறுவனங்களால் சாத்தியமாகும் என்றால், காவிரியையும் தமிரவருணியையும் ஏன் அந்த நதி பாயும் நகரங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் தூய்மை செய்ய முடியாது?
காவிரி, தாமிரவருணி இரு நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அடர்வனமாக்கும் முயற்சிகளும், நதியைப் பயன்படுத்தும் வழக்கத்தில் மக்களிடையே புதிய பழக்கத்தை உருவாக்கும் முயற்சியும், சாக்கடை மற்றும் தொழிற்கழிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் பணியையும் மக்களும், தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்வது சாத்தியமே. இதற்கு மாநில அரசு ஆதரவு, அதிகாரிகளின் துணையையும் அளித்தால் போதுமானது.
இந்த இரு நதியால் பயன்பெறும் நகர மக்களும், நிறுவனங்களும், தொழிலதிபர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்ப சிறு பணிகளை மேற்கொள்ள முன்வருவார்கள். இரு நதிகளின் வழிநெடுகவும் உள்ள கல்லூரிகளின் உதவியால் தொழில்நுட்பமும், மக்களின் உதவியால் நிதியும் பணிகளும் சாத்தியமே.
வைகை கரை உடைந்தபோது, ஒவ்வொரு குடும்பமும் ஓர் ஆள் உழைப்பை நல்கிய திருவிளையாடல் புராணம் விளைந்த மண்ணில், யாருக்காகக் காத்திருக்க வேண்டும் நம் காவிரியை, நம் தாமிரவருணியை மீட்டெடுக்க?
காவிரி, தாமிரவருணி இரண்டு நதிகளும் கங்கையைவிட மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. கங்கையைக் காப்பாற்ற மத்திய அரசு இருக்கிறது. ஆனால், காவிரியையும் தாமிரவருணியையும் நாம்தான் காப்பாற்றியாக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...