காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மாற்றம்.. முன்னேற்றம்!

கட்டுமானப் பணி மற்றும் கட்டடம் இடித்தலில் ஏற்படும் கழிவுகளை அகற்றுவது குறித்து முதல்முறையாக மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பாக ஒரு விதிமுறை வெளியிட்டது. கட்டடம் கட்டும், இடிக்கும் அனைவருக்கும் இந்த விதி பொருந்தும். அளவில் சிறிய கட்டடம், பெரிய கட்டடம் என்ற பேதங்கள் இல்லை. இதைக் கண்காணிக்கும், நடைமுறைப்படுத்தும்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:02 pm

ஆசிரியர்

கட்டுமானப் பணி மற்றும் கட்டடம் இடித்தலில் ஏற்படும் கழிவுகளை அகற்றுவது குறித்து முதல்முறையாக மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பாக ஒரு விதிமுறை வெளியிட்டது. கட்டடம் கட்டும், இடிக்கும் அனைவருக்கும் இந்த விதி பொருந்தும். அளவில் சிறிய கட்டடம், பெரிய கட்டடம் என்ற பேதங்கள் இல்லை. இதைக் கண்காணிக்கும், நடைமுறைப்படுத்தும், தண்டிக்கும் பொறுப்பு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தது. இந்த விதிமுறை அந்தந்த நகரங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஆறு மாதங்களிலிருந்து 18 மாதங்களுக்குள்ளாக அமலுக்கு வந்தாக வேண்டும் என்று மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.
 இந்தக் கழிவுகளை மறுபயன்பாட்டுப் பொருளாக்கும் நிறுவனங்கள் நீர்நிலைகள், மக்கள் வசிப்பிடம், தேசியப் பூங்கா, மத, கலாசார மையங்களுக்கு பாதிப்பில்லாத தொலைவில் அமைய வேண்டும் என்றும் இந்த விதிமுறை சொல்கிறது.
 இத்தகைய நெறிமுறை தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ளாட்சி விதிகளில் அமலில் உள்ளது. ஒவ்வொரு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இதற்கான விதிமுறை மற்றும் கட்டணங்கள் மாறுபடுமே தவிர, இத்தகைய நடைமுறை தமிழ்நாட்டில் உள்ளது என்பதும், நாம் முன்னோடியாகவும் இருக்கிறோம் என்பது பெருமிதம்தான். இருப்பினும், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதும் கசப்பான உண்மை.
 ஒரு கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டுமானால், ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று மாநகராட்சிக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இது மாநகராட்சிக்கு மாநகராட்சி வேறுபடும். மாநகராட்சியின் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலமே இந்தக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும் என்பதோடு, இந்த வாகனங்கள் மாநகராட்சியில் பதிவுக் கட்டணம் செலுத்தி (ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை) கழிவுகளை மாநகராட்சி குறிப்பிடும் இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும். விதிகள் மீறப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
 குறிப்பிடப்படும் பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளை மாநகராட்சி ஏலம் விட்டு, வருவாய் பெறும். ஆனால், இது நடைமுறையில் இல்லை. உள்ளூர் எம்.எல்.ஏ., மாமன்ற உறுப்பினர், வட்டம், மாவட்டம் ஆகியோருக்குச் செலுத்த வேண்டிய கப்பம் தரப்படாவிட்டாலோ, சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர், அலுவலர்களை கவனிக்காமல் விட்டாலோ மட்டும்தான் விதிமுறை பாயும்.
 கட்டடங்களின் கழிவு எதுவுமே வீண்பொருள் அல்ல. அனைத்தும் மறுபயன்பாட்டுக்கு உரியவை. செங்கல் இடிபாடுகள் அனைத்தும் மீண்டும் தூளாக்கப்பட்டு, கட்டடப் பயன்பாட்டுக்கே பயன்படுத்தப்படுகின்றன. பழைய ஜன்னல், நிலைப்படிகள் வேறு மரவேலைகளுக்குப் பயனாகின்றன. இதற்காக ஒரு விலை தரப்படுகிறது. இருந்தும், பெரும்பாலான நேர்வுகளில், சிறு கட்டுமானப் பணியாக இருப்பின் எந்தவித பொறுப்பும் இல்லாமல் கட்டடக் கழிவுகளை தெருவில் குப்பைத் தொட்டி அருகே கொட்டுவதால் மாநகராட்சிக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தக் கழிவுகள் பலவும் தெருச் சாக்கடைகளை அடைத்துக்கொண்டுவிடுகின்றன. இதனால், அந்தப் பகுதியில் சாக்கடை நீர் வெளியேறுவதும், மழை நீர் வெளியேறுவதும் தடைபடுகிறது.
 கட்டடம் கட்டுவோர் தெருவில் மணல் கொட்டுவார்கள்; சாலையை அடைத்துக்கொண்டுவிடும். இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவர். கம்பி வளைக்கும் பணிகள் தெருவில்தான் நடைபெறும். இதற்கான அனுமதி பெறப்பட்டதா அல்லது அனுமதி வழங்கிய அதிகாரி இந்த மணல், ஜல்லியை அடுத்தவருக்கு இடையூறு இல்லாத இடத்தில் கொட்டவும், கம்பிகளை மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத இடத்தில் வளைக்கவும் உத்தரவிடவில்லையா? இந்தக் கேள்விகள் யாருக்கும் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.
 தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் கட்டுமான மற்றும் கட்டடக் கழிவுகள் மேலாண்மை விதி-2016 இத்தகைய சிக்கலை அதனதன் தன்மை வாரியாக, நகர மக்கள் தொகைவாரியாகப் பகுத்துச் சொல்கிறது.
 கட்டுமானம் மற்றும் கட்டடக் கழிவுகள் விதி அனைவருக்கும் பொருந்தும். தனிநபர் ஒருவர் தனது கட்டுமான, கட்டடக் கழிவுகளை எவ்வாறு வெளியேற்றப்போகிறார் என்பதை அல்லது இந்தக் கழிவுகளை அகற்றும் பதிவு பெற்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கும் விவரத்தைத் தெரிவித்தப் பிறகுதான் கட்டுமானம் அல்லது கட்டட இடிப்பை மேற்கொள்ள முடியும்.
 கட்டடக் கழிவுகளைப் பெருமளவில் அகற்றும் நிறுவனங்கள் (ஒரு நாளைக்கு 20 டன் அல்லது ஒரு மாதத்தில் 300 டன் அகற்றுவோர்) இந்தக் கழிவுகளை கான்கிரீட், மண், இரும்பு, மரம் மற்றும் பிளாஸ்டிக், செங்கல் மற்றும் சுண்ணாம்புக்காரை என்று பிரித்து அதற்குரிய இடங்களில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும் என்று வரன்முறைப்படுத்துகிறது மத்திய அரசின் அறிக்கை.
 வரைபடத்தில் குறிப்பிடப்படும் கட்டடத்தைக் கட்டுவதற்கு எந்த அளவுக்குச் செங்கல், மணல், சிமெண்ட் தேவை என்பதையும், ஒரு கட்டடத்தை அகற்றும்போது எந்த அளவுக்குக் கழிவுகள் ஏற்படும் என்பதையும் தீர்மானிக்க ஒரு பொறியாளரால் இயலக்கூடிய செயல்தான். அவ்வாறு கட்டடங்களின் பரப்பளவைக் கருத்தில் கொள்ளாமல், அதன் மதிப்புக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிப்பதே சரியாக இருக்கும்.
 நரேந்திர மோடி அரசு குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், சில அத்தியாவசிய அடிப்படை மாற்றங்களை மோடியின் அரசு விளம்பரம் இல்லாமல் செய்து வருகிறது என்பதற்கு இந்த விதிமுறை ஓர் எடுத்துக்காட்டு. சாதாரண விஷயம்தான். ஆனால், இது முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.