காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பரபரப்புக்குத்தான் பயன்படும்!

விக்கிலீக் சில ஆவணங்களை வெளியிட்டு உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியதற்குப் பிறகு, தற்போது பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தின் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் குறித்த ஆவணங்கள் என்பதால் இந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:57 pm

ஆசிரியர்

விக்கிலீக் சில ஆவணங்களை வெளியிட்டு உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியதற்குப் பிறகு, தற்போது பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தின் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் குறித்த ஆவணங்கள் என்பதால் இந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 கோடிக்கணக்கான ஆவணங்கள் ஜெர்மன் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்று, அதனை சர்வதேசப் புலனாய்வு நிருபர்கள் அமைப்பு ஆய்வு செய்து, வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள், மிகவும் மேலெழுந்தவாரியான குற்றச்சாட்டுகளையே முன்வைக்கின்றன. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 500 பேர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், இவர்களில் குறிப்பாக நான்கு பேரின் பெயர்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன: நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர்கள் கே.பி. சிங் (டி.எல்.எப்.), வினோத் அதானி (அதானி குழுமம்). இந்த நான்கு பேருமே இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள்.
 நடிகர், நடிகை மற்றும் தொழிலதிபர்களைச் சுட்டிக்காட்டும் இவர்கள், ஏன் இந்திய அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவில்லை? இந்திய அரசியல்வாதிகள் ஒருவர்கூட இத்தகைய புகார்களில் சிக்கவில்லையா? பனாமா ஆவணங்களில் வெளியான தகவல் காரணமாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்மந்தர் டேவிட் கன்லாசன் தனது பதவியிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார். அதுபோல, இந்தியாவில் ஒருவர்கூடவா அந்தப் பட்டியலில் இல்லை?
 வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சேமிக்கப்படும் அல்லது தொழில் முதலீட்டில் போடப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான ஆதாரம் என்ன? ஏன் இவர்கள் யாரையும் தண்டிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
 கோடிக்கணக்கான ஆவணங்களைப் பரிசீலித்த இந்தக் குழு, யார் யார் எந்தெந்த வெளிநாட்டு நிறுவனங்களில், என்ன பெயரில், எவ்வளவு தொகை முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் முன்வைப்பதே சரியானதாக இருக்கும். அவ்வாறு முன்வைக்க முடியாதபோது, அந்தக் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவதும் இயலாது. அதற்குச் சொந்தமானவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் இயலாது.
 கருப்புப் பணத்தை மீட்பதற்காக இந்திய அரசு உருவாக்கிய சிறப்புப் புலனாய்வு குழுவுக்குள்ள மிகப்பெரிய சவால், இந்த கருப்புப் பணப் பட்டியலை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதுதான். ஏனெனில், இந்த கருப்புப் பணப் பட்டியலை சில பொது அமைப்புகள், அதாவது விக்கிலீக் மற்றும் புலனாய்வு நிருபர்கள் அமைப்பு போன்றவை வெளியிட்டாலும்,அதற்குரிய நிறுவனத்தின் மூலம் பெற்றால் மட்டுமே அந்த சாட்சியத்துக்கு வலு சேர்க்கும். இவை அனைத்தும் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள். இவற்றைக் கட்டாயப்படுத்த இந்திய அரசால், இந்தியப் புலனாய்வு அமைப்புகளால் முடியவில்லை.
 இந்தியாவைப் பொருத்தவரை கருப்புப் பணம் வைத்திருப்போர் இந்திய மக்களிடம் ஊழலால் கொள்ளையடித்த அல்லது வரிஏய்ப்பு செய்த நபர்கள். ஆனால், அந்த நாடுகளைப் பொருத்தவரை அவர்கள் வாடிக்கையாளர்கள். அந்த நாடுகளுக்கு இந்தியாவின் நலனைவிட, அதன் வாடிக்கையாளர் நலன், நம்பிக்கை முக்கியம். தங்கள் நாட்டு வங்கிகளின் வைப்பு நிதியாகப் பெறப்படும் பணம் கருப்பா, வெள்ளையா, நியாயமாக சம்பாதித்ததா, ஊழல் பணமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறை இருக்க நியாயமில்லை.
 ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில், மலேசியா அரசிடம் உரிய ஆவணங்களைப் பெற இதுவரை சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் முடியவில்லை. இது தொடர்பான வழக்கில் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்லும் ஒற்றைச் சொற்றொடர், "வெளிநாட்டு நிறுவனங்கள் எங்களுக்கு உதவிட முன்வரவில்லை' என்பதுதான்.
 இத்தகைய புலனாய்வு அமைப்புகளால் பூட்டப்பட்ட ஆவணங்களை (என்கிரிப்ட்டெட் டாக்குமென்ட்) திறந்து பார்க்க முடியும் என்றால், அதை அப்படியே இந்திய அரசுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக இந்தியப் புலனாய்வு அல்லது வருமான வரி அலுவலர்கள் கேட்கும் கூடுதல் விவரங்களையும், இவர்களே தேடியெடுத்து இந்திய அரசுக்குக் கொடுத்து உதவிட வேண்டும்.
 கருப்புப் பணம் என்பது இருவகை. முதலாவது வரிஏய்ப்பு. தங்களுக்கு வெளிநாட்டில் வர்த்தகம், கலைநிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் கிடைத்த நியாயமான ஊதியத்தை அந்த நாட்டிலேயே வைத்திருப்பது அல்லது முதலீடு செய்வது. இன்னொன்று, இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்தொடங்க அல்லது பொருள்களை இந்தியாவுக்கு விற்க சில சலுகைகள் வழங்கியதற்காக அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அங்குள்ள வங்கிகளில் இவர்கள் பெயரில் போடுகின்ற பணம். இது லஞ்சப்பணம் என்றாலும், அதற்கான வரியை அந்த நாட்டில் செலுத்திக் கொண்டிருக்கும்வரை அது அந்த நாட்டவருக்கு கருப்புப் பணம் அல்ல. இந்தப் பணத்தை அவ்வப்போது அன்னிய முதலீடு என்ற பெயரில் இந்தியாவுக்குக் கொண்டுவந்து, தொழில்வளர்ச்சி என்ற பெயரில் சலவைசெய்து விடுகிறார்கள். அன்னிய முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் திருப்பி எடுத்துச் செல்லவும் முடியும்.
 வெளிநாட்டில் கருப்புப் பணத்தை தேடிக் கொண்டிருப்பதில் காலத்தை வீணடிக்காமல், இந்தியாவுக்குள் கருப்புப்பணம் வருவதைத் தடுக்கும் நெறிமுறைகளைப் பலப்படுத்துவதே சரியானது. அது சாத்தியமில்லை என்கிற நிலையில், இதுபோன்ற ஆவணங்கள் பரபரப்புக்குத்தான் உதவுமே தவிர, அதனால் வேறு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.