காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கொல்கத்தா உணர்த்தும் பாடம்!

உலகில் பல பகுதிகளிலும் மேம்பாலங்களும், கட்டடங்களும் இடிந்த விழுந்திருக்கின்றன என்றாலும், இந்தியா எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்துமே கவனக்குறைவாலும், போதிய அரசுத் தரப்பு கண்காணிப்பு இல்லாததாலும், அதிகாரிகளின் ஊழல் காரணமாகவும்தான் நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:56 pm

ஆசிரியர்

ஆழிப்பேரலையைப் போலவோ, நில நடுக்கம் போலவோ கட்டடங்களும், பாலங்களும் இடிந்து விழும் நிகழ்வுகளை இயற்கைச் சீற்றம் என்றோ, மனித சக்திக்கு அப்பாற்பட்ட, தடுக்க இயலாத விபத்து என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது. உலகில் பல பகுதிகளிலும் மேம்பாலங்களும், கட்டடங்களும் இடிந்த விழுந்திருக்கின்றன என்றாலும், இந்தியா எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்துமே கவனக்குறைவாலும், போதிய அரசுத் தரப்பு கண்காணிப்பு இல்லாததாலும், அதிகாரிகளின் ஊழல் காரணமாகவும்தான் நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கட்டட ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் இணைந்து அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவது தொடர்ந்து வருகிறது. அதன் சமீபத்திய எடுத்துக்காட்டுதான், கடந்த வியாழக்கிழமை கொல்கத்தா, விவேகானந்தா சாலையில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததும், 25 உயிர்கள் அந்த இடத்திலேயே பலியாகி இருப்பதும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதும்.

2009-இல் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணி 2010 ஆகஸ்ட் மாதத்தில் முடிந்திருக்க வேண்டும். ஆரம்பம் முதலே இந்த மேம்பாலத்திற்கு உள்ளூர் மக்களின் எதிர்ப்பு இருந்துவந்தது. நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. தேவையான அனுமதிகளை வழங்குவதிலும் பிரச்னைகள் இருந்தன. இதன் விளைவாக, பணி முடங்கியது. காலதாமதத்தால் கட்டுமானச் செலவு அதிகரித்துவிட்ட நிலையில், ஒப்பந்தக்காரர் வேலையை நிறுத்தி விட்டார்.

இந்த மேம்பாலப் பணி நிறைவு பெறாமல் இருந்ததற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. மேம்பாலத்தின் ஒரு பகுதியை ஸ்ட்ராண்ட் சாலையில் எந்த இடத்தில் இறக்குவது என்பதில் கொல்கத்தா மாநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறினார்கள். அதன் இன்னொரு பகுதி சென்றடையும் இடம் கொல்கத்தா துறைமுகக் கழகத்துக்குச் சொந்தமான இடம். அவர்கள் அதற்கு அனுமதி தர மறுத்தனர். வியாழக்கிழமை விபத்து நடக்கும் வரையில்கூட, இந்தப் பிரச்னைக்கு முடிவு எட்டப்படவில்லை. ஆனால், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்தன என்பதுதான் வேடிக்கை.

ஏறத்தாழ 62 மாதங்களாக, அதாவது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவேகானந்தா சாலை மேம்பாலத்திற்கு திடீரென்று உயிர் வந்தது. அதற்குக் காரணம், நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்.

ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மேம்பாலப் பணி, அவசர அவசரமாக மீண்டும் தொடங்கப்பட்டதற்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடப்பதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முதல்வர் மம்தா பானர்ஜியின் அவசரம்தான் காரணம். ரயில்வே அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்டுள்ள, காலதாமதத்திற்காகத் தாற்காலிகமாக மேற்கு வங்க அரசால் தடைசெய்யப்பட்ட அந்த ஹைதராபாத் நிறுவனத்தை மேம்பாலத்தைக் கட்டும் பணியைத் தொடரச் சொன்னதேகூடக் கடும் விமர்சனத்தை எழுப்பியது.

விபத்து நடக்கும்போது நான்கில் மூன்று பகுதி வேலை முடிந்திருந்தது. 2.5 கி.மீ. நீளமுள்ள அந்த மேம்பாலத்தின் தொடக்கம் கட்டப்பட்டு முடிவு எங்கெல்லாம் என்பது நிர்ணயிக்கப்படாமல் பணி படுவேகமாக நடைபெற்றுவந்தது. வட கொல்கத்தாவின் குறுகிய வீதிகளும், ஜன நெரிசலும் உள்ள அந்தப் பகுதியில் பகல் நேரத்தில் பாலம் கட்டும் பணியை அனுமதித்திருக்கவே கூடாது. ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பாலம் கட்டும் பணியினால், எந்த அளவுக்குக் கட்டுமானம் பலவீனமடைந்திருக்கிறது என்பதைக்கூட உறுதி செய்யாமல், போக்குவரத்தையும், மக்கள் நடமாட்டத்தையும் தடை செய்யாமல் அதிகாரிகள் எப்படி வேலையைத் தொடர அனுமதித்தனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பல வழிப்போக்கர்கள் அந்தப் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி மடிந்ததும், வாகனங்களில் சிக்கிக் காயமடைந்ததும் அதிகாரிகள் கவனமாக இருந்து, போதுமான சோதனைக்குப் பிறகு கட்டுமானப் பணிக்கு அனுமதி அளித்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும். முதல்வரது உத்தரவால் எந்தவிதமான மேற்பார்வையோ, சோதனையோ இல்லாமல் அனுமதித்தார்களா அல்லது பணத்தைக் கையூட்டாகப் பெற்று அனுமதித்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால், எத்தனை உயிரிழப்பு... இதற்கு யார் பொறுப்பு?

இதெல்லாம் போதாதென்று, இந்த மேம்பாலப் பணி முந்தைய இடதுசாரி முன்னணி அரசின் காலத்தில் அனுமதிக்கப்பட்டது என்று பழியை திசைதிருப்ப முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வது போன்ற அரசியல் அநாகரிகம் வேறு எதுவும் இருக்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாலம் கட்டும் பணியை முடக்கி வைத்ததற்கும், திடீரென்று முடுக்கி விட்டதற்கும் காரணம் தெரிவிக்க வேண்டியவர் அவர்தானே ஒழிய முந்தைய இடதுசாரி முன்னணி அரசு அல்ல.

இது ஏதோ கொல்கத்தாவில் நடந்த விபத்து என்று கருதி நாம் ஒதுக்கிவிட முடியாது. இந்தியாவிலுள்ள எல்லா நகரங்களிலும் நடக்கும் கட்டுமானப் பணிகளிலும் இந்த ஆபத்து ஒளிந்துக் கொண்டிருக்கிறது. முறையான சிமெண்ட் கலவை இருக்கிறதா, தரமான கம்பி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யாமல் ஊழலில் திளைத்த அதிகாரிகள் அனுமதி வழங்கும் காலம் வரை இதுபோன்ற விபத்துகள் நடைபெறத்தான் செய்யும். அப்பாவி உயிர்கள் பலியாவதும் தொடரும். இதில் தொடர்புடைய அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் மட்டுமே, தரத்தில் சமரசம் செய்து கொள்ளும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதுதான் கொல்கத்தா விபத்து நமக்கு உணர்த்தும் பாடம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.