பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் உத்தரப் பிரதேசமும் தமிழகமும்தான் 12 நகரங்கள் இடம் பிடித்த மாநிலங்கள். தற்போது நடத்தப்பட்டு வரும் பொலிவுறு நகருக்கான ஆலோசனைக் கூட்டங்களில் இடம் பெறும் விவாதங்களைப் பார்க்கும்போது, இத்திட்டத்தை இவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்கின்ற சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
கொடுக்கப்படும் நிதியை அந்தந்த மாநகராட்சி தனது விருப்பம்போலச் செலவழிக்கலாம் என்றும், எல்லா வார்டுகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கலாம் என்பதுமான கருத்துதான் மாமன்ற உறுப்பினர்களிடம் காணப்படுகிறது. அந்தந்த நகர்வாழ் தன்னார்வ அமைப்புகளுக்கே இன்னும் இதில் தெளிவு இல்லை. அதிகாரிகளும்கூட "பொலிவுறு நகர்' திட்டம் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை.
திட்டத்தின் அடிப்படை நோக்கமே, "அந்த நகரின் குடிமகன் ஒவ்வொருவரும் இதில் தனக்கான ஒன்று இருக்கின்றது என்கிற உணர்வைப் பெற வேண்டும்' என்று சொல்கிறது மத்திய அரசு. ஆனால், மக்களுக்குப் புரியாத நிலையில், இந்த உணர்வை ஏற்படுத்துவது எப்படி, ஆலோசனை பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் நான்கு வகையான மாதிரிகளை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தந்துள்ளது. முதலாவதாக, நகரின் 500 ஏக்கருக்குக் குறையாத பரப்பில் விடுபட்டதைச் சரிசெய்தல் (Retrofitting); இரண்டாவதாக, 50 ஏக்கர் பரப்பளவில் மறுஆக்கம் செய்தல் (Redevelopment). இதற்கு உதாரணம், மும்பையில் பெண்டி பஜார் திட்டம் அல்லது தில்லியில் கிழக்கு கித்வாய் நகர் திட்டம்; மூன்றாவதாக, 250 ஏக்கர் பரப்பளவில் பசுமை நகரம் அமைத்தல் (Greenfield). இதற்கு உதாரணம், குஜராத் மாநிலத்தில் கிஃப்ட் சிட்டி. நான்காவதாக, நகரின் இன்றியமையாத் தேவைக்காகத் தெரிவு செய்த தீர்வுகளை அமல்படுத்துதல் (Pan-city development). இதற்கு உதாரணம், மெட்ரோ ரயில், நகரின் கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், சூரிய ஒளி மூலம் தடையற்ற மின்சாரம் வழங்குதல் போன்றவை. இந்த நான்கு வகைகளில் ஒன்றைத்தான் ஒரு நகரம் தேர்வு செய்ய முடியும். இது அந்தந்த நகரத்தின் தன்மையைப் பொருத்தது. முடிவைப் பொருத்தது.
இதில் முதல் இரு வகைகளில் மக்கள் பங்கேற்பு மிகமிக அவசியம். அவர்களது அனுமதி இல்லாமல் விடுபட்டதைச் சரிசெய்வதோ, மறுஆக்கமோ சாத்தியமே இல்லை. மேலும், இந்த வகைப்பாட்டில், நவீன தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே அப்பகுதியில் இருப்பினும்கூட, சாலைகளில் நடைபாதை வசதி மற்றும் மிதிவண்டிகளுக்குத் தனிப் பாதை, மழைநீர் மறுபயன்பாடு, கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களோடு, நகரின் மொத்த மின் தேவையில் 10% சூரியஒளி மூலம் கிடைக்கும் என்பதை உறுதி செய்வதாகவும் இந்த கருத்துரு அமைய வேண்டும்.
பசுமை நகரைப் பொருத்தவரை, அங்கே புதிதாக எல்லாவற்றையும் அமைக்க முடியும். அவை பகலில் மின் விளக்கு தேவையில்லாத அளவுக்கு வெளிச்சம் தரும் கட்டடங்களாக வடிவமைக்கப்படுதல் அவசியம். அவை நவீன தொலைத்தொடர்பு வசதிகளைக் கொண்டிருப்பதால், இணையம் மூலம் அரசு நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) நடத்தப்படும். இங்கு கட்டப்படும் வீடுகளில் 15% ஏழைகளின் சக்திக்கேற்ற விலையில் கட்டித் தரப்பட வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சென்னையில் 67 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அடுத்ததாக, சுமார் 16 லட்சம் பேர் வசிக்கும் நகரங்கள் மதுரை, கோயமுத்தூர். மூன்றாவதாக, திருப்பூர், சேலம், திருச்சி ஆகியன ஒன்பது லட்சம் மக்கள் தொகை கொண்டவை. மற்ற நகரங்கள் அனைத்தும் நான்கு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டவை.
ஆகவே, குறைந்த மக்கள்தொகை உள்ள வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகள் எடுத்த எடுப்பிலேயே பசுமைநகர் அமைக்கும் கருத்துருவை அளிக்கலாம். சென்னை நகரம் தெரிவு செய்யப்பட்ட தீர்வுகளையும், மற்ற நகரங்கள் மக்கள் பங்கேற்புடன் மறுஆக்கம் அல்லது விடுபட்டதைச் சரிசெய்தல் வகைப்பாட்டில் கருத்துரு தயாரித்து பயன்பெறலாம்.
ஒரு மாதத்துக்கு முன்பு, தில்லியில் பொலிவுறு நகர் குறித்த கருத்தரங்கில் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனங்களுக்கு திட்டம் குறித்து விரிவாக விளக்கிக் கூறப்பட்டது. இவர்கள்தான் தற்போது மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்கள். இவர்கள் தொழில்நுட்ப ஆலோசனை மட்டுமே வழங்குவார்கள். நம் நகரம் எத்தன்மையது, நமது தேவை என்ன என்பதை மாநகராட்சிகள்தான் தீர்மானிக்க வேண்டும்.
துல்லியமான திட்டங்களுடன், சாத்தியமாகும் என்கிற நம்பகத்தன்மையுடன் அளிக்கப்படும் 20 கருத்துருக்கள் மட்டுமே முதல் கட்டமாக ஏற்கப்படவுள்ளன. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தத் தவறினால் பட்டியலில் 12 நகரங்களைப் பெற்றிருந்தாலும்கூட, அமலாக்கத்தில் நாம் பின்தங்கிவிடுவோம்.
ஆகவே, மக்கள்தொகை எவ்வளவு? நம் நகரின் தேவை என்ன? என்பதை உணர்ந்து அதற்கேற்ற திட்டங்களை அளித்தால் மட்டுமே தேர்வு செய்யப்படும் முதல் 20 நகரங்களில் தமிழகத்தின் நகரங்கள் குறைந்தபட்சம் நான்காகிலும் இருக்கும்.
தொழில்நுட்ப ஆலோசகர்கள், பொதுநல ஆர்வலர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி முழுமையாகப் பயன்படுத்தி தமிழகத்தைப் பொலிவுறச் செய்யலாம் என்பதை விவாதித்து முடிவு செய்ய வேண்டும். முன்னிலைப்படுத்த வேண்டிய ஒரே கருத்து: "நகருக்கு எது தேவை?' என்பது மட்டுமே. இல்லாவிடில் கருத்துரு தேர்வாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

