சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் பரிமாறிக்கொள்ளும் தகவல்களுக்குக் கட்டுப்பாடா? என்ற பெருந்திரள் எதிர்ப்பு காரணமாக, தேசிய தரவுப்பூட்டுக் கொள்கை வரைவு (NATIONAL ENCRYPTION POLICY DRAFT) திட்டத்தையே மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டது. இந்த வரைவுத் திட்டம் மறுஆய்வுக்கு உள்படுத்திய பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்த வரைவுத் திட்டத்தின் சில பகுதிகள் தவறான கருத்தாக்கத்தை மக்களிடையே உருவாக்கிவிட்டன என்று கூறிய அவர், சமூக வலைதளங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பதை உறுதி செய்து, இந்த தரவுப்பூட்டுக் கொள்கையின் அவசியம் குறித்தும் அவர் பேசியிருக்க வேண்டும். ஏனெனில், இந்த தரவுப்பூட்டு கொள்கை என்பது இன்றைய இணைய வணிகத்தின் மிக முக்கியமான அம்சம். இதற்கான பொது விதிமுறைகள் விரைந்து உருவாக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதைச் சரியான முறையில் விளக்காமல், அவசரக் கோலத்தில் தேசிய தரவுப்பூட்டுக் கொள்கை வரைவை வெளியிட்டது அரசுத் தரப்பு செய்த தவறு.
ஊடகங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், சில தன்னார்வ அமைப்புகளும்தான் இந்த விவகாரத்தில் மிகப்பெரும் குரல் கொடுத்தன. நரேந்திர மோடி அரசு என்ன செய்தாலும் அதை எதிர்ப்பது, அதற்குக் களங்கம் கற்பிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போக்கு பல நல்ல முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது மிகப்பெரிய அவலம்.
சமூக வலைதளங்களில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (பேஸ்புக்) ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு முயல்கிறது என்றும், 90 நாள்களுக்குத் தகவல்களை அழிக்காமல் வைத்திருக்கக் கட்டாயப்படுத்துவதோடு, அரசு கேட்டால் அவற்றைக் காட்ட வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்றும், இதனால் தனி மனிதச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இவர்கள் குறிப்பிட்டவை எல்லாம் உண்மை. ஆனால், அரசு சொல்வது "பூட்டப்பட்ட தரவுகள்'. சாதாரண தகவல்களை அல்ல என்கிற உண்மையை யாரும் உணரவோ, எடுத்துரைக்கவோ தயாராக இல்லை. காரணம், நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்படும் உத்தேசச் சட்டம் என்பதுதான்.
"...அனைத்து குடிமக்களும், அரசு / வணிகம் சார்ந்த அலுவல் அல்லாத, தனிப்பட்டு செயல்படும் நபர்கள் உள்பட அனைவரும், தரவுப்பூட்டுள்ள தகவல்களுக்கு (ENCRYPTED INFORMATION) இணையான சாதாரணத் தகவல் பதிவை, இவை பரிமாற்றம் செய்யப்பட்ட 90 நாள்கள் வரை சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்திய சட்ட முறைப்படி சட்ட அமலாக்கப் பிரிவினர் கேட்கிறபோது தரவுப்பூட்டுள்ள தகவல்களுக்கு இணையான சாதாரணப் பதிவை அளிக்க வேண்டும்'' என்றுதான் இந்த வரைவு குறிப்பிடுகிறது. இன்றைய கட்செவி அஞ்சல், முகநூல் ஆகியவற்றில் எல்லாரும் சாதாரண தகவல்களைத்தான் பரிமாறிக்கொள்கிறார்கள். பூட்டப்பட்ட தரவுகளை அல்ல.
இருப்பினும், எல்லா ஊடகங்களும், சமூக வலைதளங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் சாதாரண தகவல்களை 90 நாள்களுக்கு அழிக்காமல் வைத்திருக்க வேண்டும் என்பதாகத்தான் எழுதின, பேசின. எத்தனை பேர் தரவுப்பூட்டுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி பேசவில்லை. இன்று 30 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துவோராக இருந்தாலும்கூட, தங்கள் சாதாரண தகவல் பதிவுக்கு, தரவுப்பூட்டு போடும் செய்முறை அறிந்தவர்கள் மிக அரிதாகவே இருப்பார்கள்.
இன்று இணையத்தின் மூலம் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யும்போது, கணக்காயர்கள் இணையத்தில் அனுப்பும் நிறைவடைந்த படிவங்கள் யாவும் தரவுப்பூட்டுடன் அனுப்பப்படுகின்றன. அதற்கான கடவுச்சொல் இல்லாமல் அதைத் திறந்து பார்க்க இயலாது. விலக்கிக்கொள்ளப்பட்ட தரவுப்பூட்டுக் கொள்கை வரைவின் பெரும்பகுதி, நிறுவனங்களின் போக்குகளைக் கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை.
தரவுப்பூட்டுத் தொழில்நுட்ப சேவை வழங்குவோர் இந்திய அரசிடம் பதிவு பெற வேண்டும். தரவுப்பூட்டு எந்த அளவுக்கு பெரிதாக, வலுவானதாக இருக்கலாம் என்பதை அரசு தீர்மானிக்கும். அரசுக்குக் கட்டுப்பட்டே இந்நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பும் தரவுப்பூட்டு ஆவணங்களின் சாதாரணத் தகவல்பதிவைக்கூட அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்களே தவிர சாமானியர்கள் அல்லர்.
நள்ளிரவில் இரண்டு பேர் நடந்து போகிறபோது, காவல் துறையினர் நிறுத்தி விசாரிக்கிறார்கள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்கிறார்கள். இதைக் காவல் துறையின் அத்துமீறலாகப் பார்க்க முடியுமா? அதுபோலத்தான் இதுவும்.
தரவுப்பூட்டுள்ள ஆவணங்களுக்கு மட்டும்தான் அதன் சாதாரணப் பதிவை 90 நாள்கள் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை. மக்கள் இதைப் புரிந்துகொள்ளும் முன்பாகவே, புரிந்து கருத்து தெரிவிக்கும் முன்பாகவே பிகார் தேர்தலைக் கருதி அரசு இந்த வரைவை விலக்கிக்கொண்டுவிட்டது. மக்கள் அச்சப்படும் பகுதி குறித்து அரசு விரிவான விளக்கம் அளித்திருக்க வேண்டுமேயொழிய, எதிர்ப்பு வந்த அடுத்த நாளே அதை விலக்கிக்கொண்டிருக்கக் கூடாது. எதிர்ப்பை எதிர்கொண்டு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக நரேந்திர மோடி அரசு பின்வாங்கியதும், வரைவை விலக்கிக் கொண்டதும் தவறு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

