கேரள மாநிலம், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதால் ஏற்படக் கூடிய "சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு'க்கு அனுமதி அளித்திருந்த தேசிய கானுயிர் வாரியம், தற்போது அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. "இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அனுமதி திரும்பப் பெறப்படுகிறது' என்று கானுயிர் வாரியம் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறது.
அப்படியானால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதோ, இதுதொடர்பாக தமிழ்நாடும், கேரளமும் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கின்றன என்பதோ கானுயிர் வாரியத்துக்குத் தெரியாது என்று அர்த்தமல்ல. தேசிய கானுயிர் வாரியத்தின் அதிகாரிகள் கேரளத்துக்கு ஆதரவானவர்கள் என்பதால் வழங்கப்பட்ட அனுமதி தற்போது திரும்பப் பெறப்படுவது வாரியத்தின் திடீர் ஞானோதயத்தால் விளைந்ததும் அல்ல.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் சமர்ப்பித்திருந்த திட்டத்தைக் கருத்துரு நிலையில் ஏற்கவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துவிட்டது. இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்த காரணங்கள் மூன்று:
முதலாவதாக, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2014, மே 7-இல் வழங்கிய தீர்ப்பில், புதிய அணை தொடர்பாக கருத்து மாறுபாடு தொடருமெனில் இரு மாநிலங்களும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, மத்திய உள்துறைச் செயலருக்கு எதிராக தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. மூன்றாவதாக, தேசிய கானுயிர் வாரியம் கேரள அரசுக்கு வழங்கிய, புதிய அணை கட்டுவதன் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு 2015 மே 12-இல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, கேரள அரசின் திட்டத்தை ஏற்க முடியாது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெளிவுபடக் கூறியது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குறிப்பிட்டுள்ள முதல் இரண்டு வழக்கு விவகாரங்கள் குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா என்று உச்ச நீதிமன்றம் தங்களைக் கேள்வி கேட்கும், கண்டனம் தெரிவிக்கும்; அது மிகப் பெரிய அவமானம் என்பது மட்டுமல்ல, கேரளத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது அம்பலப்பட்டுவிடும் என்ற எண்ணத்தால்தான் இப்போது, அவசர அவசரமாகக் கானுயிர் வாரியம் தனது அனுமதியை விலக்கிக் கொள்கிறது.
கானுயிர் வாரியத்தின் அனுமதி தேவைதான். ஓர் அணை கட்டப்படும்போது, அந்த அணை எந்த அளவுக்கு நீரைத் தேக்கி வைக்கும், அதனால் மூழ்கப் போகும் வனப் பகுதி எவ்வளவு, அதன் காரணமாக இடம்பெயரும் கானுயிர்கள் எவையெவை, அவற்றின் வாழிடம், வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகமிக அவசியம். இதற்குத்தான் தேசிய கானுயிர் வாரியம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு எடுக்கும் முன்பாகவே, ஓர் ஆய்வுக்கான அனுமதியை வழங்க இவர்கள் அதிகாரம் பெறுவது எப்படி?
கானுயிர் வாரியத்தின் செயல்பாட்டினை இத்தோடு விட்டுவிடுவது சரியல்ல. இரு மாநில மக்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான விவகாரத்தில் இவ்வாறு பொறுப்பில்லாமல் அனுமதி வழங்குவதும் பிறகு வேறு பிரச்னைகள் வரும் என்கின்றபோது விலக்கிக் கொள்வதுமான போக்கு அபாயகரமானது. இத்தகைய அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும்.
இது முல்லைப் பெரியாறு விவகாரத்துடன் முடிவதில்லை. இதே நாடகம் தற்போது மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தைப் போலவே, கர்நாடகமும் மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்கிறது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எந்தவோர் அனுமதியையும் இதுவரை பெறவில்லை. ஆனாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மதிப்பீடு ஆய்வுக்கு அனுமதி கிடைத்துவிட்டதாகவும், அதற்காக ரூ.25 கோடியை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவிக்கிறது கர்நாடக அரசு.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் போலவே, மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும் நீதிமன்ற வழக்குகள் உள்ளன. அப்படியிருக்கும்போது இவர்கள் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டைச் செய்வார்கள்? ஏன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்? வெறும் அரசியல் நடத்தி, இரு மாநில மக்களின் மனதில் பீதியையும் வெறுப்பையும் வளர்க்கிறார்கள் கேரள, கர்நாடக அரசியல்வாதிகள்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை அல்லது மேக்கேதாட்டு அணை எதுவாக இருந்தாலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவான ஆணை அல்லது அனுமதி வழங்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அரசின் பிற துறைகள் எவையும் எந்தவோர் அனுமதியும் வழங்கக் கூடாது, மீறினால் அது இரு மாநில மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்த குற்றத்துக்காகத் தண்டனை பெற நேரிடும் என்ற நிலைமை உருவாக வேண்டும்.
தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் இல்லாததால்தான், தமிழகத்தின் காய்கறிகளில் நச்சு என்று கூச்சமே இல்லாமல் கேரளத்தால் பொய் சொல்ல முடிகிறது. அணை கட்டியே தீருவோம் என்று இரு மாநிலங்களாலும் சவால் விட முடிகிறது.
இதுபோன்ற தேசியப் பிரச்னைகளில் அரசியலை அகற்றி நிறுத்தும் பக்குவம் நமது அரசியல் கட்சிகளுக்கு வந்தால் மட்டும்தான் நிரந்தரத் தீர்வு ஏற்படும். இதை யார், எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் மற்றொரு இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?

தில்லி பேட்டிங்; பஞ்சாப் பந்துவீச்சு: 2 அணிகளிலும் மாற்றமில்லை!

சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கிய ஈரான்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

